ஏற்கனவே சத்யராஜ் நடிப்பில் பிரதாப் போத்தன் இயக்கி இதே பெயரில் ஒரு திரைப்படம் வந்திருந்தது.
இப்போது அதே பெயரில் மீண்டும் ஒன்று வந்திருக்கிறது.
இப்படத்தில் விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, ஜாவா சுந்தரேசன், ஜெயபிரகாஷ், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இதில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவரே இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
சென்னையில் வசிக்கும் விஷால் ஒரு மெடிக்கல் ரெப்பாக இருக்கிறார். மாதச் சம்பளம் ₹17,500. மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்குக் கார் வாங்க வேண்டும் என்பது ஒரு ஆசை. எதற்காக கார் வாங்க வேண்டும் என்றால், திருமணத்தின்போதே “எனக்குச் சொந்தமாகக் கார் இருக்கிறது” என்று சொல்லி மாமனார் தம்பி ராமையாவை இவர் ஏமாற்றி இருப்பார்.
எனவே, எப்படியாவது ஒரு காரை வாங்கியே தீர வேண்டும் என்று ஒவ்வொரு ஷோரூமாகப் போய்த் தேடுகிறார்கள்; இவரது பட்ஜெட்டுக்குக் கார் அமையவில்லை.
கடைசியாக செகண்ட் ஹேண்டில் ஒரு பி.எம்.டபிள்யூ.(BMW) கார் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொண்டு ஊட்டிக்குப் பயணமாகிறார்கள்.
அப்போது, அந்தக் காரின் முன்னாள் உரிமையாளரான சேரா என்கிற மிகப் பெரிய டானைக் கொலை செய்வதற்காக வந்த ஒரு கும்பல் இவர்களைப் பின் தொடர்கிறது.
ஓரிடத்தில் இவர்களை அடையாளம் காணும் டான்களின் டீம் விஷாலைப் பார்த்துவிட்டு அவர் ஒரு மிகப் பெரிய ஆள் என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அவரிடம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வருகிறது (ஆனால் அதை நமக்கு ஆரம்பத்தில் சொல்லவில்லை).
அந்த நேரத்தில் சுமார் 50 பேர் சூழ்ந்து நின்று, ஏகே-47 ரகத் துப்பாக்கிகளால் அந்தக் காரைச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
அந்தத் தாக்குதலில் விஷாலின் மனைவியும் மகளும் இறந்துபோக, மகனுடன் விஷால் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.
அவரது ஓட்டம் முடிந்ததா? அவரை ஏன் துரத்துகிறார்கள்? இவருக்கும் அவர்களுக்குமான தொடர்பு என்ன? என்பதை படத்தின் இரண்டாம் பாதியில் விவரிக்கிறார்கள்.
இவரது தந்தையான மற்றொரு விஷால், சிறு வயதிலேயே ஊரை விட்டு ஓடிவந்து விசாகப்பட்டினத்தில் தஞ்சமடைகிறார்.
அவரும் நண்பர்களும் சேர்ந்து துறைமுகப் பகுதியில் சிறுகச் சிறுக வேலை செய்து, கடைசியாக விசாகப்பட்டினம் துறைமுகத்தின் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலையே கட்டுப்படுத்தும் அளவுக்கு ஒரு பெரிய ரௌடியாக மாறுகிறார்.
அவரைப் பழிவாங்க நினைத்த வில்லன் கும்பல் அவரது அம்மாவான அஞ்சலியைக் கொலை செய்கிறது.
அப்போது உடன் இருக்கும் மகன் விஷால், “அப்பாவால்தான் அம்மா இறந்தார்” என்று கோபப்பட்டு அவரை விட்டுப் பிரிந்து சென்னைக்கு வந்து மெடிக்கல் ரெப்பாக மாறுகிறார்.
தற்போது அப்பா தன் மகனைத் திரும்ப அழைக்க, மகனோ வர மறுக்கிறார். “உன்னால்தான் என் மனைவியும் மகளும் இறந்தார்கள்” என்று சொல்லி விலகுகிறார்.
மற்றொரு புறம், அப்பாவையும் மகனையும் காலி செய்ய எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்தத் தாக்குதலில் இருந்து அப்பாவும் மகனும் தப்பித்தார்களா..? இல்லையா?.. என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விஷால் கமர்ஷியல் படங்களின் ஆக்ஷன் காட்சிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
துஷாரா விஜயன் தனக்குக் கொடுக்கப்பட்ட குடும்பத் தலைவி கதாபாத்திரத்தை இயல்பாகச் செய்துள்ளார்.
அஞ்சலி தனது வழக்கமான திமிரான, துடிப்பான நடிப்பால் இரண்டாம் பாதியைத் தாங்கிப் பிடிக்கிறார்.
ஜான் விஜய் மற்றும் ஜெயபிரகாஷ் நண்பர்களாகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
அப்பா விஷால் அறிமுகமாகும் சுமார் 10–15 நிமிடக் காட்சி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒட்டு மொத்தத் திரைக்கதையில் போதிய சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இல்லை.
படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பது மிகப் பெரிய பலவீனம். தேவையற்ற காட்சிகளை நீக்கி 2 மணி நேரம் 25 நிமிடங்களாகச் சுருக்கியிருக்கலாம்.
ஒளிப்பதிவு வீடுகள் மற்றும் வெளிப்புறக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், பின்னணி இசை காதைப் பிளக்கும் வகையில் மிக இரைச்சலாக இருக்கிறது.
விஷால் இயக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘மகுடம்’ ஒரு முறை பார்க்கக் கூடிய வழக்கமான கமர்ஷியல் திரைப்படம்..!
RATING : 3 / 5









