Starring – Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others.
Written and Directed by – Chella Ayyavu
Produced by Vels Film International, Vishnuu Vishal Studioz.
Producers : Dr Ishari K Ganesh & Vishnuu Vishal
Co- Producers : Shubhra, Aryan Ramesh & Ishan Saksena
Music : Sean Roldan
DOP : KM Bhaskaran
Editor : Barath Vikraman
Art Director : Jayachandran
Costume designer : Ruchi Munoth
Subtitles – Sajid Ali
Publicity Designer : Viyaki
Marketing and Promotions : Siddarth Srinivas
Executive Producer : Seetharam
Creative Producer : Shravanthi Sainath
PRO – Sathish (AIM)
2022-ம் ஆண்டில் வெளியான ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் அப்படத்தில் நாயகனாக நடித்திருந்த விஷ்ணு விஷாலுக்கும், நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கும் மிகப் பெரிய பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
மனைவிகள் வீட்டில்தான் இருக்க வேண்டும். கணவன் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.. என்ற ஒரு ஆணாதிக்க மனப்பான்மையில் இருந்த ஒரு குடும்பத்தில் படிக்காத பாமரனாக இருந்த விஷ்ணு விஷால், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார்.
மனைவிகள் அடுப்பங்கரையிலேயே இருக்க வேண்டும் என்ற நினைக்கும் உறவினர்களை வைத்துக்கொண்டு அதற்கு நேர்மாறான கொள்கை உடைய ஐஸ்வர்யா லட்சுமி அவர்களை சமாளிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவருக்குள் இருந்த மல்யுத்த வீராங்கனை என்ற வீரத்தை அவர் காட்டிய பின்பு படத்தை ரசிகர்களை கொண்டாடினார்கள்.
தன் மனைவி மல்யுத்த வீராங்கனை என்பதை அறிந்த கணவர் விஷ்ணு விஷால், உறவுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, அவரைப் போட்டிகளில் பங்கெடுக்கும்படி சொல்லி தன் மனைவி பரிசுகள் பெறுவதைப் பார்த்து பரவசமடைகிறார். அப்படி ஒரு சந்தோஷ நிகழ்வில்தான் இந்தப் படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது.
இப்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் செல்லா அய்யாவு தன்னுடைய தனி திறமையால் உருவாக்கியிருந்த திரைக்கதையிலும், அழுத்தமான இயக்கத்தினாலும் மிக அழகாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்
இப்பொழுது ஐஸ்வர்யா லட்சுமி விளையாட்டு வீரர்கள் போட்டாவில் ரயில்வே துறையில் வேலை கிடைத்து வேலை பார்த்து வருகிறார். விஷ்ணு விஷாலோ ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக இருக்கிறார். இவர்களுக்கு முதல் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
காலையில் ஐஸ்வர்யா லட்சுமி அலுவலகத்திற்கு கிளம்பும் பொழுது விஷ்ணு விஷால் சமையல் செய்து மனைவிக்குக் கொடுத்துவிட்டு, தன்னுடைய பிள்ளையையும் பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு மறுபடியும் சாயந்தரம் அழைத்து வரும் அளவிற்கு ஒரு ஹவுஸ் வைஃப் என்று செய்தாரோ, அதையே ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக செய்து கொண்டிருக்கிறார்.
தொடர்ச்சியாக ஏழு வருடங்களாக ஐஸ்வர்யா லட்சுமி தமிழகத்தின் வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் அவருக்கு பிராக்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்த கோச்சான ஜாராவுக்கும் பெருமையாக இருக்கிறது.
ஆனால் ஐஸ்வர்யா லட்சுமி ஒரு பாராட்டு விழாவில் தன்னுடைய வெற்றிகளுக்கு காரணம் தன் கணவர் மட்டும்தான் என்று சொல்லிவிட கோச்சுக்கு முதன்முறையாக ஐஸ்வர்யா மீது கோபம் எழுகிறது.
இந்தக் கோபத்தின் விளைவாக ஐஸ்வர்யாவுக்குப் பதிலாக வேறு யாரையாவது மேலே கொண்டு வர வேண்டும். ஐஸ்வர்யாவை தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார் கோச்.
இன்னொரு பக்கம் விஷ்ணு விஷால் தற்போது குடியிருப்பில் இருக்கும் பெண்களிடம் ரொம்பவே நல்ல பெயர் எடுத்து இருக்கிறார். இதில் அவருடைய எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் தன் மனைவிக்கு பிராக்கெட் போட்டு விஷ்ணு விஷால் அழைத்துச் சென்று விடுவாரோ என்று சந்தேகப்படுகிறார். இவரின் சந்தேகத்தாலும், குடியிருப்பில் இருக்கும் சக பெண்களின் கணவர்களின் கடும் எதிர்ப்பினாலும் நிறைய வெறுப்புணர்வை சம்பாதிக்கிறார் விஷ்ணு விஷால்.
தென்னிந்திய விளையாட்டு விழாவில் இந்த முறை ஐஸ்வர்யாவும் பங்கேற்றால் அவர் எட்டாவது தடவையாக சாம்பியன் ஆவார் என்பதை தொடர்ந்த கோச் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக ஐஸ்வர்யாவை வீழ்த்த திட்டமிடுகிறார்.
இதற்கிடையில் விஷ்ணு விஷால் தன் மனைவி இப்போதெல்லாம் அதிகமாகக் கோபப்படுகிறார். அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கிறார்.
இந்த நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கோச், விஷ்ணு விஷாலிடம் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர் மூலமாகக் “ஐஸ்வர்யா நிறைய ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கிறார். அவரது ஸ்ட்ரஸிலிருந்து அவரை காப்பாற்ற வேண்டுமெனில் இந்த மருந்தை அவரது சாப்பாட்டில் கலந்து கொடுங்கள்” என்று அந்த மருத்துவரை சொல்ல வைக்கிறார் கோச்.
தென்னிந்திய போட்டிகள் நடக்கும்போது முதல் ரவுண்டிலேயே இரண்டாவது இடத்தில் இருந்த பெண்ணிடம் தோல்வி அடைகிறார் ஐஸ்வர்யா. அப்போதுதான் கூடவே அவருடைய உடலில் போதை மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இதை அடுத்து அவர் ஒரு வருடத்திற்கு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று அகில இந்திய மல்யுத்த சங்கம் அறிவிக்கிறது.
இது எதுவுமே தெரியாமல் விஷ்ணு விஷால் தனக்கு தெரிந்த சமையல் திறமையை ஒரு டிவியில் நடக்கும் சமையல் கலை நிபுணர்கள் போட்டியில் காட்டி ஜெயிக்கிறார்.
இதை நேரலையில் பார்க்கும் ஐஸ்வர்யா தன்னுடைய வளர்ச்சி கண்டு பொறுக்காமல் தன் கணவன் தன்னை சிக்கலில் சிக்க வைத்து விட்டதாக நினைக்கிறார், இது தொடர்பான சண்டை வீட்டில் பெரிதாகும்போது இனிமேல் டைவர்ஸ்தான் என்று சொல்லி மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தன் ஊரான பாலக்காட்டுக்கு சென்று விடுகிறார்
இதற்கு மேல் விஷ்ணு விஷால் என்ன செய்தார்? டைவர்ஸ் கிடைத்ததா இல்லையா… மறுபடியும் தம்பதியினர் ஒன்று சேர்த்தார்களா.. என்ன நடந்தது… என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.
படத்தில் அனைவரையும் பந்தாடியிருப்பது ஹீரோயின் ஐஸ்வர்யாதான். அவருடைய நடிப்பினால்தான் முதல் பாகம் வெற்றி பெற்றது. இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றியையும் அவர் மீதே சுமத்தியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
கேரளாவுக்கே உரித்தான மலையாளிகளின் முகம்,, உடல் அமைப்பு, கூடவே அசாத்தியமான நடிப்பு… இது அத்தனையையும் தாங்கி இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இந்தப் படம் பல விருதுகளை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
பள்ளியில் குழந்தையின் கிளாஸ் டீச்சராக வரும் மோக்க்ஷாவை பார்த்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு வரும் அந்த பொறாமை நடிப்பு அந்த காட்சியின் கனத்தை கூட்டி இருக்கிறது. அதோடு தன் மகள் அப்பாவிடம் காட்டுகின்றன பாசத்தையும், நட்பையும், நேசத்தையும், பொறாமையால் பார்ப்பது.
விஷ்ணு விஷாலின் அறியாமையை நினைத்து திட்டுவது.. மனைவி மாதிரி மோக்ஷாவை அழைத்துப் போனதைப் பார்த்தவுடன் அவருக்கு வருகின்ற கோபத்தையெல்லாம் கணவர் மீது காட்டும்போது நடிப்பில் ரசிக்க வைக்கிறார். அந்த ஏரிமலை பேச்சு அட்டகாசம்.. கூடவே, நடிப்பையும் 200 சதவீதம் கொடுத்து இருக்கிறார்.
நடக்கும் சண்டைகள், பேச்சுக்கள், நீதிமன்றத்தில் நடக்கும் காரசார விவாதங்கள் என்ற அத்தனையிலும் ஐஸ்வர்யா லட்சுமி காணாமல் போய் அந்த மல்யுத்த வீராங்கனைதான் நம் கண்களுக்குத் தெரிகிறார்.
புருஷன் பொண்டாட்டிக்குள் நடக்கும் மல்யுத்தத்தில் விளையாட்டு வித்தையை வைத்து ஜெயிக்க முடியாது என்பதை உணரும் ஹீரோ, கணவன் என்ற உரிமையை பயன்படுத்தி மல்யுத்த களத்தை படுக்கை அறையாக மாற்றி முத்தங்களாக கொடுத்து அவரை தவிக்க விடுவதும்.. அந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத அந்த இன்ப அதிர்ச்சியை ஐஸ்வர்யா காட்டும்பொழுது சிரிப்பு சிரிப்பாக சிரித்தோம்.
ஹீரோவாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இந்த முறையும் ஜெயித்துவிட்டார். தான் ஒரு மிகப் பெரிய ஹீரோ என்பதை எல்லாம் மனதில் கொள்ளாமல் ஓடக் கூடிய படங்களில் கதையில் நாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த படத்தை அவரை தயாரித்தும் இருக்கிறார். இதற்காகவே அவரை நாம் மனதார பாராட்டுகிறோம்.
குழந்தை மீது அதீத பாசத்தை வைத்திருக்கும் விஷ்ணு விஷால், தனக்கு தெரிந்தது சமையல் கலை என்பதை எல்லோருக்கும் செய்து காட்டி ஒரு பாராட்டு கிடைக்காதா என்று ஏங்குகின்ற அந்த குணம்… இவர் சாதாரண ஹீரோ அல்ல.. கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் ஹீரோ என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.
மனைவிக்கு பின்னால் இருந்து அவரை அவரது துறையில் மென்மேலும் வளர்க்க முட்டுக் கொடுக்கும் ஹஸ்பண்ட் அறியாமையால் மனைவிக்கு செய்யவும் துரோகத்தின் விரைவாக குடும்பத்தை பிரிந்து அவர் தவிக்கின்ற காட்சிகள் எல்லாம் ஐயோ பாவம் என்று சொல்ல வைக்கிறது.
இடைவேளைக்கு பின்பு ஆணாதிக்கத்தின் அடையாளமாக இருக்கும் கருணாஸ் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மனைவியின் ஆதிக்கத்திற்கு வருவதை காட்டுகின்ற பொழுதெல்லாம் தியேட்டரில் சிரிப்பு மழை பொழிகிறது. அந்த அளவுக்கு கருணாசும், அவர் மனைவியாக நடித்த லிசி ஆண்டனியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மனைவியை நினைத்து சந்தேகப்படும் கேரக்டரில் நடித்திருக்கும் கருணாகாரன் காமெடிக்கு விதை போட்டு இருக்கிறார். ஆனாலும் இந்தக் காலத்தில் மனைவி ஓடிப் போவாளோ? என்று நினைக்கும் கருணாகரனின் கேரக்டர் கொஞ்சம் ஓவர்தான்.
இடைவெளிக்கு பின்பு நீதிபதி ராஜேஸ்வரியாக அறிமுகமாகும் ரம்யா கிருஷ்ணன் அடுத்த அரை மணி நேரத்திற்கு தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும், பதிலுக்கும் கவுண்ட்டர் பதிலைக் கொடுத்து அனைவரையும் வாயை மூட வைக்கும் ரம்யா கிருஷ்ணனின் நீதிபதி கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யாவின் மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அவரே கதையை மாற்றி விடுகிறார். ஆனாலும், பேச்சுக்கள் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக அமைந்திருக்கிறது.
மேலும் முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஐஸ்வர்யாவின் அம்மாவாக நடித்த ஜாரவி, பாட்டி, அப்பாவாக நடித்த கஜபதி மற்றும் உறவுகளாக நடித்தவர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
‘முந்தானை முடிச்சு’ தீபா மாதிரியான கேரக்டரில் தோற்றத்திலும், உடையிலும், சிக்கனத்தோடு நடித்திருக்கும் மோக்சா நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார்
அதே சமயம் ‘போடு போடு அப்படி போடு’ பாடல் காட்சியில் மொத்தக் குடும்பமும் ஆடுகின்ற ஆட்டம் சில நிமிடங்கள்வரை தியேட்டர்களை குலுங்க, குலுங்க சிரிக்க வைத்தது.
காளி வெங்கட்டின் கோபம்தான் இந்தப் பிரச்சனை இன்னும் தீவிரமாக்கி, கோர்ட்டுவரைக்கும் கொண்டு வந்து நிறுத்துகிறது. வழக்கறிஞருக்கு கேஸ் கிடைக்க வேண்டுமே என்பதற்காக இப்படி எல்லாம்கூட செய்வார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
ஒளிப்பதிவாளர் பாஸ்கரனின் ஒளிப்பதிவு தரமானது. முதல் கட்சியிலிருந்து கடைசிவரையிலும் பட பதிவு ஒன்று போலவே இருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையும் அழகு. அவருடைய பாடல்களும் சிறப்பு. ‘சம்பவக்காரி’ பாடலும், காட்சிகளும் அழகு. பாடல் காட்சிகளிலேயே கொஞ்சம் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
‘போடு போடு அப்படி போடு’ பாடலுக்கான நடனத்தில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் நடன இயக்குநர். அவ்வளவு அழகான நடனம். கூடவே கதையிலும் அது பங்கெடுத்திருக்கிறது என்பதால் இந்தக் காட்சிக்கான பாடலாக இதைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
சண்டை இயக்குநரையும் பாராட்ட வேண்டும். கணவன், மனைவி இருவரும் சண்டையிடும்பொழுது எப்படி எல்லாம் ஒரு சங்கடமும் தயக்கமும் இருக்குமோ அதையெல்லாம் வைத்து ஆரம்பித்து கடைசியில் அதை ஒரு காதலர்களின் முத்தப் போராக மாற்றிவிட்டார். அந்த வகையில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை வெகுவாக ரசிக்க முடிகிறது.
முதல் பாகம் போலவே ஒரு குடும்ப திரைப்படத்தில் பெண்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும். அவருடைய விருப்பத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு செல்வது போல படத்தை முடித்து இருந்தார் இயக்குநர்.
இந்த இரண்டாம் பாகத்திலும் அதேபோல எவ்வளவு நல்லவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு கெட்டவன் இருப்பான் என்பதுபோல அந்த கோச்சை முன் வைத்து இந்தப் படத்தின் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். குடும்ப நல நீதிமன்றத்திலும் காமெடிகளை வைத்து விசாரணை காட்சிகளை ரசித்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். அவருடைய இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள். ஒரு சாதாரண காட்சியியையே சிச்சுவேஷன் காமெடியாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.
பெண்களை பொதுவாக வீக்கர் செக்ஸ் என்பார்கள். அதை நிரூபிப்பதுபோல கிளைமாக்ஸ் சண்டையின்போது கணவர் விஷ்ணு மனைவி ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கின்ற தீராத முத்தங்கள் அதைத்தான் உணர்த்துகின்றன. காமெடி படத்திற்கு ஓகே.. ஆனால் சீரியஸாக கொண்டு போன காட்சியில் இப்படி ஒரு திசை திருப்பலை போட்டு ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படம் முதல் பாகம் போலவே நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு தரமான திரைப்படம் இது.
அவசியம் குடும்பத்துடன் பாருங்கள்.
RATING : 4 / 5









