‘புஷ்பா’ படத்தின் பாதிப்பில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். படம் ‘புஷ்பா’வையும் மிஞ்சியதா அல்லது தொட்டதா என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு, கேரளா எல்லையில் இருக்கும் ‘ஆன்கோல்’ என்ற ஒரு சிறிய காட்டுப் பகுதிதான் இந்தப் படத்தின் கதை களம்.
இப்பொழுதும் யானை தந்தத்திற்கு உலகம் முழுவதுமே மிகப் பெரிய வியாபாரமும் இருக்கிறது. மார்க்கெட்டும் இருக்கிறது. இதனாலேயே அவ்வப்பொழுது கேரளா காடுகள், தமிழகத்தின் காடுகள், கர்நாடகா, ஆந்திரா காட்டுப் பகுதிகளில் இருக்கும் யானைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் கோடி ரூபாய்க்கு மேல் விலை போகும். அதனுடைய அளவை பொறுத்துதான் ஒன்று, இரண்டு, மூன்று கோடிகள் என்று விலை உயரும். அந்த அளவுக்கு மார்க்கெட் உள்ள இந்த யானை தந்தத்தை வைத்து வியாபாரம் செய்யும் மிகப் பெரிய ரவுடி கும்பலின் கதைதான் இந்தப் படம்.
ஆன்கோல் பகுதியில் வாழும் அப்பாவி ஏழை மக்களை அடியாட்கள் மூலமாக சிறை வைத்திருப்பது போல அந்த கிராமத்திலேயே வைத்திருந்து அவர்கள் மூலமாகவே தந்தம் கடத்தல் தொழிலை கச்சிதமாக செய்து வருகிறார் சுனில்.
சுனிலுக்குப் போட்டியாக இதே தந்தத்தை கடத்தும் வேளையில் கபீரும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் சுனில் அளவுக்கு கபீரால் கடத்தலை செய்ய முடியவில்லை. அதனால் மறைமுகமாக சுனிலை வீழ்த்த திட்டமிடுகிறார் கபீர்.
சுனில் கடத்தும் தங்கத்தை வனத்துறை மற்றும் போலீஸ் துணையோடு கைப்பற்றுகிறார் கபீர். தொடர்ந்து மூன்று முறையும் கோடிக்கணக்கான ரூபாயை இழந்துவிட்ட சுனில், அடுத்தக் கடத்தலுக்கு ஹீரோவான ஆண்டனி வர்கீஸை களத்தில் இறக்குகிறார்.
நிறைய புத்திசாலித்தனமும், தந்திரமும் கொண்ட ஆண்டனி சுனில் இழந்திருந்த தந்தங்களை வேறொரு வழியில் திருப்பி எடுப்பதோடு இவரை விடாமல் துரத்தும் வனத்துறை, காவல் துறையை ஏமாற்றி தந்தங்களை கடத்தியும் விடுகிறார்.
ஒரு கட்டத்தில் சுனில் மிகவும் கொடூரமான மனிதராக ஆண்டனிக்கு தெரிய வர.. இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது, அந்தப் பகுதி மக்களை சுனில் ரொம்பவும் கொடுமைப்படுத்துவதால் நேரடியாக சுனிலை எதிர்க்க துவங்குகிறார் ஆண்டனி.
அந்தப் பகுதி மக்களின் துணையோடு தந்தத்தை தனி ஒரு மனிதராக கடத்த தொடங்குகிறார் ஆண்டனி வர்கிஸ். இப்படி ஆண்டனியிடம் தன்னுடைய தொழிலை இழந்த சுனில், தனது எதிரியான கபீருடன் கை கோர்த்து ஆண்டனி வர்கீஸை கொலை செய்ய பிளான் செய்கிறார்,
இன்னொரு பக்கம் ஆண்டனி வர்கிஸ் ஒரு மிகப் பெரிய அளவுக்கான தந்த வேட்டையை தொடங்குகிறார். இந்த இருவரில் யார் வெற்றி பெற்றது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகன் போன்ற தோற்றத்தில் நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ், புஷ்பா பட ஹீரோவான அல்லு அர்ஜுன்போல ஸ்டைலை காட்டியிருக்கிறார். அவருடைய அறிமுகக் காட்சியே பக்காவாக, மாஸாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் வசன காட்சிகளைவிடவும் சண்டை காட்சிகள் இந்தப் படத்தில் அதிகமாக இருப்பதால் சண்டை காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார் ஆண்டனி.
படத்தில் ஹீரோயின் என்று யாரும் இல்லை. அதனால் டூயட் என்ற வஸ்து இதில் இல்லை. அதனால் வசனம், ஆக்சன் போர்ஷனிலும் நான்தான் இந்தப் படத்தின் ஹீரோ என்று சொல்லாமல் சொல்லி நடித்திருக்கிறார் ஆண்டனி.
படத்தில் நடிப்பில் ஒரு வித்தியாசத்தை கொடுத்திருப்பது தெலுங்கு மாஸ் நடிகரான சுனில்தான். அவருடைய தோற்றமும், முகமும், வசனங்களை டெலிவரி செய்யும் ஸ்டைலும், நடிப்பும் ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி இருப்பானோ அதற்கு கச்சிதமாக மீட்டருக்கு மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் அளவோடு அழகாக நடித்திருக்கிறார்.
இன்னொரு வில்லனான கபீர் அவ்வப்பொழுதே கோப முகத்தைக் காட்டுவதும், அவனைத் தூக்கு, இவன தூக்கு என்று ஐடியா சொல்வதுமாக தன்னுடைய போர்சனை நிறைவு செய்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பின்பு திடீரென்று களத்தில் குதிக்கும் துஷாரா விஜயன் ஆண்டனி வர்கீஸூக்கு உதவி செய்ய வருகிறார். அவரும் ஒரு வீரனை போலவே சண்டைக் காட்சிகளில் துணிந்து இறங்கி அடித்திருக்கிறார்.
தூஷாராவுக்காகவே சில சண்டைக் காட்சிகளை சண்டை பயிற்சியாக மாற்றி அமைத்திருக்கிறார் போலும். இதனால் துஷாராவும் நிறைய அடி வாங்கி நிறைய அடிகளையும் கொடுத்திருக்கிறார்.
மலையாள திரையுலகின் குணசித்திர நடிகரான ஜெகதீஷ் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல தகப்பனாகவும் தன் குழந்தை மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கும் ஒரு எளிய மனிதனாக நடிப்பில் ஸ்டோர் செய்திருக்கிறார்.
மேலும் மற்ற துண்டு, துக்கடா கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள், ஏனெனில் இயக்குநரின் இயக்கத் திறமை சிறப்பாக இருக்கிறது.
முழுக்க முழுக்க காட்டுப் பகுதியிலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் அதிகமான காட்சிகளும் இரவு நேரத்திலேயே இருந்தாலும் தொழில் நுட்பக் கலைஞர்களின் உதவியோடு படத்தை மாஸாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் தன்னுடைய உயிரை கொடுத்து இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்பதை தெளிவாக தெரிகிறது. இரவு நேர காட்சிகளிலும், கடத்தல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் எப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனாலும், அவருடைய கடின உழைப்புக்கு நம்முடைய பாராட்டுக்கள்.
ரவி பஸ்ரூவின் இசையில் நம் காது கிழிந்துவிட்டது. படம் முழுவதும் ட்ரம்ஸை அடித்து தள்ளி இருக்கிறார் ரவி பஸ்ரூ. பின்னணி இசையில் இப்படி அடித்து ஆடி இருப்பதால் போகப் போக என்னடா இது என்று நமக்கு கொஞ்சம் சலிப்பையும் கொடுத்துவிட்டது.
இந்த மாதிரியான கதைக்கும் திரைக்கதைக்கும் இப்படித்தான் இசை அமைக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லியிருப்பார்போல. ஆனால் இவ்வளவு காட்டுத்தனமான இசையை கொஞ்சம் குறைத்து சில காட்சிகளின் இசையை மெளனித்தும் வைத்திருக்கலாம்.
படத் தொகுப்பாளரான சபீர் முகமது சண்டை காட்சிகளை மட்டும் ஸ்பெஷலாக தொகுத்திருக்கிறார் போல தெரிகிறது. அதே சமயம் மற்றைய வசனக் காட்சிகளையும் கொஞ்சமும் போர் அடிக்காத வகையில் கொண்டு வந்திருக்கிறார்.
இருந்தாலும் அதிகப்படியான பில்டப்பில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதால் அந்த ஸ்லோ மோஷன் காட்சிகளை கொஞ்சம் கட் செய்து இருக்கலாம். இவங்களுக்கு இவ்வளவு பில்டப்பா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
இந்தப் படமே ஆக்சன் படம்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பதால் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் இவற்றில் அதிகமாக முனைப்பு காட்டாமல் விட்டிருக்கிறார்கள்.
படம் முழுவதும் ஆள், ஆளுக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருக்க.. இதெல்லாம் எந்த ஊர்ல நடக்குதுன்னு நமக்கும் சந்தேகம் வருகிறது. இவை போன்ற பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் இது போன்ற கடத்தல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் துணை இல்லாமல் எதுவும் நடக்காது என்பதால் நாம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சிகள் தலையை காட்டுகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்த இரண்டாம் பாகத்தில் அவர்தான் மிகப் பெரிய ஹீரோவாக வருவார் போலிருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பில்டப்பும் ரொம்பவே ஓவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
யானை தந்தம் கடத்தல் என்பதுதான் இந்தப் படத்தின் மையச் சரடு. அதிலிருந்து ஒரு நிமிடம்கூட கதை பிறழாமல் ஒரே சீரான நேர்கோட்டில் புதிய புதிய டிவிஸ்ட்களோடு கொஞ்சம் நம்ப முடிந்த திரைக்கதையோடு எடுக்கப்பட்டிருப்பதால் இந்தப் படத்தை ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்.
அதே சமயம் ‘புஷ்பா’, ‘கே.ஜி.எப்.’ என்று பிரம்மாண்டமான ஹீரோக்களின் படம் போலவே காட்டுவதற்காக இந்தப் படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார் போலிருக்கிறது.
அப்படி இருந்தாலும் புஷ்பா படத்தில் காட்டப்பட்டிருக்கும் செம்மரக் கடத்தலில் அடி நுனியில் வரையிலும் இந்த படத்தில் தொடவில்லை தந்த கடத்தலை கொஞ்சம் மேலோட்டமாகவே இயக்குநர் செய்திருக்கிறார்.
அந்த வகையில் இந்தப் படம் ஏதோ ஒரு பிரிவில் நம்மைக் கவர்கிறது. ஒரு முறையேனும் இந்தப் படத்தை பார்க்கலாம் என்று சொல்லவும் வைக்கிறது.
படத்தின் தொழில் நுட்பத்தை மிக அழகாக பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் பவுல் ராஜுக்கு நமது பாராட்டுக்கள்.
இப்படி ஒரு பக்கம் இயக்குநருக்கு பாராட்டை தெரிவித்தாலும் இன்னொரு பக்கம் படத்தில் நிமிடத்திற்கு நிமிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்று தடை செய்யப்பட வேண்டிய விஷயங்களை இயக்குநர் காட்டிக் கொண்டே இருந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
“நாங்கதான் கீழே எச்சரிக்கை ஸ்லைடை போட்டோம்ல” என்று அவர் சொன்னாலும் இந்தப் படத்தை பார்க்கும் இளைய சமுதாயத்தினருக்கு அது ஒரு விஷயமே அல்ல என்றுதான் நினைப்பார்கள்.
இது போன்ற படங்களில் அந்த குணமுடைய ஹீரோக்களின் கேரக்டர் ஸ்கெட்ச் அப்படித்தான் இருக்கும். நிஜத்திலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.. என்றெல்லாம் ஏதோ ஒன்றை சொல்லி சமாளிப்பார்கள் இயக்குநர்கள்.
ஆனால் படம் பார்க்கும் 10 பேரில் மூன்று பேராவது இதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு கடைசிவரையிலும் இதில் மாட்டிக் கொண்டு அல்லாடுவார்கள்.
அவர்களுடைய கடைசி காலத்தில்தான் புகையிலை என்ற அந்த வஸ்து தன் வேலையைக் காட்டும். அதனால்தான் திரும்பத் திரும்ப பல விமர்சனங்களில் நாங்கள் இதை குறிப்பிடுகிறோம்.
குடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை அதிகமாக வைக்காதீர்கள். குறைந்தபட்சமான காட்சிகளில் மட்டும் வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். இந்த இயக்குநரிடமும் அதையே நாங்கள் பதிவு செய்கிறோம்.
RATING : 3 / 5









