இந்தப் படத்தில் சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, சிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான், ஜாக்சன் ஜாபர் சாதிக், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், நமோ நாராயணா, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு, எழுதி இயக்கியவர்: ஆர்.ஜே.பாலாஜி, ஒளிப்பதிவு: ஜிகே விஷ்ணு, படத்தொகுப்பு: ஆர். கலைவாணன், கலை: அருண் வெங்கரமூடு, இசை: சாய் அபியங்கர், பாடல் வரிகள்: பா.விஜய், விவேக், விஷ்ணு ஏடவன், அசல் கோலார், ஆதேஷ் கிருஷ்ணா, அருண் ஸ்ரீனிவாசன், சண்டைக்காட்சிகள்: விக்ரம் மோர், நடன இயக்குனர்: ஷோபி பால்ராஜ், சாண்டி, அனுஷா, விஸ்வானந்தன், காஸ்ட்யூமர்: பெருமாள் செல்வம், ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா, ஏகா லக்கானி, திவ்யா நாகராஜன், சவுண்ட் டிசைன்ஸ்: அருண் எஸ் மணி (ஒலி சவுண்ட் லேப்), சவுண்ட் மிக்ஸ்: வினய் ஸ்ரீதர், ஸ்டில்ஸ்: டி.நரேந்திரன், பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா.
இந்தியாவில் தொட்டில் முதல் சுடுகாடு வரையிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிப்போம்.. லஞ்சத்தை எதிர்ப்போம்.. என்று கூக்குரல் இட்டுத்தான் அனைத்துக் கட்சியினரும் ஓட்டுக்களை வாங்குகிறார்கள்.
ஆனால், வாங்கிய வேகத்திலேயே அவர்களே அந்த லஞ்சத்திலும் ஊழலிலும் திளைக்கிறார்கள். இது இந்திய குடிமக்களுக்கும் நன்றாக தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் அதிகாரத்துக்கு அடிபணிந்தும், பவுடர் பூச்சிகளுக்கு மதி மயங்கியும் அவர்களுக்கே திரும்பத் திரும்ப வாக்களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடவுளாகவே இருந்தாலும் அவன் சாதாரண மனிதனாக இந்தியாவில் பிறந்தால் அவனது பிறந்தநாள் சான்றிதழை லஞ்சம் கொடுக்காமல் அந்தக் கடவுளால்கூட பெற முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
அந்த உண்மையைத்தான் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி.
சென்னையில் ஏழு கிணறு பகுதியில் இருக்கும் முதன்மை நீதிமன்றத்தில் பேபி கண்ணன் என்ற ஆர்.ஜே.பாலாஜி வழக்கறிஞராக இருக்கிறார். நீதி கேட்டு கோர்ட் படியேறும் அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது போல பேசி அவர்களை ஏமாற்றி… ஒரு சின்ன வழக்கு ஆக இருந்தாலும் வருடக்கணக்காக அவர்களை அலையவிட்டு பணம் சம்பாதிப்பதுதான் இவருடைய வேலை. அந்த நீதிமன்றத்தில் ஆஜராகும் பல்வேறு வழக்கறிஞர்களும் இந்த ஏமாற்று வேலையில் பாலாஜிக்கு உதவி செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் தன்னுடைய மகளின் மருத்துவ சிகிச்சைக்காக தன்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று அந்தப் பணத்தில் மகளின் ஆபரேஷனை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேரளாவில் இருந்து இந்திரனும், அவருடைய மகளும் சென்னையில் கால் வைக்கிறார்கள்.
இவர்கள் வந்து சேர்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இரண்டு திருடர்கள் இவர்களுடைய நகை பையை பறித்துக் கொண்டு ஓடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் செய்கிறார் இந்திரன். அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர் அம்மா இவரை ஒரு மனிதனாக கூட மதிக்காமல் “கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்துட்டு போங்க. பார்க்கலாம்..” என்கிறார்.
இதற்காகவே இந்திரன் சென்னையில் தங்க வேண்டிய நிலைமை வருகிறது. இரண்டு நாட்களில் அந்த நகையை பறிமுதல் செய்து குற்றவாளிகளையும் பிடிக்கிறது போலீஸ். ஆனால், திருடு போன மொத்தமான 60 பவுன் நகையில் 45 பவுன்தான் திருடனிருந்து மீட்டதாக அந்த இன்ஸ்பெக்டர் சொல்கிறார். வழக்கும் நீதிமன்றத்திற்கு வருகிறது.
நீதிமன்றத்திலும் இந்த வழக்கில் சில சம்பிரதாயங்கள் நடந்த பின்புதான் நகை உங்கள் கைக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் பாலாஜி இவர்களது வழக்கில் தானாகவே வந்து ஆஜராகி உதவி செய்வதாக சொல்லி இவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த நீதிமன்ற வளாகத்திலேயே கருப்பண்ணசாமிக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள் அங்கே வந்து கருப்பணசாமியை வணங்கும் பக்தர்கள் எல்லாம் மிளகாயை கோவிலிலேயே அரைத்து அதை கருப்பணசாமியின் உடலில் பூசுகிறார்கள். இப்படி செய்தால் அவருடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும். வழக்குகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
போலீசும் ஏமாற்றுகிறது.. வழக்கறிஞர்களும் ஏமாற்றுகிறார்கள் என்ற பெரிய துயரத்தில் இருக்கும் இந்திரன் கடைசியாக இப்படியாவது முயற்சி செய்வோம் என்ற எண்ணத்தில் மிளகாய் அரைத்து கருப்பண்ணசாமிக்கு பூசுகிறார்.
இப்போது சாமி மனிதனாக உருவெடுத்து வழக்கறிஞர் சரவணன் என்ற பெயரில் இந்திரனுக்காக வாதாட வருகிறார். வந்திருப்பது சாமி என்பதை அறியும் பாலாஜி “சாமியின் சக்தியை பயன்படுத்தாமல் ஒரு சாதாரண மனிதனாக இந்த நீதிமன்றத்தில் வழக்காடி ஜெயித்துக் காட்டு… சவால் விடுகிறேன்” என்கிறார்.
இந்த சவாலை கருப்பணசாமியான சரவணன் என்ற சூர்யா ஏற்றுக் கொள்ள… இதற்கடுத்து என்ன நடக்கிறது? இந்திரனுக்கு நீதி, நியாயம் கிடைத்ததா? பாலாஜி என்ன ஆனார்? என்பதுதான் இந்த சுவையான கதையின் திரைக்கதை.
இந்தப் படத்தில் ஹீரோ பாலாஜியா அல்லது சூர்யாவா என்கின்ற சந்தேகமே எழுகிறது. அந்த அளவுக்கு படம் முழுவதும் பாலாஜிதான் வியாபித்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலேயே முக்கால் மணி நேரம் கழித்துதான் சூர்யா என்ட்ரி ஆகிறார். அதற்கு பின்பு இடைவேளை முடிந்து மறுபடியும் படம் துவங்கும் பொழுது இன்னும் ஒரு 20 நிமிடங்கள் கழித்துதான் சூர்யா உள்ளே வருகிறார். ஆக, இந்தப் படத்தில் பாலாஜி ஹீரோவாகவும், சூர்யா கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
‘ஜெய் பீம்’ படத்தில் தன்னுடைய உச்சபட்ச நடிப்பை காட்டி இருக்கும் சூர்யா, இந்தப் படத்திலும் நீதிமன்றக் காட்சிகளிலும் ஒரு சில எமோஷன் காட்சிகளிலும் தன்னுடைய பெயரை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்கிறார்.
அதே சமயம் கருப்பணசாமியாக அவர் ஆடுகின்ற ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது. கடவுளாகவே வழக்கறிஞர்கள் சேம்பருக்குள் வந்து வழக்கறிஞர்களை அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கின்ற அந்த காட்சியில் அவருடைய ஸ்டைல் தனியே பளிச்சிடுகிறது. என்ன இருந்தாலும், ‘ஜெய் பீம்’ படத்தில் தென்பட்ட அந்த ‘தெய்வம்’ என்ற உணர்வினை இந்தப் படத்தில் சூர்யாவால் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
சிரித்துக் கொண்டே பேசி கழுத்தை அறுக்கும் ஒரு நயவஞ்சக வில்லன் கதாப்பத்திரத்திற்கு ஆர்.ஜே.பாலாஜி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அந்த நீதிமன்றத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் என்ன சொன்னாலும் அது நடக்கும். நடக்காவிட்டால் வழக்கறிஞர்கள் கூட்டத்தை வைத்து மிரட்டுவது, அரசியல்வாதிகள் கூட்டணி, நீதிபதியுடன் கூட்டணி என்று லஞ்சத்தையும், ஊழலையும் வளர்த்தெடுக்கும் ஒரு வில்லனாக அசத்தியிருக்கிறார் பாலாஜி. அவருடைய ஒரு சில பஞ்ச் டயலாக்குகளிலும், காமெடி கமெண்ட்களிலும் சிரிக்க முடிகிறது.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் அப்பாவாக நடித்த இந்திரன்ஸூம், இவரது மகளாக நடித்த அனகாவும்தான். மலையாள நடிகரான இந்திரன் தேசிய விருது பெற்ற ஒரு கலைஞர். மலையாளத்தில் 400 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். அவருடைய எளிமையான உருவத் தோற்றம் குணச்சித்திர நடிகருக்கு ஏற்றவாறு இருப்பது அவருக்குக் கிடைத்த கிப்ட்டுதான். தன்னுடைய மகள் இறந்த செய்தியைக் கேட்டவுடன் அப்படியே நிலை தடுமாறி தன் கையில் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு அவர் பேசிக்கொண்டே நடக்கின்ற காட்சியில் நம் மனதை உருக்கிவிட்டார் இந்திரன்ஸ். வெல்டன் சார்.
இவருடைய மகளாக நடித்த அனகாவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியாணி சாப்பிட்டே பணத்தைக் காலி செய்யும் வக்கீல்கள் குழுவை பற்றிய உண்மையை அப்பாவிடம் வெடித்து சிதறி சொல்லும் பொழுது உண்மையில் நம்மை கவர்ந்துவிட்டார்.
இன்னொரு பக்கம் இந்திரன்ஸ் போலவே பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக நடித்திருக்கும் ஷிவதா நாயரும், அந்தக் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். அவருடைய அப்பாவியான முகமும், தோற்றமும் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்ட அவருடைய போராட்டமும்.. நம்மை கவர்ந்திழுக்கிறது. ஷிவதா நாயரின் நடிப்புக்கு ஒரு பாராட்டு.
மோசமான நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி நடராஜ் வசனங்களை டெலிவரி செய்வதிலேயே நம்மைக் கவர்ந்துவிட்டார். அவருடைய சின்ன சின்ன கோபங்களும், சத்தமே இல்லாமல் ஊழல் செய்யும் விதமும். தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு புதிய நீதிபதியாக தெரிகிறார் நட்டி நட்ராஜ்.
வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா குளோஸப் காட்சிகளில் ஒரு தேவதையாக ஜொலிக்கிறார். ஆனாலும் அவருடைய முகத்திலேயே அவருடைய வயதும் தெரிகிறது. தேவதைகளுக்கு வயதானால் என்ன இன்னும் பேரழகியாகத் தெரிவார்களே… அதுபோலத்தான் திரிஷாவும் இந்தப் படத்தில் தெரிகிறார். சில காட்சிகளை நகர்த்துவதற்கும், கருப்பணசாமிக்கு உதவி செய்வதற்காகவும் இந்தப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் இருக்கிறது.
திருட்டு வக்கீல்களில் ஒருவராக நடித்திருக்கும் சுவாசிகா, சின்ன கதாபாத்திரம் என்றாலும் அதிலும் தன்னுடைய பெயர் பதியும் அளவுக்கு நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் உதவி செய்ய வந்திருக்கிறேன் என்று சொல்லி வழக்கினை திசை திருப்பும் வக்கீலாக நடித்திருக்கும் தீபாவும் தன்னுடைய அப்பாவியான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு நீதிமன்ற காட்சிகளையெல்லாம் ஒரே மாதிரியாகப் பதிவு செய்து தன் வேலையை சுலபமாக செய்திருக்கிறார். ஆனால், கருப்பணசாமி வரும் காட்சிகளிலும், சாமி நடனத்திலும் திரை முழுவதும் சிவப்பு கலரை வீசி நம்முடைய கண்களுக்கு ரொம்பவே டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் திரிஷாவின் நடனத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
சாய் அபயங்கரின் இசையில் ஒலித்த பாடல்கள் என்ன மாதிரியான வரிகள் என்பதை நாம் மறுபடியும் இணையத்தில் தேடித் துலாவி படித்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு இவருடைய இசையில் பாடல் வரிகள் பின்னுக்கு போக வாத்திய கருவிகளில் சத்தம்தான் நம் காதுகளை நிறைத்தது. பின்னணி இசை அதைவிட அலங்கோலம். எமோஷன் காட்சிகளில்கூட சஸ்பென்ஸ் திரில்லருக்கான பின்னணி இசையை வைத்து நம்மை அயர்ச்சியடைய செய்துவிட்டார்.
படத் தொகுப்பாளரான கலைவாணனும் தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்த காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார். ஆனாலும் இடைவேளைக்கு முன்பு ஒரு 15 நிமிடங்களும், இடைவேளைக்கு பின்பு ஒரு 15 நிமிட காட்சிகளையும் கட் செய்திருந்தால் படம் இன்னமும் க்ரிப்பாக இருந்திருக்கும்.
இடைவேளைக்கு பின்பு பத்து நிமிட இடைவெளியில் இரண்டு சாமி பாடல்கள் ஒலிக்கின்றன. அது அப்போதைய நம்முடைய எமோஷன்ஸ் மூடினை திசை திருப்புகின்றன. ரஷ் பார்த்தபோதே நிச்சயம் தெரிந்திருக்கும். அந்தக் காட்சிகள் நீக்கி இருக்கலாம்.
இதுவரையிலும் தமிழ் சினிமாவில் நீதிமன்றங்களுக்குள் நடக்கும் லஞ்ச ஊழலை அதிகமாக சொல்லவில்லை. ஆனால், இந்தப் படம் நெத்தியடியாக வக்கீல்களும், நீதிபதிகளும் கை கோர்த்துக்கொண்டு அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்.. சாகடிக்கிறார்கள்.. என்ற ஒரு உண்மையை இந்தப் படத்தில் இயக்குநர் பாலாஜி சொல்லியிருக்கிறார். அந்த உண்மையை சொன்னதற்காக பாலாஜிக்கு நமது பாராட்டுக்கள்.
ஆனால், படத்தின் திரைக்கதையில் நிறையவே கோட்டை விட்டுவிட்டார். பல காட்சிகள் மிக வேகமாக மின்னல் வேகத்தில் ஓடி விடுகின்றன. அவருடைய பில்டப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நிறையவே கட் செய்து இருக்க வேண்டும்.
கருப்பண்ணசாமியே களத்தில் இறங்குகிறார் என்பதை கிராபிக்ஸ் காட்சிகளோடு படம் பிடித்து காட்டிய பாலாஜி அதன் உண்மை தன்மையை நிரூபிக்க மறந்துவிட்டார்.
நிஜமாகவே சரவணன் என்ற இன்னொரு நேர்மையான வழக்கறிஞரின் உடலில் கருப்பணசாமி உள்ளே புகுந்து அவரை தூண்டிவிட்டு செய்ய வைக்கிறது என்பது போல கதையை மாற்றி அமைத்து இருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தை இன்னும் அதிகமாக நாம் ரசித்து இருக்கலாம். கதையை எழுதிய பாலாஜி இதில்தான் பெரும் அளவுக்கு கோட்டை விட்டுவிட்டார்.
ஆனாலும், இன்றைக்கும் கோர்ட், வக்கீல், பீஸ், அலைச்சல் என்று அலைந்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கருப்பு என்ற கருப்பணசாமி எப்போதும் முதல் சாமியாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் பார்த்ததுபோல இந்தியாவில் லஞ்சம், ஊழலை ஒழிக்க கையில் அரிவாளோடு ஒரு சாமி வந்தால்தான் இந்த நாட்டில் நிம்மதி பிறக்கும் என்று நினைக்கிறோம்.
கருப்பு என்ற கருப்பணசாமிக்கு நமது வணக்கங்கள்.
RATING : 3.5 / 5









