full screen background image

29 – சினிமா விமர்சனம்

29 – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜி ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன்.எஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ந்தப் படத்தில்  வித்து – சத்யா, ப்ரீத்தி ஆஸ்ராணி – விஜி, அவினாஷ் – மணி, மாஸ்டர் மகேந்திரன் – சந்தோஷ், கிரண் – வசந்த், சிந்து ஷ்யாம் – விஜி அம்மாவாக, பிரேம்குமார் – குருநிலா கதிரவன், ஆதிரா பாண்டியலட்சுமி – பாண்டியலட்சுமி, ஆறுமுகவேல் – ஹீரோ அப்பாவாக, ஷெஹ்னாஸ் பாத்திமா – ஜானு, எஸ்.ஏ.சதிஷ்குமார் ஹீரோ நண்பர், ஷாலினி – அம்ருதா, பிரியங்கா ராய் – பேபி, பிரதீப் – சந்தோஷ், அனுஸ்ரிவேலன் – கலெக்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக் குழுவினர்கள்;:- ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம் , எடிட்டர் – ஆர் எஸ் சதீஷ் குமார், கலை – சண்முகராஜ், இசை – ஷான் ரோல்டன், பாடல் வரிகள் – உமா தேவி , பாக்கியம் சங்கர், மோகன் ராஜா, ரத்ன குமார், ஷான் ரோல்டன், ஸ்டண்ட்ஸ் – டான் அசோக், நடன இயக்குனர் – லீலாவதி, ஷெரிப் எம், காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் ராஜா, ஒலி வடிவமைப்புகள் – டி உதயகுமார், கெவின் பிரடெரிக், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், எஸ்2 மீடியா.

மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளு குளு’ என்ற படங்களை இயக்கிய இயக்குர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் நான்காவது திரைப்படம் இது.

இன்றைய ஜென் இஸட் தலைமுறையினரைக் கவரும் வகையில் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹீரோவின் 29-வது வயதில் நடக்கும் கதை என்பதால் படத்தின் தலைப்பை ’29’ என்று வைத்துள்ளார் இயக்குநர்.

ஒரு மனிதன் இந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்து இறந்து போவதற்கு இடையிலான காலகட்டத்தில் அவன் என்னவாக இந்த சமூகத்தின் முன் நிலை நிறுத்தப்படுகிறான்? என்னவாக அடையாளப்படுத்தப்படுகிறான்? என்பதையும் ஒரு கருவாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது.

படத்தின் நாயகனான விது தன்னுடைய அம்மாவுடன் சேலத்தில் வசித்து வருகிறார். அங்கே பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியிலும் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அந்த ஊருக்குள் அவருடைய குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் சில பிரச்சனைகள் வர அந்த ஊரில் இருக்கமாட்டேன் என்று சொல்லி சென்னைக்கு வருகிறார் விது.

சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் விது. சென்னையில் அவருடைய அறையில் அவருடைய நீண்ட நாள் நண்பரான ஒரு உதவி இயக்குநர் இருக்கிறார். இப்போது யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் விதுவுக்கு இல்லை. ஆனாலும், காதலர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமைப்படுகிறார்.

இந்த நேரத்தில் அவரது அலுவலகத்திலேயே ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானியும் வேலைக்கு செல்கிறார். ப்ரீத்தியுடன் விதுவுக்கு நட்பாகி கொஞ்சம் கொஞ்சமாக பழக… இருவருக்குள்ளும் காதல் ஒட்டிக் கொள்கிறது.

விதுவுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை உணர்கிறார் ப்ரீத்தி. அவர் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் விதுவோ எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இப்போதைக்கு கிடைத்த வேலையைப் பார்த்து சம்பளத்தை வாங்கி நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டுவோம் என்று நினைக்கிறார்.

எந்த லட்சியமும் இல்லாமல் இருக்கும் விதுவை கொஞ்சம் கொஞ்சமாக டியூன் செய்து அவருடைய வாழ்க்கையை மேலே கொண்டு வர ப்ரீத்தி போராடுகிறார். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத விது, பிரித்தியிடம் அடிக்கடி சண்டையிட இருவருக்குள்ளும் நிரந்தரமாக பிரிவு ஏற்படுகிறது.

தான் இப்போது ஒரு பெண்ணின் காதலன் என்ற உயர்வில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த விதுவுக்கு, கடைசியாக அந்தக் காதலும், காதலியும் கைவிட்டு போக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விது.

அதே சமயம் பிரீத்தியோ விதுவையும் மறக்க முடியாமல், ஐ.ஏ.எஸ். படிப்பிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த முடியாமல் திணறி வருகிறார். இந்த இருவரின் போராட்டம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விதுவின் முயற்சிகள் கை கூடியதா? பிரீத்தியுடன் விது இணைந்தாரா? இருவரின் திருமணமும் நடந்ததா? இறுதியில் என்னதான் நடக்கிறது? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீரோவாக நடித்திருக்கும் விது, ஏற்கனவே சில படங்களில் தலை காட்டி இருக்கிறார். ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். அவருடைய தோற்றம் லோக்கல் பையன்போல் இருப்பதால் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

ஆனால் நடிப்பு என்ற விதத்தில், தன்னால் முடிந்ததை மட்டுமே காட்டியிருக்கிறார். ஒரு காதலனாக அவர் நடிக்கின்ற நடிப்பை விடவும் இடைவேளைக்கு பின்பு சோகத்தை தாங்கி கொண்டு பிரித்தியுடன் சமாதானமாக எடுக்கும் முயற்சிகளில் கொஞ்ச நேரம் நடிப்பினை காட்டி இருக்கிறார். ஆனால் இது போதாது என்பதுதான் நமது கருத்து. ஒருவேளை வேறு சில இயக்குநர்களின் கைகளில் சிக்கினால் இவருடைய இன்னொரு பரிமாணம் வெளிவரும் என்று நம்பலாம்.

அயோத்தி பிரீத்தி இந்தப் படத்திலும் இன்னொரு அயோத்தி போலவே தன்னுடைய நடிப்பை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். எந்த மாதிரியான கோணத்தில் எல்லாம் பிரீத்தி அழகாக இருப்பாரோ அப்படியே படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதனால் இவரது அழகு திரையில் ஜொலிக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் ஒரு பாடல் காட்சிகள் அவர் காட்டுகின்ற நடனமும், நளினமும் அசத்தல்.

வசன காட்சிகளில் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை போலவே நடித்திருக்கிறார் போலும். இந்தப் பிள்ளையை போட்டு ஏன்டா இப்படி பாடா படுத்துற என்று நாம் விதுவை கடிந்து கொள்வது போல பல காட்சிகளில் நமக்கு வில்லனாகவே தெரிகிறார். அந்த வகையில் பிரீத்திக்கு இந்தப் படமும் ஒரு முக்கியமான திரைப்படம்தான்.

விதுவின் ரூம் மேட்டாக இருக்கும் அவினாஷ், ப்ரீத்தி வீட்டுக்கு வரும் நேரத்தில் குடிமகன் போல பேசுவதும், நடிப்பதும்  கொஞ்சம்  சுவாரசியமாகவும் கொஞ்சம் காமெடியாகவும் வந்திருக்கிறது.

விதுவின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலட்சுமிவின் நடிப்பும் இந்தப் படத்தில் சிறப்புதான்.

மாஸ்டர் மகேந்திரனின் காலில் விழுவதற்கு விது தயாராக இருக்கும்போது அம்மா ஆதிரா பேசுகின்ற வசனங்களும், அவருடைய கோபமும், நடிப்பும் ஒரு பெண்ணின் தன்மானத்தைக் காட்டுகிறது.

படம் 2010-களில் நடப்பது போல இருப்பதால் கலை இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு நவீனங்கள் எதுவும் நம் கண்ணில் படாத அளவுக்கு படக் காட்சிகளை படமாக்கி உதவியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் தன்னுடைய கேமராவினால் படத்தில் இருக்கும் அனைவரையுமே மிக அழகாக காட்டியிருக்கிறார்.

சான் ரோல்டன் பாடல்களை அழகாக கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் கொஞ்சமும் பார்வையாளர்கள் சோர்வடையாத வண்ணம் அவர்களை திரைக்கு இழுப்பதைபோல அமைந்துள்ளது.

இடைவேளைக்கு பின்னான பல காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதைப்போல ஒரு நினைவு நமக்குள் வருகிறது. இன்னமும் கொஞ்சம் மனம் வைத்து படத் தொகுப்பாளர் சில காட்சிகளை ரசிக்கும்படியாக கட் செய்திருக்கலாம்.

இந்த உலகத்தில் பிறந்தோம். வளர்ந்தோம். படித்தோம். கல்யாணம் செய்தோம். பிள்ளைகளை பெற்றெடுத்தோம். அவர்களையும் படிக்க வைத்தோம். அவர்களுக்கும் கல்யாணம் செய்து வைத்தோம். பேரப் பிள்ளைகளையும் பார்த்துவிட்டோம். இதோ ஆண்டவனோ அல்லது இயற்கையோ கூப்பிட்டால் மேலே போகலாம் என்ற மன நிலையில்தான் மெஜாரிட்டியான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கை ஓட்டத்தில்தான் இந்தியாவில் எந்த சாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும், மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

ஆனால், நீ வாழ்ந்த காலத்தில் என்னவாக இருந்தாய்? என்ன சாதித்தாய்/ எதைச் சொன்னால் உன் பெயர் உடனே மக்களின் நினைவுக்கு வரும்? என்கின்ற ஒரு வாழ்க்கை சித்தாந்தத்தை இந்தப் படத்தின் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு அடையாளத்தை இந்தச் சமூகத்தில் விட்டுவிட்டு போக வேண்டும் என்ற ஒரு நல்ல விஷயத்தைத்தான் இயக்குநர் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை கொஞ்சம் முருக்கு சுற்றுவதை போல சுற்றி சுற்றி சொல்லி இருப்பதுதான் நம்மை கொஞ்சம் சோர்வாக்கிவிட்டது

“திருக்குறளை கவுத்து போட்ட மாதிரி அவளோட லிப்ஸ்.”

“அவளோட மேல் உதட்டைவிட கீழ் உதடு கொஞ்சம் பெருசு.

“இப்படி வழியனுப்புனா நான் தீக்குளிக்கக்கூட தயார்…”

“சாகப் போற கடைசி நிமிஷத்துல நான் முனங்கப் போற பெயரை அவ பேப்பர்ல எழுதுனா!”

“காத்துல பறக்காம இருக்க பேப்பர் வெயிட் வைக்கிற மாதிரி, அவ தலையில கொஞ்சுண்டு மல்லி பூ.”

“செஞ்சுட்டு கட்டிக்கிட்டா என்ன.. கட்டிக்கிட்டு செஞ்சா என்ன.. இரண்டும் ஒண்ணுதான்..”

“அவளையே கிப்ட்டா குடுக்குற மாதிரி என் முன்னாடி வந்து நின்னா..”

இப்படியெல்லாம் சுற்றி வளைத்து புரிந்து கொள்ளும்விதமாகவும், இலக்கிய நயத்தோடும் வசனங்களை எழுதி வைத்திருக்கும் ரத்னகுமாருக்கு நமது பாராட்டுக்கள்.

இப்படி படத்தில் இருக்கும் வசனங்கள் நிறைய இலக்கிய தரமானதாக இருந்தாலும் இந்த வசனங்களை சென்னையைத் தாண்டி மெட்ரோபாலிட்டன் சிட்டிகளையும் தாண்டி… சிங்கிள் ஸ்கிரீன் உள்ள சின்ன தியேட்டர்களுக்கு வரும் மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? எப்படி ரசிப்பார்கள் என்று தெரியவில்லை.

தியேட்டர்களில் முன் வரிசையில் அமரும் ஒரு சாதாரணமான பொதுஜனத்துக்கு முதலில் வசனங்கள் புரிய வேண்டும். அவனும் ரசிக்க வேண்டும் தரை லோக்கல் லெவலுக்கு இறங்கினால்தான் பெரும்பான்மையான ரசிகர்களின் பாராட்டையும், ஆதரவையும் நாம் பெற வேண்டும். இதனால் ரத்னகுமார் தனது அடுத்தடுத்த படங்களில் இந்த இலக்கிய நயத்தை கொஞ்சம் கைவிட்டு விடுமாறு அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஹீரோயின் தன்னுடைய காதலை ஹீரோவிடம் சொல்லுகின்ற இடத்தில் மிக அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அதேபோல் காதல் எல்லையை தொட்டுவிட்டால் அதன் பின்பு காமத்தின் வாசல் திறக்கப்படும் என்பதையும் ரொம்ப நாகரிகமான வசனம் மூலமாகவும் காட்சிப்படுத்தியும் பாராட்டை பெறுகிறார் இயக்குநர்.

ஆனால் முதல் பாதியில் கதை சீராக போயிருக்கும் நிலையில் இரண்டாம் பாதியில் அவன் ஒரு போராளி என்பது அவனுக்கே தெரியாமல் போய்விட்டது என்று சொல்வதைப்போல கதையை மாற்றியது நாம் எதிர்பாராதது.

ஆற்றைக் காப்பாற்ற வேண்டும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், போராளி என்ற பெயர் எடுக்க வேண்டுமாய் பலவிதப் போராட்டங்களில் விது இறங்குகிறார். மாநில அரசிடம் இருக்கும் நடைமுறை சிக்கல்களையு கலெக்டர் வழியாகக் காட்டிவிட்டு.. அதன் பின்பு யூ டர்ன் அடித்து தன்னுடைய தொலைந்து போன காதலை வாழ வைக்கப் போகும் கதையாக மாற்றியிருப்பது நமக்கு கொஞ்சம் அயர்ச்சியையே கொடுத்தது.

ஒன்று காதல் படமாகவே கொண்டு போய் இருக்கலாம். அல்லது போராளி கதையாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், முதல் பாதியில் ஒரு கதை.. இரண்டாம் பாதியில் வேறு கதை என்று குழப்பிவிட்டதால் நம்மால் படத்தை அதிகமாக ரசிக்க முடியவில்லை. வருந்துகிறோம்…!

RATING : 3.5 / 5

Our Score