நடிகர்கள் :
சுபாஷ் செல்வம், முனிஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி, வின்சு ராச்சே, சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா, சித்திரசேனன் மற்றும் பலர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் : அமீன் பாரிஃப்
ஒளிப்பதிவு : நீரஜ் ரேவி
படத் தொகுப்பு : அர்ஜுன் பாபு
இணை எழுத்தாளர் : ஆகாஷ் சந்திரமோகன்
பாடல்கள் : அருண்ராஜ்
பின்னணி இசை, டிரைலர் இசை : விபின் பாஸ்கர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஹம்சா வள்ளிதோட்
ஒலி கலவை : அரவிந்த் மேனன்
தயாரிப்பாளர் : ஸ்ரீநிதி சாகர்
தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் (டீம் எய்ம்)
காக்கி உடை அணிந்த காவலர்கள் சர்க்கஸில் வேலை பார்த்தால் எப்படி வேலை செய்வார்களோ அப்படி ஒரு கதைதான் இந்த வெப் சீரிஸ். அதனால்தான் ‘காக்கி சர்க்கஸ்’ என்று பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
கேரள எல்லையில் இருக்கும் கண்ணகியாண்டாள்புரம் என்ற ஊரில் கிளைச் சிறை இருக்கிறது. இந்தக் கிளைச் சிறையில் முனிஷ்காந்த் கண்காணிப்பாளராகவும், ஹீரோ சுபாஷ் செல்வம் ஜெயில் காவலராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.
முனீஸ் காந்த் கொஞ்சம் வித்தியாசமான ஒரு அதிகாரியாக இருக்கிறார். சிறைக்குள் வருபவர்கள் அனைவரையும் புத்தகங்களை கொடுத்து படிக்க வைத்தால் அவர்களை குற்ற செயல்களில் இருந்து மீட்டு விடலாம் என்று நம்பிக்கை கொண்ட ஒரு எளிய மனிதர்.
இதனாலேயே சிறைக்குள் வரும் குற்றவாளிகளிடம் ஆளுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்து “இந்தப் புத்தகத்தை படித்து முடி. நான் சில கேள்விகள் கேட்பேன். அப்போது அந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்தால் மட்டும்தான் சிறையில் இருந்து வெளியே அனுப்புவேன்…” என்று அன்பாக மிரட்டி அவர்களை படிக்க வைக்கிறார்.
அந்த ஊருக்கு ‘கண்ணகியாண்டாள்புரம்’ என்ற பெயர் வந்ததற்கே ஒரு கதை உண்டு. சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்துவிட்டு கேரளாவிற்கு வரும்பொழுது சிறிது நேரம் இந்த சிறைச்சாலை அமைந்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தாராம். அதனால் அந்த சிறைச்சாலைக்கு உள்ளேயே ஒரு சிறிய கண்ணகி சிலை வைக்கப்பட்டு அந்த சிலையின் முன்பாக ஒரு உண்டியலும் வைக்கப்பட்டு இருக்கிறது.
சிறைச்சாலைக்கு வரும் கைதிகளும், காவலர்களும் அந்த உண்டியலில் பணம் போட்டுவிட்டு கண்ணகியை வணங்கிவிட்டு செல்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் அந்த கண்ணகி கோவிலுக்கு போவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அமைப்பினர் வந்து அந்த உண்டியல் குடத்தில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டுபோய் கண்ணகி கோவிலில் சேர்ப்பார்கள். இது வருடா வருடம் தொடர்ந்து நடந்து வரும் ஒரு செயல்.
இந்த நேரத்தில் அந்த ஊரில் சிற்சில இடங்களில் சின்ன சின்ன திருட்டுக்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு சமயம் அந்தக் கோவிலுக்குள் இருக்கும் உண்டியல் பணம் திருடப்பட்டிருப்பதை சுபாஷ் அறிகிறார். இப்பொழுது அந்த அமைப்பினர் வந்து பணம் கேட்டால் என்ன செய்வது? குடத்தில் வேறு சில்லறை காசுகள்தானே இருக்கின்றன என்று பதறுகிறார்கள் சுபாஷூம், முனீஸ்காந்தும்.
இதை லோக்கல் போலீசில் சொல்ல போலீசாரோ “ஜெயிலுக்குள்ளேயே ஒருத்தன் வந்து திருடிட்டு போயிட்டான்னு வெளில தெரிஞ்சா உங்க ரெண்டு பேர் வேலையும் போயிரும். அதனால ரகசியமாக விசாரிங்க.. நாங்களும் விசாரிக்கிறோம்..” என்கிறார்கள்.
இப்போது முனீஸ்காந்தை உடன் வைத்துக்கொண்டு காவலர் சுபாஷ் யார் இந்த வேலையை செய்திருப்பார்கள் என்று தேடுகிறார். இந்த தேடுதல் வேட்டையில் உண்மை தெரிய வராத காரணத்தினால் அடுத்த வாரம் நடக்கும் கண்ணகி விழாவுக்கு போக ஆள் வந்து விடுவார்களே என்று நினைத்து அவசரமாக அருகில் இருக்கும் ஒரு கடன் கொடுக்கும் நிறுவனத்தில் லட்சத்தில் கடன் வாங்கி கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் வைக்கிறார் சுபாஷ்.
அந்தப் பணமும் அந்த அர்த்த ராத்திரியிலேயே காணாமல் போகிறது. மிகுந்த கோபத்திற்கு உள்ளாகும் சுபாஷ், இந்த இரண்டு வேலையும் ஒரே ஒரு ஆள்தான் செய்திருப்பார் என்ற சந்தேகப்படுகிறார்.
இன்னொரு பக்கம் சுபாஷூக்கும், அந்த கடன் கொடுத்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகிக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது, ஒரு பக்கம் காதலியையும் சமாளிக்க வேண்டும். இன்னொரு பக்கம் திருடனையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வெறியோடு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார் சுபாஷ்.
கடைசியில் என்ன நடந்தது? உண்மையான குற்றவாளி யார்? சுபாஷ் என்ன செய்தார்? இந்தக் கேள்விகளுக்கான விடையை கொஞ்சம் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதுதான் இந்த ‘காக்கி சர்க்கஸ்’ வெப் சீரிஸின் திரைக்கதை.
முனீஸ்காந்தும், சுபாஷ் செல்வமும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே ஒரு அசத்தலான கேரக்டர்தான். கண்காணிப்பாளரான முனீஸ்காந்த் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் கைதிகளை திருத்த முயல்கிறார். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பானதுதான்.
அதே சமயம் புத்தகத்தை படிப்பதினாலே அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று அவர் நம்புவதற்கான காரணத்தை அவர் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு கொடுக்காமல் இயக்குநர் விட்டுவிட்டது ஏனென்று தெரியவில்லை.
ஆனாலும், இறுதிவரையிலும் முனீஸ்காந்தும் ஒரு ஹீரோ போலவே படத்தில் அங்காகே ஓடி, ஓடி உழைத்து தன் கேரக்டரை நியாயப்படுத்தி இருக்கிறார்.
ஹீரோ சுபாஷ் செல்வமும் தன்னுடைய நடிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். ஒரு பக்கம் கல்யாணம் பண்ணு.. கல்யாணம் பண்ணு.. என்று கத்தும் அம்மா… இன்னொரு பக்கம் அடிக்கடி போன் செய்து தொல்லை செய்யும் காதலி.. இவர்களுக்கு இடையிடையே தன்னுடைய பணம் பறிபோன கோபத்தில் பணத்தை தேடியலையும் அந்த வேகம் அனைத்தையும் ஒன்று கலந்து கொடுத்திருக்கிறார் சுபாஷ் செல்வம்.
பாவம்., இவருடைய நிலைமை யாருக்கும் வரக் கூடாதுதான். அப்படி வந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு பாவமான ஒரு கதாபாத்திரத்தில் அழகாக செய்து இருக்கிறார் சுபாஷ். பாராட்டுக்கள்.
வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன் மலையாள நடிகர். மலையாளத்தில் பட படங்களில் ஹீரோவாகவே நடித்திருந்தவர். இந்த வெப் சீரிஸில் வில்லனாக நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு அழகான ஒரு முகம். வில்லன் என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு அவருடைய நடையும், முகமுமே வித்தியாசமான ஒரு வில்லனாக இவரைக் காட்டி இருக்கிறது. இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே இவர்தான் என்று உறுதியாக சொல்லலாம்.
இவரும், இவரது காதலியான கவுதமியும் அறிமுகமாகி நட்பாகி காதலர்களாக மாறும் காட்சிகள் செம இன்ட்ரஸ்ட்டிங்.. “பணத்துக்காக திருடலை. ஆனால், இந்தத் திருட்டில் இருக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ், ஒரு சஸ்பென்ஸ், ஒரு படபடப்பு, அது எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. அதனால் திருடுகிறேன்” என்று காதலி சொல்ல… அதையே திருப்பிச் சொல்கிறார் ராஜேஷ்.
“எனக்கும் அந்த திரில்லிங் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் நானும் திருட்டில் இறங்கி இருக்கிறேன்” என்று ராஜேஷூம் சொல்வது சுவையான திரைக்கதை.
“இப்படி சின்ன சின்னதா திருடுறதுக்குப் பதிலா ஒரே நேரத்தில் மிகப் பெரிய தொகையை திருடினால் நிம்மதியாக வெளிநாடு பறந்து விடலாம்” என்று காதலியே ஆசை காட்ட.. அந்த ஆசையினால் ராஜேஷ் மாதவன் வீழ்வதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான முடிச்சு. இவர்கள் இருவரின் பேச்சுக்கள் நிறையவே சிரிப்பினை தந்திருக்கிறது. கௌதமியும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
சுபாஷ் செல்வத்தின் காதலியான விசுவும் திரையில் அழகாக ஜொலிக்கிறார். தான் காதலில் இருப்பதை ஹீரோவுக்கு அவர் உணர்த்துகின்ற அந்த ஒரு காட்சியில் சூப்பர் டைரக்ஷன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு காதலை வெளிப்படுத்தும் தருணம் மிக அழகு.
சவப் பெட்டி தயாரிக்கும் கடை உரிமையாளரான அப்துல் லீ இன்னொரு பக்கம் இடையிடையே வந்து கிச்சுகிச்சு மூட்டுவதை போல சிரிப்பை வரவழைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு கிடைத்த அந்த சோகமான சம்பவம் நிச்சயம் பரிதாபமானதுதான். தன்னுடைய அந்த கேரக்டரை வலிந்து திணிக்காமல் மிக அழகாக உணர்ந்து நடித்திருக்கிறார் அப்துல் லீ.
மேலும் படத்தில் நடித்திருக்கும் சாவித்திரி, அம்ருதா, மருது பாண்டியன், ராகேஷ், விக்னேஷ்வர், அருண்குமார் என்று பலரும் ஏற்றியிருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஒரு அழகான நடிப்பை இவர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
மிக அதிகமான இரவு நேர காட்சிகள்தான் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இதற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரேவியை பாராட்டத்தான் வேண்டும். சிறைச்சாலையை சிறப்பாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர்களான சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் சில இடங்களில் நகைச்சுவையை உடனே கிளப்பி விடும் அளவுக்கு பின்னணி இசையை அமைத்திருக்கிறார்கள்.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் ஒவ்வொரு சீரிஸின் முடிவிலும் ஒரு டிவிஸ்ட்டையும், ஒரு எதிர்பார்ப்பையும் வைத்து மொத்தமாக இந்த சீரிஸை பார்க்கத் துவங்கினால் முடிக்காமல் விடக்கூடாது என்கின்ற ஒரு உணர்வை ரசிகனுக்குள் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளரான அர்ஜுன் பாபு.
இப்படி ஒரு கதையை சிந்தித்து அதற்கேற்றவாறு திரைக்கதையை அமைத்து அழகாக இயக்கவும் செய்திருக்கும் இயக்குநர் அமீன் பாரிப்புக்கு நமது பாராட்டுக்கள்.
சிறைச்சாலைக்குள்ளையே ஒரு கொள்ளை சம்பவம் நடந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு. இப்படி ஒரு வித்தியாசத்தை வைத்து ஒரு வில்லனையும் அசத்தலாக காட்டி கொஞ்சம் நகைச்சுவையையும் சிந்த வைத்து, இந்தத் தொடரைக் கொடுத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
அதேபோல் புத்தகம் படிப்பதினால் நிச்சயமாக சிறைச்சாலையில் இருந்து வெளியில் வரும் குற்றவாளிகள் மனம் மாறலாம். திசை திரும்பலாம்.. கத்தியை கையில் போட்டுவிட்டு அவர் கையில் புத்தகத்தை திணிப்பதுதான் சட்டத் துறையும், நீதித் துறையும் செய்ய வேண்டிய வேலை என்பது இந்தியாவில் பல்வேறு அறிஞர்கள் சொன்ன வார்த்தைகள்தான்.
அதை இந்த இயக்குநர் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் சீரியஸாக சொல்ல வேண்டிய விஷயத்தை காமெடியாக சொன்னதால் இதுவும் பத்தோடு பதினொன்னாக.. ஒரு காமெடி கதையாக போய்விட்டது என்பதுதான் பெரும் வருத்தம்.
குற்றவாளி யார் என்று தெரிந்துவிட்டது. அவனை போலீஸ் ஸ்டேஷன் இழுத்து வந்து லாடம் கட்டினாலே.. உண்மையை ஒத்துக் கொள்வான் என்கிற ஒரு எண்ணம்தான் நம் அனைவரின் மனதில் இருக்கும்.
ஆனால் ஆப் தி ரிக்கார்டாக மட்டுமே இதை விசாரிக்க முடியும் என்கின்ற நிலைமையில் சுபாஷூம், முனீஸ்காந்தும் அந்த வில்லனை பின்னால் சென்றே துப்பறிவது ரொம்பவே நியாயமான திரைக்கதை.
முதல் மூன்று எபிசோடுகளில் திருடு போகும் சிச்சுவேஷனை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அடுத்த நான்கு எபிசோடுகளில் கண்டு பிடிங்க பார்க்கலாம் என்று போலிஸ், திருடன் விளையாட்டை இந்த சீரிஸில் மிக அழகாக கொடுத்து நம்மை கடைசி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
நிச்சயமாக பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்தான் இது. உங்களுடைய நேரம் நிச்சயம் வீணாகாது.
அவசியம் ஜி– 5 ஓடிடி தளத்தில் பார்த்து மகிழுங்கள்.
RATING : 3.5 / 5









