full screen background image

வங்காள விரிகுடா –  சினிமா விமர்சனம்

வங்காள விரிகுடா –  சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மாதா பிதா பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் குகன் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் குகன் சக்கரவர்த்தி நாயகனாகவும், அலினா ஷேக், வாசுவிக்ரம், பொன்னம்பலம், வையாபுரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் குகன் சக்கரவர்த்தி ஒரு சகலகலாவித்தகராக 21 திரையுலகப் பணிகளை தான் ஒருவரே செய்து சாதனை படைத்துள்ளார்.

தயாரிப்பு, நடிப்பு, கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, சண்டை இயக்கம், கலை இயக்கம், நடன இயக்கம், உடைகள், புகைப்படங்கள், ஒப்பனை, பின்னணி பாடகர், தயாரிப்பு வடிவமைப்பு, ஹேர் ஸ்டைல், டைட்டில்ஸ், வெளிப்புறக் காட்சிகளுக்கான நிர்வாகம் என்று மொத்தம் 21 பணிகளையும் இவர் ஒருவரே இந்தப் படத்தில் செய்து சாதனை படைத்திருப்பதாக குகன் சக்கரவர்த்தியே சொல்லியிருக்கிறார்.

ஆனால் நாம் விசாரித்தவரையிலும் அந்தந்த துறைகளைச் சேர்ந்தவர்களை இந்தப் படத்தில் வேலை பார்க்க வைத்து, பின்பு கடைசியில் “தான் மட்டுமே இதைச் செய்த்தாகச் சொல்லப் போகிறேன். நீங்க கண்டுக்காதீங்க” என்று சொல்லி அவர்களை ஆப் செய்துவிட்டதாகத் தெரிகிறது. எதுக்கு இந்த வெறி என்று தெரியவில்லை.

சினிமா என்பது கற்பனை காட்சிகளின் தொகுப்பு. அடித்தளத்தில் ஒரு வலுவான கதையுடன் சுவாரசியமான திரைக்கதையை வைத்து இதுதான் நடிப்பு என்கின்ற வகையில் நடிகர்களை நடிக்கவும் வைத்து கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி வெடி வைப்பாங்க.. என்ற வடிவேலுவின் வார்த்தைகளுக்கேற்ப பல துரோகியர்களை சமாளித்து அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு உள்ளாக தயாரிப்பாளர்களுக்கு இல்லாத வியாதி எல்லாம் வந்து விடும்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் ஒரு படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வருகிறார் என்றால் நிச்சயமாக அவரையெல்லாம் கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் சாரட் வண்டியில் அமர வைத்து பிரசாத் லேபிற்கு அழைத்து வர வேண்டும். அந்த அளவுக்கு பல தியாகங்களை செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த தயாரிப்பாளர்களிடத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் 80 சதவீதம் பேர் நம் முகம் திரையில் வர வேண்டும். அதே சமயம் நாம் கோடீஸ்வரனாகவும் வேண்டும் என்கின்ற ஒற்றை கொள்கையிலேயே காலத்தை ஓட்டுவதால்… எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பணம் கிடைக்குதோ.. இல்லையோ.. முதலீடு செய்த பணம் திருப்பி கைக்கு வருதோ இல்லையோ… மரியாதையாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமை.

திரைப்பட துறைக்குள் நுழைந்து நடிகனாக வேண்டும் என்பது கொஞ்சம் சாதாரண விஷயம்தான். ஒரு காட்சியில் வரும் அளவுக்கு நடிக்க விரும்புவர்களுக்கு தாராளமாக உடனடியாக அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வசனம் பேசுகின்ற ஒரு கேரக்டர் வரவேண்டும் என்று நினைத்தாலே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் “இந்த கேரக்டர்கள் எல்லாம் வேண்டாம்.. நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்” என்று ஒருவன் கட்டியம் செய்து கொண்டு கோடம்பாக்கத்தில் வந்து கால் வைத்தால் அவருடைய தலையெழுத்து நன்றாக இருந்தால் மட்டுமே அவர் நினைத்தது நடக்கும். இல்லாமல் போனால் நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது.

யாரோ ஒரு தயாரிப்பாளரிடம் போய் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என்று சொல்வதைவிட, நாமே நம்முடைய பணத்தில் படமெடுத்து விடலாமே என்று நினைத்து பலரும் இந்தத் திரையுலகத்தில் கால் பதித்து திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எடுத்தார்கள்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குகன் சக்கரவர்த்தியார் என்ற வயது முதிர்ந்த வாலிபர் தமிழ் சினிமாவின் 21 கிராப்டுகளையும் தான் ஒருவனே செய்து ஒரு படத்தை தயாரித்து, நடித்து, இயக்கி கொண்டு வந்திருக்கிறார். அவருடைய தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும் நமது பாராட்டுக்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் குகன் சக்கரவர்த்தி. இவருக்கு அவருடைய சொந்த ஊரிலேயே நல்ல மக்கள் செல்வாக்கு உண்டு திருமணம் ஆனவர். ஆனால், மனைவியுடன் சமூக உறவில் இல்லை.

இந்த நிலைமையில் குடும்பப் பிரச்சினையை நினைத்து மனம் வெறுத்துப் போய் தூத்துக்குடி கடற்கரை மணலில் அமர்ந்து சோகத்தை அசைபோட்டு கொண்டிருக்கும் பொழுது, அவருடைய முன்னாள் காதலி அந்தக் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து பதறுகிறார் குகன்.

பழைய காதலியை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று அவரிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளும் குகன், அந்த காதலியையும் தனியாக ஒரு வீடு எடுத்து தங்க வைத்து இந்த வீட்டில் ஒரு நாள், அந்த வீட்டில் ஒரு நாள்… என்று குறுக்கு சால் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் இன்னொரு பெண்ணை சைடாக வைத்திருப்பது அவருடைய மனைவிக்கு தெரியாது.

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, வெட்டுக் குத்து என்று லோக்கல் ரவுடிகளுடன் சவகாச வைத்திருக்கும் குகன், ஒரு நபரை ஆள் வைத்து கொலை செய்கிறார்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர் திடீரென்று அவருடைய காதலியின் செல்போனுக்கு அழைப்பு அனுப்பி விசாரிக்க… “செத்துப் போனவன் எப்படி உயிருடன் வந்தான்?” என்பது தெரியாமல் குகனும் அவரது முன்னாள் காதலியும் திகைக்கிறார்கள். அதே சமயம் அவரது காதலியை மிரட்டுகின்ற வகையில் அந்த வீட்டில் பல அசம்பாவிதங்களும் நடக்கின்றன.

தன்னுடைய காதலியை காப்பாற்ற துடிக்கிறார் குகன். அதற்காக அவர் செய்கின்ற செயல்களும், கொலைகளும்தான் இந்த வங்காள விரிகுடா’ படத்தின் திரைக்கதை.

45 வயது மிக்கவராக இருக்கும் நாயகன் குகன் சக்கரவர்த்தி, தன்னுடைய தோற்றத்திற்கு கொஞ்சமும் பொருந்தாதவகையில் இரண்டு ஹீரோயின்களை வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.

அவருடைய மனைவியாக நடித்தவரையும், குகனையும் பார்த்தால் அப்பா, மகள் போல நமக்கு தோன்றுகிறது. ஆனால், இவருடன் ஜோடியாக நடிக்க வேறு எந்த பெரிய நடிகையும் சம்மதிக்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் புதுமுக நடிகைகளை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

மனைவி ஒரு பக்கம் ஏக்கத்தோடு காத்திருக்க.. இன்னொரு பக்கம் முன்னாள் காதலியும் காதலோடு காத்திருக்க… இரண்டு பேரிடமும் சமாளிக்கும்விதத்தில் அவர் நடிக்கும் நடிப்பு பரவாயில்லாமல் வந்திருக்கிறது.

தாதாவாகவும் இல்லாமல் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு வள்ளலாகவும், பணத்தை வாரி இறைக்கும் வள்ளல் தன்மையுடன் அநியாயத்தை தட்டிக் கேட்கும் குணத்துடனும் மற்றைய கமர்சியல் ஹீரோக்கள் போலவே தனக்கான கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்சை எழுதியிருக்கிறார் குகன்.

இவருடைய மனைவி மற்றும் முன்னாள் காதலியாக நடித்த இருவருமே இயக்குநர் சொல்லித் தந்தது போலவே கொஞ்சம் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் அடுத்தடுத்த படங்கள் கிடைத்தால் அதில் அவர்கள் இதைவிட சிறப்பாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்தப் படத்தில் இணைத்து நடித்திருக்கும் வாசு விக்ரம், வையாபுரி, பொன்னம்பலம் என்று கொஞ்சம் தெரிந்த முகங்களும், அவர்களுக்கு கிடைத்த கேப்பில் இயக்குநரின் இயக்குதல் திறமைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இதற்கு மேல் நடிகர், நடிகைகளின் நடிப்பை பற்றி நாம் பேசவே முடியாது ஏனென்றால் வருடத்திற்கு 200 படம் பார்க்கும் எங்களை மாதிரியான விமர்சகர்கள் தாங்க முடியாத அளவுக்குத்தான் இயக்கம் செய்திருக்கிறார் குகன்.

இவரே பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் என்பதால் சந்தேகத்தோடு உட்கார்ந்தால் பாடல்களும், பாடல் வரிகளும் பாடல் காட்சிகளை படமாக்கிய விதவும் அழகோ அழகு. அப்படி ஒரு எதிர்பாராத புதிய இசையை கொடுத்திருக்கிறார் குகன். அதிலும் திராவிட இயக்க தலைவர்களையும், தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களையும் வைத்து பாடும் “என் ஊரு தூத்துக்குடி” என்ற ஒரு பாடல் மிக அழகாக இருக்கிறது. நம் கவனத்தையும் ஈர்க்கிறது.

ஆனால் பின்னணி இசையில் காதை கிழித்து எடுப்பது போல செய்து “என்னடா படம் இது..?” என்று சோகத்தில் உட்கார்ந்து இருந்தவர்களை மேலும் சோதித்திருக்கிறார் குகன்.

ஒளிப்பதிவு ஓகே என்று சொல்ல வைக்கும் அளவுக்கு எடுத்திருக்கிறார்கள். காட்சி கோணங்களை எப்படி வைப்பது என்பதில் நிறைய இடங்களில் தடுமாறி இருக்கிறார். இயக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு வசீகர மந்திரம். அந்த மந்திரம் தெரிந்தவர்கள்தான் சிறந்த இயக்குநர்களாக வர முடியும்.

குகனுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றன. அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாரென்றால் கதைக்குப் பொருத்தமான திறமையான இயக்குநரை தேர்வு செய்து ஹீரோவாக மட்டும் நடிக்கலாம். அப்படி நடித்தால் அவருக்கும் நல்லது.. தமிழ் சினிமாவுக்கும் நல்லது.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், இசை, பாடல்கள், கலை இயக்கம் என்று கிட்டத்தட்ட 21 துறைகளையும் தன் தோளிலையே சுமந்து, “இந்தப் படத்தை முழுக்க முழுக்க நான் ஒருவனே கையாண்டதாக” புகார் சக்கரவர்த்தி சொல்லியிருக்கிறார். இசை, பாடல்களில் காட்டிய அவ்வளவு தீவிரத்தை மற்றைய துறைகளிலும் அவர் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படம் கமர்சியல் அம்சங்களோடு ஒரு ஆக்ஷன் கதையாக வரப் போகிறது என்று நினைத்த நேரத்தில் படம் ஆங்காங்கே தொங்கிப் போய், குடும்பக் கதையாகத் துவங்கி, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கதை, திரைக்கதையின் போக்கும் மாறிக் கொண்டே போவதைப் பார்த்து,  இந்தப் படத்தை எந்த மாதிரியாக நாம் நினைத்துக் கொள்ளலாம் என்று நமக்கே பயங்கர குழப்பத்தை கொடுத்து இருக்கிறது.

ஒரு நடிகராக சில இடங்களில் ஆகா என்று சொல்ல வைத்திருக்கும் இயக்குநர் குகன், மற்றைய துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை படத்தில் புக் செய்திருந்தால் படம் இதைவிடவும் ஒரு நல்ல படமாக இருந்திருக்கும்.

இப்போது இந்த வங்காள விரிகுடா, கொந்தளிப்பு எல்லாம் இல்லாமல் அமைதியாக உள்வாங்கிய கடலாக தெரிகிறது!!!

RATING : 1.5 / 5

Our Score