full screen background image

திரௌபதி-2 – சினிமா விமர்சனம்

திரௌபதி-2 – சினிமா விமர்சனம்

நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம்.பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் இயக்குநர் ஜி.மோகனின் ஆஸ்தான நடிகரான ரிச்சர்ட் நாயகனாக நடிக்க, நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.  இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத மற்றும் மக்கள் அறிந்திராத வரலாற்றை பேசும் படமாக இது வந்துள்ளது.

’திரெளபதி’ படத்தின் தொடர்ச்சிதான் இந்த ‘திரெளபதி-2’. முதல் பாகத்தின் ஹீரோவின் பூர்வீக வரலாறு பற்றிய கதைதான் இத்திரைப்படம். அது எப்படி 14-ம் நூற்றாண்டுக்கு செல்கிறது என்பதைப் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது.

வரலாற்று ஆசிரியர் அண்ணல் கண்டர் எழுதிய, ‘திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு’ என்ற நூலை தழுவி சில கற்பனைகளுடன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர்  ஜி.மோகன்.

சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி பள்ளியில் படிக்கும்போது நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியா முழுவதையும் ஆண்ட ‘கொய்சாலர் மன்னர்’களைப் பற்றி நமக்குத் தெரியாது.

கர்நாடகாவை தலைமையாக கொண்டு தென்னிந்தியா முழுவதும் 80 பாளையங்களை ஆதிக்கம் செலுத்தி ஆண்டார்கள் ‘கொய்சாலர்கள்’. அதில் ஒரு பாளையத்தை ஆண்டவர்தான் வல்லாள மகாராஜா பரம்பரையினர். இந்தப் பரம்பரையில் வந்த மூன்றாம் வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார்.

இப்போதும் திருவண்ணாமலை கோவிலில் அவர் வடிவமைத்த கிளி கோபுரம் ஒன்று இருக்கிறது. கோவில் அருகில் அவருக்கு சிலையும் இருக்கிறது. இன்றைக்கும் அங்கு அவருக்கு வருடா வருடம் விழா நடக்கிறது.

வல்லாள மகராஜாவுக்கு கீழ் ஆட்சி செய்தவர்கள்தான்  காடவராயர்கள், அவர்கள் விழுப்புரத்தை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. அவர்களைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.

இந்தக் கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று ஆசிரியர்களை சந்தித்து, அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், பல ஆதாரங்கள் அடிப்படையிலும் சுமார் ஒரு வருடமாக கஷ்டப்பட்டு இந்தப் படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.   

சென்ற முதல் பாகத்தில் ரிச்சர்ட் ரிஷியின் மனைவி ஷீலா இறந்து போகிறார். இப்போது அந்த வீட்டில் தன்னுடைய மகளுடன் தடித்து வாழ்ந்து வருகிறார் ரிச்சர்டு.

இந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கின்ற மக்களின் விளை நிலங்கள், அவர்கள் இப்போதுவரையிலும் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்கள் அனைத்தும் வக்பு போர்டுக்கு சொந்தமானது என்று அரசு தரப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் ரிச்சர்டுக்கு வருகிறது. உடனே, அவர் இது குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கிறார்.

இந்தப் பேட்டியை பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து ரக்ஷனா இந்து சூடனும், அவரது தங்கையும் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

வந்தவர்கள் தன்னுடைய தந்தையின் குல தெய்வக் கோவிலை பார்க்க வேண்டும். “அந்தக் கோவிலுக்கு கட்டுமானங்களை எங்க அப்பா தன்னுடைய சொந்த செலவில் செய்து தருவதாக சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.

உடனேயே அவர்களை அழைத்துக் கொண்டு சிதிலடைந்து போயிருந்த அந்த கோவிலுக்கு வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. அந்தக் கோவிலுக்குள் ரக்ஷனா உடனேயே அவர் சாமியாட தொடங்குகிறார். அவருடைய குல தெய்வ சாமியே ரக்ஷனாவின் உடம்பில் ஏறி இயங்கிக் கொண்டிருக்கிறது.

ரக்ஷனாவின் உடலில் புகுந்த தெய்வம் லக்ஷனாவும் போன ஜென்மத்தில் ரிச்சர்ட் ரிஷியும் தம்பதிகள் என்கிறது. மேலும் கூடுதலாக அவர்கள் இருவரும் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தார்கள் எப்படி இருந்தார்கள் என்பதை கதையாக சொல்ல ஆரம்பிக்கிறார் ரக்சனா.

இந்தக் கதை கிபி 1400-வது ஆண்டில் நடக்கிறது. டெல்லியில் துக்ளக் வம்சம் தலையெடுத்து முகமது பின் துக்ளக் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்.

அதே சமயம் மதுரையில் ஆட்சியில் இருந்த பாண்டியர்களை துரத்தி அடித்து அலாவுதீன் கில்ஜி சூறையாடிவிட்டு போனபொழுது தன்னுடைய தளபதியான மாலிக்கபூரை மதுரையில் ஆட்சி செய்யும்படி சொல்லிவிட்டு மீண்டும் டெல்லிக்கே சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு கில்ஜி வம்சம் முடிந்து துக்ளக் வம்சம் டெல்லி அரியணையில் ஏறிய பின்பு மதுரையிலும் மாலிக்கபூர் இல்லாமல் அவருக்கு அடுத்து தம்பாணி என்ற பெயரை கொண்ட ஒரு சுல்தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்.

இந்த சுல்தானின் ஆட்சியில் வரி, வரி, வரி என்று சொல்லி மக்களை பிழிந்து எடுக்கிறார்கள். விவசாயம் பொழிக்கவில்லை. மக்கள் பசி பஜ்ஜினியில் பட்டினியாக இருந்தாலும் வரியை கட்ட வேண்டும் என்று தம்பாணி சுல்தானின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அப்படி வரி கட்டவில்லையென்றாலும், முஸ்லீமாக மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை வீர வல்லாள மகாராஜா ஆண்டு வருகிறார். இவரும் டில்லி மற்றும் மதுரை சுல்தான்களுக்கு கட்டுப்பட்டு மக்களிடம் இருந்து வரி வசூலித்து தருபவர்களாகவே இருக்கிறார்கள்.

ரிச்சர்ட் ரிஷி வீரசிம்மன் என்ற பெயருடன் புகழ் பெற்ற போர் வீரனாக திகழ்கிறார். இவரை வீர வல்லாள மகாராஜா, வீரசிம்ம காடவராயர் என்று பெயர் சூட்டி அவரை தன்னுடைய கருட படையின் தலைவனாக நியமிக்கிறார்.

மதுரை சுல்தான்களுக்கு அடிமையாக விற்பனை செய்வதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து இளம் பெண்களை கடத்திச் செல்கிறார்கள் சுல்தானின் படை வீரர்கள். அந்த இடத்திற்கு நேரில் வந்த வீரசிம்மர் அவர்களை வீழ்த்திவிட்டு பெண்கள் அனைவரையும் காப்பாற்றுகிறார். அந்த பெண்களில் ஒருவராக இருப்பவர்தான் ரக்ஷனா. இவரையே வீரசிம்ம காடவராயர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதெல்லாம் தெரிந்த மதுரையின் சுல்தான் வீரவல்லாள மகாராஜாவின் ஆதிக்கத்துக்குட்பட்ட திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகிறார். இந்தப் போரில் வீரவல்லாளர் மகாராஜா இறந்து போகிறார். ஆனால் அரசனின் மெய்க்காப்பாளராக இருந்த கருட அணியின் தலைவனாக தான் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லையே என்று கதறுகிறார் வீரசிம்ம கடாவராயர். தான் இறந்து விடலாம் என்றும் தற்கொலைக்கு முயல்கிறார். ஆனால், வீர வல்லாள மகாராஜா வீரசிவ காடவராயருக்கு இன்னும் சில குறிப்புகளை கொடுத்து அதையெல்லாம் செய்து முடிக்கும்படி சொல்கிறார்.

இந்த நேரத்தில் தன்னுடைய கணவரான வீரசிம்ம கடாவராயர் வீர வல்லாள மகாராஜாவை காப்பாற்றாமல் அவரை சாக விட்டிருப்பதை பார்த்து கோபத்தில் கணவனை விட்டு பிரிகிறார்.

நேர்மையாக போரிட்டால் வீரசிம்ம காடவராயரைத் தோற்கடிக்க முடியாது என்று நினைத்து மதுரை சுல்தானும் டெல்லி சுல்தானும் இணைந்து காடவராயருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள்.

அதைத் திட்டம்தான் என்ன? வீரசிம்ம காடவராயர் இறுதியில் என்ன செய்கிறார்? டில்லி, மதுரை சுல்தான்களை தோற்கடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் மிச்சம் மீதமான திரைக்கதை.

வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி அவருடைய முகமும், உடல் அமைப்பும் ஒரு போர்க்களத்தில் தளபதியாகவும் போர் வீரர்களுக்கு தலைமை தாங்குபவர் என்ற அடையாளத்தைக் காட்டுகிறது. அவரும் தன்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்து நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் அவரது வேகம் பாராட்டை பெறுகிறது என்றாலும் சில இடங்களில் அவருடைய நடிப்பாக இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

வீர வல்லாள மகாராஜா கதாபாத்திரத்தில் 80 வயது முதியவனாக நட்டி  நட்ராஜ் நடித்திருக்கிறார். ஆனால், அதற்கான உடல் மொழியோ, தோற்றமோ, மேக்கப்போ அவரிடம் இல்லாதது அவருடைய கதாபாத்திரத்தை நம்ப முடியாமல் செய்துவிட்டது. ராஜ கம்பீரமான தோற்றத்தில் நட்டி இருந்தாலும் அவருடைய வசன உச்சரிப்பு, வேகமான நடையுமாக ஒரு இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார் நட்டி நடராஜ்.

திரெளபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்னா இந்துசூடன் அழகோ அழகு. இவருக்கு நிறைய க்ளோசப் காட்சிகளை வைத்து நம்மை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குர். அழகுடன் நிறையவே நடிப்பையும் சேர்த்து தன்னுடைய உடல் மொழியாலும் அழகான உச்சரிப்பாலும் ஒரு அழகு ராணியாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

டெல்லி சுல்தானாக நடித்திருக்கும் சிராக் ஜானி அச்சு சலாக ஒரு வில்லனை போலவே நடித்திருக்கிறார். “வரி கட்டாவிட்டால் கொல்வோம் என்று விரட்டுவதும், தங்களுடைய இஸ்லாமிய மார்க்கத்திற்கு இங்குள்ள இந்துக்கள் அனைவரும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் கொடூரமானவனாகவும் நடித்திருக்கிறார்.

மதுரையை ஆளும் சுல்தான் தம்பாணியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா, ஒரு வில்லனுக்குரிய கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் தன்னுடைய அசத்தலான உடல் மொழியால் மிரட்டியிருக்கிறார்.

டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா தன்னை பலவந்தமாக தூக்கி வந்து ராணியாக உடன் வைத்திருக்கும் கோபத்தில் கணவனை காட்டிக் கொடுக்கும் வேலையை செய்யும்போது பாராட்டை பெறுகிறார். கணவரை அவ்வப்பொழுது குத்தி காட்டி பேசும் ஒரு தைரியமான பெண்ணாக நமக்குத் தெரிகிறார்.

மேலும் கடலூர் சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி சின்னக்தாப்பாத்திரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். மேலும் பரணி, சரவண சுப்பையா, அருண் உதய லட்சுமணன் என்று பலரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது பீரியட் சார்ந்த கதை என்பதால் தங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பணம் செலவழித்து அரங்கத்தை நிர்மாணித்திருக்கிறார்கள். ஆனால், அனைத்து இடங்களுமே செட்ப் என்பது தெளிவாக தெரியும் அளவுக்கு ஒளிப்பதிவாளர் படம் பிடித்து இருப்பதால் இயக்குர் ஒளிப்பதிவாளரைத்தான் கண்டிக்க வேண்டும்.

சண்டை பயிற்சியாளரும் அதிக அளவுக்கு ரிஸ்க் எடுக்காமல் ஓரளவுக்கு சண்டை காட்சிகளை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அதையும் அழகாக தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிலிம்ராஜ் சுந்தர்.

ஜிப்ரானின் இசையில் ஒலிக்கும் அனைத்து பாடல்களுமே அசத்தல். மிக எளிமையான தமிழ் வார்த்தைகள் நம்முடைய காதுகளை அலங்கரித்து இருக்கின்றன. அதோடு பின்னணி இசையிலும் நாடகத் தன்மையோடு இசையமைத்து அந்தக் காலத்தை நமக்கு கண்முன்னே காட்டி இருக்கிறார் ஜிப்ரான்.

ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கலாம். அதே சமயம் இப்போதைய இந்தியாவில் நிலவும் மதக் கலவரங்கள், மத வெறி பிடித்த நிலைமை.. இதையெல்லாம் தூண்டிவிடாமல், மதங்களிடையே மோதலை உருவாக்காமல் இருத்தலும் வேண்டும்.

முஸ்லீம் மன்னர்கள் கொடியவர்கள்.. அவர்கள் வந்தேறிகள்.. நாட்டு  மக்களை சித்ரவதை செய்பவர்கள். பெண் பித்தர்களாக இருப்பவர்கள். கொடூரமான மன நிலை கொண்டவர்கள் என்று முன்கூட்டிய தீர்மானத்தின்படி கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொண்டு கதாப்பாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். இது அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் சாதாரண மக்களிடையே பிளவினை ஏற்படுத்துகிறது.

மேலும் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் நாம் அனைவரும் இந்தியர் என்கின்ற வார்த்தைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு நான் இந்து.. நீ முஸ்லீம்.. அவன் கிறிஸ்தவன் என்று மதத்தை மையமாக வைத்து மக்களிடையே பிளவு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு மத ரீதியாக மக்களை பிரித்து பார்க்கும் திரைப்படங்களை எடுப்பது நியாயமா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.

ராஜாக்கள் காலத்தையும் இப்போதைய காலத்தையும் நாம் சமமாக பாவிக்கவே கூடாது. அது கடந்த காலம். இது நிகழ் காலம். அந்தக் காலத்தில் மக்களின் மன நிலையும், ஆள்பவர்களின் மன நிலையும் எப்படி இருந்ததோ அப்படித்தான் அன்றைக்கு நடந்து கொண்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அதே போல் அரசர்களுக்கு பதிலாக ஆட்சியாளர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடம் தங்களுடைய அதிகாரத்தை காட்ட நினைப்பது நிச்சயமாக தவறு.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உலகத்தின் உயரிய தத்துவத்தை சொன்ன தமிழர்கள் நாம். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.

முகலாயர்கள், கில்ஜி வம்சத்தினர், துக்ளக் ம்சத்தினர் என்ற பலரும் உலக வரைபடத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அந்த கால ராஜாக்களின் வழக்கப்படி படை எடுத்து வந்து இந்தியாவை ஆண்டார்கள். இதில் நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

அவர்களின் காலத்தில் மத மாற்றம் கத்தி முனையில் நடந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக அவர்களுடைய வழி வழியாக வந்த இந்தியர்கள் இப்போது இந்திய முழுவதும் பரவி இருக்கும் நிலையில் அவர்களை அன்னியர்களாக பாவிக்கக் கூடாது. அது மிகப் பெரிய தவறு.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை முஸ்லிமாக மதம் மாற்றினார்கள் என்கின்ற ஒரு விஷயத்தை மக்களிடையே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்தப் படத்தின் நினைத்திருக்கிறார். அதனால்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் இந்த காலத்தில் இப்டிப்பட்ட படம் தேவையா என்பதுதான் நமது கேள்வியாக இருக்கிறது.

மற்றபடி இந்தத் திரைப்படம் இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பக் கூடிய கருத்துக்களை கொண்டிருந்தாலும், திரைப்பட ரசிகர்களுக்கு படமாக கொடுத்ததில் இயக்குர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரது இயக்கம் சிறப்பானதாக இருந்தாலும் சர்ச்சையான விஷயங்களை மட்டுமே நாம் படம் எடுப்பேன் என்று சொல்வது போல அவர் இயக்கிக் கொண்டிருப்பது அவருக்கு வேண்டுமானாலும் சொத்து சேர்ப்பதற்கு பயன் அளிக்கலாம். ஆனால், தமிழ் சினிமா துறைக்கு நிச்சயமாக இத்திரைப்படம் ஒரு தேவையற்ற ஆணியாகவே தெரிகிறது.

RATING : 3 / 5

 

Our Score