விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்யன்’.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வெஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது இத்திரைப்படம். ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தில் துவங்கும் இந்தப் படம் ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருண்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
பொதுவாக திரைப்படங்களின் கதையை விமர்சனத்தில் முழுமையாக சொல்லி விடாதீர்கள் என்பார்கள். அல்லது திரைக்கதையைச் சொல்லி விடாதீர்கள் என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் கதை கருவையே சொல்ல முடியாத ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிக் விஷன் என்ற தனியார் தொலைக்காட்சியில் பொருளதிகாரம் என்கின்ற தலைப்பில் நேருக்கு நேர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த வாரம் அவருடனான நேரடி பேட்டியில் கலந்து கொள்ள புகழ் பெற்ற நடிகரான கைலாஷ் வந்திருக்கிறார்.
அவருடன் ஷ்ரத்தா பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து வரும் செல்வராகவன் தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கைலாஷை சுட்டு காயப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக சேனலில் தெரிவதால் நாடு முழுவதும் வைரலாகி அனைவருமே சேனலை கவனிக்கிறார்கள்.
அப்போது அவர்களிடம் பேசும் செல்வராகவன் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு கொலையாக செய்யப் போவதாக அடித்துச் சொல்கிறார். “அந்தக் கொலைகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் சாகப் போகும் நபர் யார் என்பதை நான் சூசகமாக வெளியிடுவேன்” என்கிறார்.
போலீஸ் சேனல் ஸ்டுடியோவை சுற்றி வளைக்கிறது. அதிரடிப் படையினர் ஓடி வந்து செல்வராகவனை பிடிப்பதற்கு எத்தனிக்கும்போது சொல்லுவராகவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
“ஏதோ பைத்தியக்காரன் செஞ்சான்.. முடிஞ்சிருச்சு போல இருக்கு” என்று போலீஸ் அன்றைய இரவை கழிக்க மறுநாளே சொல்லி வைத்தார்போல ஒரு கொலை நடக்கிறது.
இந்தக் கொலையை விசாரணை செய்வதற்காக டிபார்ட்மெண்டில் யூத்தான, யெங்கான, இளமையான புதிய இன்ஸ்பெக்டரான விஷ்ணு விஷாலை தேர்வு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள்.
விஷ்ணு விஷால் செல்வராகவன் பற்றிய பின்புலத்தை விசாரிக்க துவங்க, அதேசமயம் ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் ஜாதகத்தை தோண்டி எடுத்து யார், யார் எதில் கனெக்ட் ஆகிறார்கள் என்பதையெல்லாம் தேடிப் பார்த்து ஓய்ந்து போகிறார்.
ஆனால் செல்வராகவன் சொன்னது போலவே ஒவ்வொரு நாளும் கொலைகள் நடக்க காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறது.
இறுதியில் விஷ்ணு விஷால் செல்வராகவன் யார் என்பதைக் கண்டுபிடித்தாரா? இல்லையா..? கொலைகள் எப்படி நடந்தன? ஏன் நடந்தன..? என்பதை கண்டுபிடித்தாரா என்பதுதான் இந்த ‘ஆர்யன்’ என்ற படத்தின் திரைக்கதை.
விஷ்ணு விஷாலுக்கு இப்படியொரு புதுமையான கதை, திரைக்கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஏற்கனவே இதுபோன்ற தேடுதல் வேட்டை உள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவிதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மீசையில்லாமல், வழு வழு ஷேவோடு சினிமாவில் காட்டப்படும் போலீசாகவே படத்திலும் இருக்கும் விஷ்ணு விஷால், ஒரு பக்கம் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மனைவியின் டைவர்ஸ் கேட்டு நடத்தும் போராட்டத்திலும் பங்கு கொண்டு, இன்னொரு பக்கம் செல்வராகவனின் வீடியோ தினம் தோறும் டிவியில் ஒளிபரப்பாகி அவரை சுற்றலில் விடும் காட்சிகளிலும் மனிதர் பரிதவிக்க வைத்திருக்கிறார். ஓட்டமாய் ஓடுகிறார். நமக்கே பாவமாய் இருக்கிறது. “இந்த சின்ன புள்ள தலையில இவ்ளோ பெரிய சுமையா?.. என்று இயக்குநரை கேட்க வேண்டும் போலிருக்கிறது.
தன் மனைவியை விட்டு பிரிய மனசில்லாமல், அதே சமயம் தன்னுடைய ஈகோவையும் விட்டுக் கொடுக்காமல், தன்னுடைய போலீஸ் வேலையையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து மனம்விட்டு பேச முடியாத ஒரு தருணத்தில் விஷ்ணு விஷால் தவிக்கின்ற அந்த தவிப்பு ஒரு பக்கம். இப்படி வேலை முக்கியமா குடும்ப முக்கியமா என்று பார்க்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் விஷ்ணு விஷால் அழகாக நடித்திருக்கிறார். அதேபோல் தேடுதல் வேட்டையிலும் சின்ன சின்ன விஷயங்களைகூட நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் ஒரு துப்பறியும் வித்தகராகவும் தன்னை காட்டி இருக்கிறார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய முக அழகைவிட அவர் அணிந்திருந்த ஆடைகள் அத்தனையும் அழகோ அழகு. காஸ்ட்யூம் டிசைன் செய்தவரையும், உடைகளை ஏற்பாடு செய்தவரையும் மனதார பாராட்டலாம். அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிரச்சனைக்குள் அவரும் உள்ளே வந்து கதைக்கு துணை கொடுப்பது சிறப்பு.
விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசாவும் அழகிதான். அதுவும் குளோசப் காட்சிகளில் ஜொலிக்கிறார். ஆனால், அவருக்கான காட்சி அமைப்புகள் இதில் குறைவு என்றாலும் மனைவி கதாபாத்திரத்திலும் டைவர்ஸ் கேட்டு போராடும் பெண்ணாகவும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
செல்வராகவனுக்கு இது போன்ற கேரக்டரில் இது எத்தனாவது படம் என்று தெரியவில்லை. ஆனாலும். மனிதர் ஒவ்வொரு முறையும் அசர வைக்கிறார். ஒரு காலத்தில் பிரகாஷ் ராஜ்தான் இது போன்ற கேரக்டர்களை அல்வா சாப்பிடுவது போல சாப்பிடுவார். ஆனால், இப்பொழுது செல்வராகவனுக்கு அனைத்துமே அழகாய் அமைந்திருக்கிறது. அவருடைய முகத்தோற்றமும், அவருடைய உடல் மொழியும் சேர்ந்து ஒரு மிகச் சிறந்த வில்லனை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறது.
போட்டி சேனலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை பார்த்து எப்படியாவது டி.ஆர்.பி.யை ஏற்றிவிட்டே ஆகவேண்டும் என்ற துடியாய் துடிக்கும் கருணாகரனின் கதாப்பாத்திரம் உண்மையானது. அவரைப் போன்ற பல அப்பாவிகள் இப்போதும் பல டிவி சேனல்களில் மாட்டி, முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றும் படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கதைகளும் அவர்களது பின்புலங்களும் காட்டப்படுவதால் அதற்கு ஏற்றவாறு அவர்கள் நடித்து சபாஷ் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்.
படம் முழுவதும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். கலர் கிரேடிங் செய்யாமல் அப்படியே படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு வித்தியாசமான ஒளிப்பதிவுதான் என்பதை நமக்கு காட்டி இருக்கிறார்.
ஜிப்ரான் பாடல்களைவிடவும் பின்னணி இசை அசத்தலாக செய்து இருக்கிறார். அதுவும் பரபரப்பாக ஓடும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்த்து ஓட வைப்பது போல ஒலிக்கும் பின்னணி இசை நம்முடைய கவனத்தை ஈர்த்து படத்தை பார்க்க வைத்திருக்கிறது.
ஷான் லோகேஷின் படத் தொகுப்பு கச்சிதம் என்று சொல்லலாம். ஒரு காட்சிக்கும், அடுத்தக் காட்சிக்கும் இடையில் ஒரு வேகத்தைக் கூட்டுவதுபோல இயக்குநர் எடுத்துக் கொடுத்த காட்சிகளை கச்சிதமாக தொகுத்து அளித்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் இதுவரையில் சொல்லப்படாத ஒரு கதை, திரைக்கதையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அது ருசிகரமானது. அதே சமயம் இப்படியும் யோசிக்கலாம் எனவும் சொல்ல வைத்திருந்தாலும்… இப்படியெல்லாம் செய்யலாமா என்கின்ற ஒரு எதிர் கருத்தும் இயக்குநர் மீது வீசப்படுகிறது.
சினிமா என்றாலே மரபுகளை உடைப்பதும், சம்பிரதாயங்களை மீறுவதும், கண் கட்டு வித்தை காட்டுவதும்தான். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் தான் நினைத்த அந்த திரைக்கதையை பொய்யில்லாமல் படம் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
இதற்கெல்லாம் கொலையா? இவர்களை எல்லாம் கொலை செய்தால்தான் இவர்கள் பற்றிய உண்மை மற்றவர்களுக்கு தெரியுமா? நாட்டு மக்களுக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் தினமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி சொல்வதற்கு அவர்கள் தியாகிகளாக வேண்டுமா/ என்றெல்லாம் பல கேள்விகள் நம் முன்னே இருந்தாலும், இந்தப் படம் கடைசியாக பேசி இருக்கும் விஷயம் நிச்சயம் புதுமையானது.
கொஞ்சம் அதிகப்படியான ஆங்கில வசனங்களை மட்டும் நீக்கிவிட்டு அதை தமிழிலேயே பேச வைத்திருக்கலாம். விறுவிறுப்பான ஒரு திரைக்கதையில் நம்மிடையே இருக்கும் பல தியாகிகளை இந்தப் படம் நமக்கு உணர்த்தி காட்டுகிறது.
இது மட்டுமில்லை.. கவனிப்பாராற்று இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பிரச்சனைகளையும், தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங் என்கின்ற ஒரே விஷயத்திற்காக எப்படி அல்லலோகப்படுத்துகிறார்கள்.. எப்படி எல்லாம் கதைகளை திணிக்கிறார்கள்.. அதே சமயம் பொதுமக்களும் அந்த இன்ஸ்டன்ட் காப்பி பொடி மாதிரியான வைரலான செய்திகளையும், நிகழ்வுகளையும் ஏன் ரசிக்கிறார்கள்… அப்படியான ரசிகர்கள் இருக்கப் போய்தானே தொலைக்காட்சிகள் இப்படியெல்லாம் ட்ரெண்டிங், வைரல், பிரேக்கிங் நியூஸ் என்று அழைக்கிறார்கள்.
இதையெல்லாம் சுட்டிக் காட்டி ஒவ்வொருவருக்கும் சில தார்மீகமான கடமைகள் உண்டு. அதை நாம் செய்யாவிட்டால் யாரோ ஒருவர் அதனால் பாதிக்கப்படுகிறார் என்கின்ற ஒரு முக்கியமான கருத்தை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்லி இருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.
ஆர்யன் என்ற பெயருக்குக்கூட இந்தப் படத்தில் ஒரு தொடர்பு உண்டு. ஆனால், அதையும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சஸ்பன்ஷில் வைத்துவிட்டார் இயக்குநர்.
நீங்கள் தியேட்டரில் படம் பார்த்தால்தான் ‘ஆர்யன்’ என்ற தலைப்புக்கான காரணம் என்னவென்பது உங்களுக்கு புரியும். இதுதான் இந்தப் படத்தின் வெற்றி.!
RATING : 3.5 / 5
 
 
                                                                     
     
                                                             
                                
 
  
  
 







