அடிதடி, வெட்டு, குத்து, போதை வன்முறை பாதையில் தமிழ் சினிமாவை சில பிரபல இயக்குநர்கள் அழைத்துச் சென்றாலும், மறுபக்கம் புதுமுக இயக்குநர்கள் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் ஃபேமிலி படங்களை கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களில் வெளியான ‘அயோத்தி’, ‘டாடா’, ‘பார்க்கிங்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘அஞ்சாமை’, ‘மருதம்’, ‘நந்தன்’, ‘3 பிஎச் கே’, ‘லவ் டுடே’, ‘அமரன்’, ‘இட்லி கடை’, ‘குடும்பஸ்தன்’, ‘குட் நைட்’ உள்ளிட்ட பல படங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் மற்றும் ஒரு படம் இணைய காத்திருக்கிறது. அதுதான் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம்.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள இந்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தில் ரியோ ராஜும். மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே ரியோ ராஜும், மாளவிகாவும் இணைந்து நடித்த ‘ஜோ’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் சொல்கிறது.
இந்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம் வருகிற அக். 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.









