full screen background image

வேடுவன் – வெப் சீரீஸ் – விமர்சனம்

வேடுவன் – வெப் சீரீஸ் – விமர்சனம்

இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, இந்த வெப் சீரீஸை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை விபின் பாஸ்கர்.

தமிழ் திரையுலகத்தில் பிரபலமான நடிகர் கண்ணா ரவி. கடைசியாக அவர் நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் கண்ணா ரவி. எப்படியாவது ஒரு புதிய கதையில் நடித்து வெற்றி பெற வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் அவரிடம் ஒரு இணை இயக்குநர் வந்து கதை சொல்கிறார். அந்த கதையைக் கேட்கும் கண்ணா ரவி கதை சொன்னவிதத்திலேயே அந்தப் படத்துக்குள் ஆழ்ந்துவிடுகிறார். இப்பொழுது கண்ணா ரவி அந்த கேரக்டராகவே வாழ, படம் நம் கண் முன்னே விரிகிறது.

கண்ணா ரவி ஒரு ரகசிய போலீசாக போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்து வருகிறார். காவல்துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவிடும் என்கவுண்டர்களை சத்தம் இல்லாமல் செய்து முடிக்கும் ஒரு இன்ஸ்பெக்டர்தான் கண்ணா ரவி.

போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி பிச்சைக்காரர் மாதிரியான ஒரு கோலத்தில் கடற்கரை பகுதிகளில் சுற்றி வருபவர், அந்தப் பகுதியின் மிகப் பெரிய தாதா ஒருவரை நெற்றி பொட்டில் சுட்டு கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். ஆனால் போலீஸ் அதற்கு பின்பு நாங்கள்தான் அவரை அக்கவுண்டர் செய்தோம் என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறார்கள்.

இப்பொழுது கண்ணா ரவிக்கு அடுத்ததாக ஒரு அஸைஸ்மெண்ட் தரப்படுகிறது. இந்த அசைன்மெண்டை செய்து முடிப்பதற்காக ஊருக்கு வருகிறார் கண்ண ரவி. அந்த ஊரில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் ஆதி என்ற சஞ்சீவைத்தான் அவர் என்கவுண்டர் செய்ய வேண்டும்.

துவக்கத்தில் மிகப் பெரிய தாதாவாக அடிதடி, வெட்டுக் குத்து, கொலைகளையெல்லாம் செய்த சஞ்சீவ் இப்பொழுது அதை எல்லாம் விட்டுவிட்டு அமைதியாக, தன்னுடைய மனைவியுடன் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

சஞ்சீவை கொலை செய்வதற்காக அதே ஏரியாவில் இருக்கும் ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைக்கு செல்கிறார் கண்ணா ரவி.

இந்த நேரத்தில்தான் கண்ணா ரவி தன்னுடைய கல்லூரி காலத்து காதலியான ஷிரவத்தா ஸ்ரீகாந்தை பார்த்து விடுகிறார். பழைய காதலியைப் பார்த்தவுடன் ஒரு பாசத்தில் அவரை தேடிப் பிடித்து பேசுகிறார் கண்ணா ரவி. பின்பு சஞ்சீவின் மனைவிதான் தன்னுடைய முன்னாள் காதலி என்பதை அறியும்போது பெரும் அதிர்ச்சியாகிறார் கண்ணா ரவி.

போலீஸ் கமிஷனர் அடிக்கடி போன் செய்துஎன்கவுண்ட்டர் என்ன ஆச்சு..? ஏன் இன்னும் ஆதியை முடிக்கலை..?” என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் தன்னுடைய டிபார்ட்மெண்ட் பாசம்.. இன்னொரு பக்கம் முன்னாள் காதலியின் மீதான பாசம் இந்த இரண்டில் எது வென்றது?.. சொன்னபடி ஆதியை என்கவுண்ட்டர் செய்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸின் திரைக்கதை.

‘வேடுவன்’ என்பதற்கு ‘வேட்டையன்’, ‘வேட்டைக்காரன்’ என்று அர்த்தம் கொள்ளலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் நாயகன் கண்ணா ரவியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றவாறு பொருத்தமாகத்தான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

கண்ணா ரவி நிறைய படங்களில் நடித்தது போன்ற ஒரு அனுபவத்துடன் இந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். போலீஸ்காரராகவும். பிச்சைக்காரராகவும். சமையல்காரர் ஆகவும் மாறி டிபார்ட்மெண்ட் பாசத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் செய்கின்ற அந்த வேலையில் அவர் காட்டுகின்ற அதீத முனைப்பை தன்னுடைய நடிப்பினால் அழகாகக் காட்டியிருக்கிறார்.

சஞ்சீவை என்கவுண்டர் செய்ய வேண்டுமா.. வேண்டாமா.. என்பது பற்றி அவர் யோசித்து குழப்பமாகும் இடத்தில் அவருடைய பரிதாபப்பட்ட நடிப்பினை காண்பித்து இருக்கிறார்.

ஆதிநாதன் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் சஞ்சீவ் தன்னுடைய சீரியல் நடிப்பின் அனுபவத்தை வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் ஒரு அழுத்தமான தாதாவாகவும், அதே சமயம் அன்பான கணவனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் உருவ ஒற்றுமை தாதா கேரக்டருக்கு பொருத்தமாக இல்லையே..?!

தன்னுடைய வீட்டுகுள்ளேயே வந்து அமர்ந்திருக்கும் கண்ணா ரவி நிச்சயம் போலீஸ் ஆள்தான் என்பதை தன்னுடைய அனுபவ அறிவால் கண்டு பிடிக்கும் சஞ்சீவ், அதற்குப் பிறகு கண்ணா ரவியிடம் பேசும்விதம், நடந்து கொள்ளும்விதம் அனைத்திலும் ஒரு சஸ்பென்சை கூட்டிக் கொண்டே சென்றிருக்கிறார். அந்த வகையில் இந்த வெப் சீரியஸின் எபிசோடுகளை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் சஞ்சீவ்.

சஞ்சீவின் மனைவியாக, பழைய காதலியாக நடித்திருக்கும் வினுஷா தேவி ஒரு திராவிட அழகி. ஆனால் சினிமாவுக்கு ஏற்ற முகம். அழகு தேவையில்லை., நடிப்பு போதும் என்பதுபோல தன்னுடைய இயல்பான நடிப்பையே அனைத்து எபிசோடுகளிலும் காண்பித்திருக்கிறார்.

கண்ணா ரவியின் மனைவியாக நடித்திருக்கும் ஷ்ரவினிதா ஸ்ரீகாந்த் ஒரு பொறுப்பான அம்மாவாகவும், கனிவான மனைவியாகவும் நடித்திருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்குமான பேச்சுக்கள் மிகவும் மெச்சூர்ட்டாக இருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல் தன்னுடைய முன்னாள் காதலியை தான் சந்தித்த விதத்தை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் கண்ணா ரவியின் அந்தப் பேச்சுக்களும் நடிப்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது.

தாதாவின் மனைவியாக நடித்திருக்கும் ரேகா நாயர் தன்னுடைய கணவனின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும் என்று நினைக்கும் ஒரு தாதா மனைவியை அப்படியே நம் கண் முன்னே காட்டி இருக்கிறார். தன்னுடைய கணவரின் இறப்பில் அவர் போடுகின்ற அந்த ஆட்டம் வெறித்தனம்தான்.

மேலும் மற்றைய கதாபாத்திரங்களும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார்கள். அதிலும் சஞ்சீவின் தளபதியாக நடித்திருப்பவரின் நடிப்பு பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது.

பல தளங்களில் படம் பயணிப்பதால் ஒளிப்பதிவாளர் சீனிவாச தேவராஜின் ஒளிப்பதிவு கொஞ்சம் ஏற்றம் இறக்கமாகத்தான் நமக்குத் தெரிகிறது.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை கொஞ்சம்கூட நம் கண்களை அகல விடாமல் இந்த சீரிஸ் கதைக்குள்ளாக இழுத்துக் கொண்டுள்ளது. வெப் சீரிஸின் இலக்கணத்தோடு ஒவ்வொரு சீரியஸின் முடிவும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று பார்ப்பவர்களை ஏங்க வைப்பது போல காட்சிகளை கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சூரஜ் கவி.

“பல பொய்களில் சிறிதளவு உண்மை கலந்திருக்கும். பல உண்மைகளில் சிறிதளவு பொய்யும் கலந்திருக்கும். அதிகம் பேர் பேசும் ஒரு பொய்யான விஷயம் உண்மையாகிவிடுகிறது. குறைவான பேர் பேசும் உண்மை எண்ணிக்கையின் அடிப்படையில் பொய்யாகிவிடுகிறது” என்ற உண்மையை மட்டுமே இத்திரைப்படம் முன் வைக்கிறது.

திரைக்கதையின்படி பார்த்தால் இந்த வெப் சீரீஸில் பல லாஜிக் மீறல்கள் தெரிகின்றன. 2003-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் காலையில் மெரீனா பீச்சில் தன்னுடைய கூட்டாளிகளுடன் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சென்னையின் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்ட்டர் செய்த சம்பவத்தை ரீ ரைட் செய்வதைப் போல முதல் என்கவுண்ட்டர் நடக்கிறது. ஆனால் ஏன் இந்த என்கவுண்ட்டர் என்பதை விளக்க வேண்டாமா.. கொலை முயற்சியின்போதோ, கொலையின்போதோ நடந்தால்தான் அது என்கவுண்ட்டர். ஆனால் போலீஸே திட்டமிட்டு செய்வதெல்லாம் திட்டமிட்ட கொலைதான்.

இந்த வித்தியாசமே தெரியாத ஹீரோவுக்கு கடைசியில் ஆதியைக் கொலை செய்யும்போதுதான் மனிதாபிமானமும், என்கவுண்ட்டருக்கு எதிரான எண்ணங்களும் தோன்றுகிறதாம். இது காதலினால் தோன்றியதா.. அல்லது ஆதியின் விட்டுக் கொடுத்தலினால் ஏற்பட்டதா என்பதை ஹீரோவும் சொல்லவில்லை. இயக்குநரும் திரைக்கதையில் காட்டவில்லை.

இதேபோல் வினுஷா தேவி கிளைமாக்ஸில் சஞ்சீவ் பற்றிச் சொல்வதெல்லாம் போங்காட்டம். ரோட்டில் அமர்ந்திருந்தவரிடம் “சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டவுடனேயே அவருடன் வந்துவிட்டாராம் வினுஷா. அதோடு, “அவருக்கு மனைவி இல்லாத குறையைவிடவும் 2 பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கத்தான் இவரை கல்யாணம் செய்தேன்” என்று சொல்வதெல்லாம் நெஞ்சை நக்கும் டயலாக். இதையெல்லாம்விட “அவர் என்னை இதுவரையிலும் தொட்டதே இல்லை” என்று சொல்வது ‘அடேங்கப்பா’ ரகம்..

அறிமுகப் படலத்திலேயே இத்தனை கொலைகளை செய்தவர் என்று சொல்லிவிட்டு பின்பு சின்னக் குழந்தைகளை வைத்து “தெய்வமே” என்று பாட வைத்து ஆதிக்கு ஹிப் ஏத்துவதெல்லாம் எந்த வகை திரைக்கதை இயக்குநரே..?

இப்படி சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இந்த சீரீஸில் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பரவாயில்லை ஒரு அழகான கதையில், அளவான கதாபாத்திரங்களோடு சுமாராக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையில் கிரைம், சஸ்பென்ஸ், திரில்லரை அழகாக வெளிக்கொணர்ந்திருப்பதால் இந்தத் தொடரை “பார்க்கலாமே” என்று சொல்லலாம்.

RATING : 3.5 / 5

Our Score