full screen background image

சரீரம் – சினிமா விமர்சனம்

சரீரம் – சினிமா விமர்சனம்

G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த நமது சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் சரீரம்”. 

புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம், தயாரிப்பு – G.V. பெருமாள்இசை – V.T. பாரதிராஜாஒளிப்பதிவு டோர்னலா பாஸ்கர் K, பரணி குமார்எடிட்டிங் லக்‌ஷமன்நடன இயக்கம் – J மனோஜ்ஸ்டண்ட் தவசி ராஜ்எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – P சரத்குமார், பத்திரிக்கை தொடர்புமணி மதன்.

கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடைதான் இந்த சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.

இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பதுதான் இபடத்தின் கதை.

காதலுக்காக பல்வேறு தியாகங்களை செய்யும் கதை, திரைக்கதையில் பல திரைப்படங்களை நம் முன்பே பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு காதல் கதையை நாம் பார்த்திருக்கவே முடியாது. இதுதான் முதல்முறை.

நாயகன் தர்ஷன் பிரியனும், நாயகி ஷர்மிஷாவும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். படிக்கும்பொழுதே அவர்களுக்குள் காதலும் ஏற்படுகிறது. வழக்கம்போல் இந்தக் காதலுக்கே நாயகியின் குடும்பத்தார் பெரும் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். கூடவே நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள்.

கொலை முயற்சிவரை போய்விட்டதால் இதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று காதலர்கள் நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் எடுக்கின்ற ஒரு முடிவுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸான திரைக்கதை. அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன் புதுமுகம் என்றாலும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நடிப்பு, நடனம், ஆக்சன் என்று மூன்று வகையான பரிமாணங்களில் தன்னால் முடிந்த அளவுக்கான உழைப்பை கொடுத்திருக்கிறார். காதலிக்காக, தன்னுடைய காதலுக்காகவும் எதையும் தியாகம் செய்யும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டு கடைசியில் தன்னுடைய சரீரத்தையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு இறங்குகிறார். அதனால்தான் இந்தப் படத்துக்கு சரீரம் என்று பொருத்தமான பெயரை வைத்திருக்கிறார்கள்.

தன்னுடைய ஜென்டரை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு போகும் நாயகன்.. அதன் பின்பு அதில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், வலிகள் இதையும் தன்னுடைய தேர்ந்த நடிப்பில் காண்பித்து இருக்கிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் ஷார்மிஷா அழகான கலையான முகம். ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகி தன்னுடைய பெற்றோர்களிடமிருந்து நாயகனை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதால் அவர் எடுக்கும் அந்த சரீரத்தை மாற்றும் முயற்சியான அழகான தன்னுடைய நடிப்பினால் நியாயப்படுத்தி இருக்கிறார் ஷார்மிஷா.

வில்லனாக  நடித்திருக்கும் ஜெய் மனோஜ் தன்னுடைய வில்லத்தனத்தை கொஞ்சம் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் புதுப்பேட்டை சுரேஷ், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜி.வி.பெருமாளும் தங்களால் முடிந்த நடிப்பை காண்பித்து தங்களுடைய இருப்பைக் காட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்த டெர்னலா பாஸ்கரும், பரணி குமாரும் மிக எளிமையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கியிருக்கும் விதம் சிறப்பு. படம் எடுக்கப்பட்ட இடங்கள் எல்லாம் மக்கள் அதிக வாழும் இடங்களாக இருப்பதால் அந்த இடத்தின் எளிமையோடு பதிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான். மற்றபடி பின்னணி இசையை ஓரளவுக்கு கவனம் ஈர்ப்பு இருப்பதுபோல் இசையமைத்திருக்கிறார்.

எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு புதுமை இருந்தால்தான் அது கவனிக்கப்படும். அதனாலேயே இந்த படத்தின் இயக்குநர் ஜி.வி.பெருமாள் இதுவரையில் காதலர்கள் யாரும் நினைத்து பார்த்திருக்காத அளவுக்கான திரைக்கதையில் இந்தப் படத்தை வித்தியாசமாக உருவாக்கி இருக்கிறார்.

காதலர்கள் இருவரும் தங்களுடைய சரீரத்தை மாற்றிக் கொண்ட பின்பு என்ன நடக்கிறது என்பதையும் திருநங்கைகள், திருநம்பிகள் தங்களுடைய உடல் அமைப்பை மாற்றிய பின்பு சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்னவாக பேசப்படுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? என்பதையும் இந்தப் படத்தின் இயக்குநர் ஜி.வி.பெருமாள் வித்தியாசமான சிந்தனையில் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

ஆனால் இப்படியான தங்களுடைய உடலை மாற்றிக் கொள்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை இயக்குநர் தன்னுடைய எழுத்தில் பதிவு செய்யாமல், தன்னுடைய பேச்சிலும் பதிவு செய்யாமல் நீதிபதி இது தவறு என்று சொல்லி தீர்ப்பளிப்பது போலவே எழுதி இருக்கிறார்.

இதனாலேயே இவர்கள் செய்வது சரி என்று சொல்வதைப்போல படம் அமைந்துவிட்டது. ஆனால் நிச்சயம் இந்தக் காதலர்கள் இந்தப் படத்தில் செய்கின்ற ஒரு மாற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுவொரு தப்பான திரைக்கதை என்பதை மட்டும் நாம் அழுத்தமாக சொல்லிக் கொள்கிறோம்.

இந்தப் படத்தை பார்க்கும் காதலர்கள் யாராவது ஒருவர் இது மாதிரி செய்ய முயற்சித்தாலும், அது நிச்சயம் சமூகத்திற்கு இயக்குநர்செய்திருக்கும் அநீதி என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

திருநங்கை, திருநம்பி ஆவதெல்லாம் அவர்களின் வாழ்க்கையே புரட்டிப் போடுவது போன்ற ஒரு செயல். இயல்பாகவே, பிறவியில் இருந்தே அப்படி ஒரு மனநிலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை நம்மால் எதுவும் சொல்ல முடியாது. செய்ய முடியாது. அது ஆண்டவனின் படைப்பு என்று நாம் அவர்களை சுதந்திரமாக அவர்கள் போக்கில் விட்டுவிடலாம்.

ஆனால், சாதாரண காதல் எதிர்ப்புக்காக இப்படி உருவம் மாற்றம் செய்து கொண்டால் இது என்னுடைய பிள்ளை என்று எந்த பெற்றோரும் தேடி வந்து காதலர்களைப் பிரித்து செல்ல மாட்டார்கள் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

இது போன்ற காதல் எதிர்ப்பு திரைப்படங்களில் எத்தனையோ திரைக்கதைகள் மிக சுவாரசியமாக வேறு மாதிரியான சிந்தனைகள் எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் படம் சொல்லும் அளவுக்கு காதலர்கள் யாரும் இறங்கக் கூடாது என்பதுதான் நமது கருத்து. வேண்டுகோளும் அதுவே!

மொத்தத்தில் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை நமக்கு தவறாகப்பட்டாலும் இயக்குநர் ஜி.வி.பெருமாளின் இயக்கத்தினால் படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

இந்த சரீரம் திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்!

RATING : 3 / 5

Our Score