இந்தப் படத்தை சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பாண்டுரங்கன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரிஷி ரித்விக், ஆராத்யா, வினோதினி வைத்தியநாதன், பி.பாண்டுரங்கன், சரவணன், சாய் தீனா, காமராஜ், சென்றாயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – ரோபின் பாஸ்கர், எழுத்து, இயக்கம் – கஜேந்திரன்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நடைபெறும் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தும் திரைப்படம் இது.
நாயகன் ரிஷி ரித்விக் போலீஸாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரைவிடவும் இவருடைய அக்காவான வினோதினிதான் இவரை எப்படியாவது போலீஸ் டிரஸ்ஸில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு ரித்விக்கை உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் டெம்ப்லேட்படி இவருக்கும் ஒரு காதல் இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஆராத்யாவை தீவிரமாகக் காதலித்தும் வருகிறார்.
வினோதினி ரோட்டோரத்தில் டிபன் கடையை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நேரத்தில் அவருடைய இதயத்தில் பிளாக் இருப்பதாக தெரிய வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இதயத்தில் பிளாக் எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்த பின்பு அவர் இறந்து விடுகிறார். ஆபரேஷன் செய்து கொண்டிருக்கும்போதே அவருக்கு கடுமையான மாரடைப்பு வந்ததால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
முதலில் இதை நம்பும் ரித்விக் பின்பு தன்னுடைய அக்காவுக்கு இதயத்தில் எந்த ஆபரேஷனும் செய்யப்படவில்லை. அதற்கு மாறாக அவருடைய கிட்னி மட்டும் களவாடப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்கிறார்.
இதை அடுத்து தான் போலீசுக்கு தேர்வாக இருப்பதையெல்லாம் மறந்துபோய் இந்த மருத்துவமனையை நிர்வாகத்துடன் சண்டையிடுகிறார். அடுத்து போலீஸிடம் சண்டையிடுகிறார்
தன்னுடைய அக்காவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடுகிறார்? அவருடைய போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? அவர் போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தக் ‘குற்றம் தவிர்’ படத்தின் கதை திரைக்கதை.
‘அட்டு’ படத்தில் அறிமுகமாகி அதை அடுத்து மேலும் பல படங்களில் நடித்திருக்கும் ரிஷி ரித்விக், இந்தப் படத்தில் நாயகனாகவே நடித்திருக்கிறார். போலீசாக வேண்டும் என்ற அக்காவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர் எடுக்கின்ற முனைப்பும், முயற்சிகள் மூலம் ஒரு சாதாரணமான கேரக்டராகவே நடித்திருக்கிறார்.
காதல் போர்ஷனில் காதலனாகவும், அக்காவின் அருமை தம்பியாகவும் அழகாய் நடித்திருக்கும் ரிஷி ரித்விக் இப்போது நடிப்பில் கொஞ்சம் தேறி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா அழகாக இருக்கிறார். அதே சமயம் அவருடைய நடிப்பும் சிறப்பு. நடனத்திலும் திறமைக்காரராக தெரிகிறார். இன்னும் பல படங்களில் நடிக்க நமது வாழ்த்துக்கள்.
அக்காவாக நடித்திருக்க வினோதினி வைத்தியநாதன் எப்போதும் போலவே தன்னுடைய 100% சதவிகித நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார். ஒரு பக்கம் தம்பியை எப்படியாவது போலீசாக வேண்டும் என்று ஆசை… இன்னொரு பக்கம் தன்னுடைய மகளை விட்டுவிட்டு போகும்படியான சூழல் என்பதால் அவர் வருத்தப்படும், கண் கலங்கும் காட்சிகளிலெல்லாம் ஒரு அழகான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக நடித்திருக்கும் சரவணன் கூலிங் கிளாஸ் போட்டது போலவே நடிப்பை நிறைவாகவே கொடுத்திருக்கிறார். இவரது கூட்டாளியான நடித்திருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கமும், இந்த கூட்டணியில் தனித்து தெரியும் டாக்டராக ஆனந்த்பாபு, சாய் தீனா இவர்களும் இயக்குநரின் இயக்கத் திறமையால் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் சின்ன பட்ஜெட் படம் என்பதால் எந்த அளவுக்கு செலவை குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு செலவை குறைத்து போதுமான அளவுக்கு நடிப்பையும் காண்பிக்க வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
எப்போதும் அடித்து ஆடும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்திலும் சுதியும், கதியும் தப்பாமல் ஆட்டம் போடுவதுபோல பாடல் காட்சிகளை இசையை அமைத்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி பின்னணி இசையில் நம்முடைய காதுகளை பஞ்சர் ஆகும் அளவிற்கு இசையைக் கொட்டி தீர்த்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரோபின் பாஸ்கர் மீடியம் பட்ஜெட் படத்துக்கு என்ன மாதிரியான ஒளிப்பதிவு இருக்குமோ அதே போல இதிலும் படப் பதிவு செய்து இருக்கிறார். பாடல் காட்சிகளை மிகவும் கலர்ஃபுல்லாக படமாக்கிருக்கும்விதம் பாராட்டுக்குரியது. ஆனால். அந்தக் குத்துப் பாடல் காட்சி தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது.
இப்போது இந்தியாவில் எங்கெங்கு காணினும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. மத்திய அரசு, மாநில அரசோ ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால் அந்த திட்டத்தின் மூலம் நாம் எப்படி பணம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் இந்திய அரசியல்வாதிகளும், தமிழக அரசியல்வாதிகளும் எப்போதும் தீவிரமான வேட்டையில் இருக்கிறார்கள்.
அப்படி ஒரு வேட்டையை நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சராக சரவணனை காட்டியிருப்பதும், அதில் நடக்கின்ற மருந்து ஊழலை வெளிப்படுத்திய விதமும் சிறப்புதான்.
இது சமூக சிந்தனை உள்ள திரைப்படம்தான். மிடில் பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், நிறைய ஆக்ஷன், அப்புறம் சஸ்பென்ஸ், டிவிஸ்ட்டுகள் என்று ஒரு திரைப்படத்தை பார்க்க வைப்பதற்கான அத்தனை அஜெண்டாவையும் இதில் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஜாலியாக பொழுதைப் போக்கும் அளவுக்கு சிறந்த கமர்சியல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.கஜேந்திரன்.
படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கனை ஒரு வேடத்தில் நடித்திருப்பதால் அவருடைய விருப்பப்படியே படம் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது அவருடைய கதாபாத்திரத்திற்குக்கூட வேறு யாராவது ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைத்திருந்தால், இந்தப் படத்திற்கு கொஞ்சம் கூடுதல் கவன ஈர்ப்பு வந்திருக்கும். தயாரிப்பாளர் தன்னுடைய முகமும் படத்தில் வர வேண்டும். தன்னுடைய பெயர் எழுத்தில் திரையில் தெரிய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டதால் இந்தப் படம் இப்படி ஒரு காட்சி அமைப்புடன் வந்திருக்கிறது.
நாம் குறைகளாக சொன்ன குற்றத்தையே செய்யாமல் இருந்திருந்தால், இந்தப் படம் நிச்சயமாக இன்னும் சிறந்த திரைப்படமாக பேசப்பட்டிருக்கும்.
RATING : 3.5 / 5









