full screen background image

குஷி-2-வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்; எஸ்.ஜே.சூர்யா இயக்க வேண்டும்! – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவா..!

குஷி-2-வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்; எஸ்.ஜே.சூர்யா இயக்க வேண்டும்! – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவா..!

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் ‘குஷி’. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார்.

அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் இயக்குநர் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன்.

நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், எனக்கு இயக்குநர்தான் முக்கியம் என்று கூறினேன். அதன்பிறகு விஜய் சாருக்கு கதை கூறினோம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளிலும் சூர்யாதான் இயக்கினார்.

ஜோதிகா, பூமிகாவைப் பார்த்தால் அவர்கள் தெரியமாட்டார்கள், சூர்யாதான் தெரிவார். பூமிகாவை தேர்வு செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த பெண் மென்மையானவர். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பாரா? என்று கேட்டார்கள். அதற்கு நான், சூர்யா வேலை வாங்கிவிடுவார் என்று கூறினேன்.

இப்படத்திற்கு தேவா சார் இசை என்றால் நம்ப முடியாது. அப்போது அவருடன் மூன்று சகோதரர்களும் இணைந்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு டாப் ஆங்கிள் லவ் ஸ்டோரி என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால், கல்கத்தாவில் பிறக்கும் ஒரு பையனும், இங்கு பிறக்கும் பெண்ணும் ஒன்று சேர்வார்கள் முதலிலேயே கூறிவிடுவார். அது எப்படி என்பதை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் விஜய் டாப் ஹீரோ. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை, வையுங்கள் என்று விஜய் கூறினார். ஆனால், சூர்யா இது லவ் ஸ்டோரி, இதில் வைக்க முடியாது என்றார். அதன் பிறகு நாங்கள் பேசி ஒரு சண்டை காட்சியை மட்டும் வைத்தோம்.

உதயம் திரையரங்கில் படத்தின் முன்னோட்டம் பார்த்தோம். இந்தியன் படம் போல மாஸ் படமாக இல்லாமல், காதல் கதையாக இருக்கிறதே என்று பயந்தேன். ஆனால், முதல் காட்சிக்குப் பிறகு ரசிகர்கள் படத்தில் ஒன்றிவிட்டார்கள். சூர்யா படம் ஹிட் என்று அப்போதே கூறிவிட்டேன்.

வைரமுத்து சார் பார்த்துவிட்டு, முதலில் தயாரிப்பாளருக்கு போன் செய்யுங்கள். ஈகோ என்ற மெலிதான வரியை வைத்துக் கொண்டு பெரிய பொருட் செலவில் படம் தயாரிக்க தைரியம் வேண்டும் என்று வைரமுத்து சார் கூறியதாக சூர்யா சொன்னார்.

இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு இப்படத்தின் திரையரங்கு அனுபவம் இருக்காது. ஆகையால், இப்படத்தை நன்றாக ரசிப்பார்கள் என்று உங்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் பார்ட் 2 படங்கள் டிரெண்டாக இருக்கிறது. அதில் குஷி-2 படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இப்படத்தையும் சூர்யா சாரே இயக்க வேண்டும். விஜய் சார் நடித்தாலும் சரி அல்லது அவர் மகன் நடித்தாலும் சரி அல்லது வேறு யார் நடித்தாலும் சரி, சூர்யா இயக்குவார் என்று நினைக்கிறேன் என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “முதன்முறையாக பத்திரிகையாளர்கள் டிரைலரை மிகவும் ரசித்துப் பார்த்ததை இன்றுதான் பார்த்தேன். அதிலும் இப்படத்தில் ஒரு பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்தார்கள். ‘கட்டிப்புடி’ பாடலுக்கு இந்தியாவில் எங்கு இருந்தாலும் திரையரங்கில் பாருங்கள், உங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்று மும்தாஜ் மேடமிற்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

எஸ்.ஜே.சூர்யா சாரிடம் நீங்கள் மறுபடியும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டேன். நிச்சயம் இறங்கி அடிப்பேன் என்று அவர் பாணியில் கூறினார். அதற்காக முன்னோட்டமாக இப்படம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

‘கில்லி’ படம் மறுவெளியீட்டில் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் சாருடைய அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றியாகும். ‘கில்லி’ படத்திற்கும், ‘குஷி’ படத்திற்கு மற்ற படங்களை விட அதிகமாக பாராட்டுகள் எனக்கு வந்தது.

மகளிருக்காக பிரத்யேக காட்சிகள் கொடுக்கலாமா? என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். ஊர் திருவிழாவை தவறவிட்டவர்கள் ‘குஷி’ படத்தைப் பாருங்கள். ஒரு படமோ, பாடலோ, வசனமோ, மக்களோடு இணக்கமாக இருக்கும்போது தான் வெற்றி பெறுகிறது. அதுபோல், இந்த படத்தின் பாடல் வரியில் வரும் ‘பாப்பு’ என்று வார்த்தையும். தமிழ்நாட்டில் பல பேர் வீடுகளில் பெண் குழந்தைகளை செல்லமாக ‘பாப்பு’ என்றுதான் அழைப்பார்கள். என் குடும்பத்திலும் அந்த அனுபவம் இருக்கிறது.

‘குஷி’ படம் மறுவெளியீட்டு அறிவிப்பை பார்த்ததும், 50 நாட்கள் எத்தனை திரையரங்கில் ஓடியது, 100 நாட்கள் எத்தனை திரையரங்கில் ஓடியது போன்ற விபரங்களை அனுப்பினார்கள். இப்படத்தை மறுவெளியீடு செய்வதில் பெருமையடைகிறேன். பத்திரிகையாளர்களின் ஆர்வம் 20 சதவிகிதம் இருந்தாலே பல கோடி வருமானம் வரும் என்று ரத்னம் சாருக்கு சொல்லிக் கொள்கிறேன்..” என்றார்.

இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “குஷி படத்திற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்களே இந்தளவிற்கு கொண்டாடினால், திரையரங்கில் என்னவாகும் என்று தெரியவில்லை. இளைய தளபதியை மீண்டும் இப்படி பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் மிகவும் அழகாக இருப்பார். ஜோதிகா மேடமும் அழகாக இருப்பார்.

மேலும், ஒரு படத்தின் கதை கூறும்போதே 2.30 மணி நேரம் கூறிவேன். உதவி இயக்குனர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் இப்படி கதை கூறும் போதே பலமுறை படம் பார்ப்போம். ஒவ்வொரு காட்சியும் படப்பிடிப்பு முடிந்தவுடன் பல முறை பார்ப்பேன். டப்பிங் பேசும்போது, இசையை இணைக்கும்போது, படத்தொகுப்பு செய்யும்போது, முன்னோட்டம் பார்க்கும் போதும் 1 லட்சம் முறை படம் பார்த்து விடுவேன்.

பார்வையாளர்களுடன் திரையரங்கில் பார்க்கும்போது, ரசிகர்கள் கொண்டாடுவதைத்தான் பார்க்க முடியுமே தவிர, முதன்முறை பார்த்த அனுபவமே இருக்காது. ஆனால், நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களுடன் இணைந்து இன்று பார்க்கும்போது எனக்கு முதன்முறையாக பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

‘கட்டிப்புடி’ பாடலுக்கு எல்லோரும் ரசித்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலை தேவா சாரிடம் கேட்கும்போது, “செந்தமிழ் தேன் மொழியாள்’ மெட்டில் போடுங்கள்” என்றேன். அப்படித்தான் ‘கட்டிபுடி’ பாடல் உருவானது. அதேபோல், “மொட்டு ஒன்று மலர்ந்திடும்” பாடல் மெட்டுக்கு எழுதாமல் பாட்டுக்கு மெட்டுப் போட்டுக் கொடுத்தார். அப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய ஊடலை அழகாக சொல்லும். அந்த கவிதை வரிகளுக்கு தேவா சார் அற்புதமாக இசையமைத்தார். இப்படத்தில் ஒவ்வொன்றும் தானாகவே அமைந்தது.

விஜய் சாரிடம் கதை கூறிய பிறகு, “உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வேறு கதை சொல்கிறேன்” என்றேன். அவர் “வேண்டாம். இதுவே நன்றாகத்தானே இருக்கிறது..” என்றார். இப்படத்திற்கு அழகாக ஒளிப்பதிவு செய்தவர் ஜீவா சார். இன்று அவர் இல்லையென்றாலும், இந்த கணம் அவரை நினைத்துக் கொள்கிறேன்.

கதை அடுத்தடுத்து பயணிக்கும்போது விவேக் சாரின் பாத்திரம் அடுத்தடுத்த காட்சிகளை இணைக்கும்படியாக இருக்கும். சினிமாத் துறையில் என்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் கணக்கு பாராமல் செலவு செய்த ஏ.எம்.ரத்னம் சார்தான். நான் நடிகனாக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தேன். ஆகையால்தான், இப்போது நான் இயக்கத்தை நிறுத்திவிட்டு நடிக்க வந்துவிட்டேன்.

‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆண்டரியோ, அவர் இங்கு வந்ததில் மகிழ்ச்சி. சக்தி சார் ரசிகராகவே மாறிவிட்டதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Our Score