நடிகர்கள் :
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரெபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்ப பி சர்மா, ரசிதா ராம், லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், ஜூனியர் எம்.ஜி.ஆர், பூஜா ஹெக்டே (மோனிகா பாடலில் கேமியோ தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர் :
தயாரிப்பு நிறுவனம் – சன் பிக்சர்ஸ்
தயாரிப்பு – கலாநிதி மாறன்
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
கதை – வசனம்- லோகேஷ் கனகராஜ்
கூடுதல் திரைக்கதை – சந்துரு அன்பழகன்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு – கிரீஷ் கங்காதரன்
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
தயாரிப்பு வடிவமைப்பு – சதீஸ் குமார்
பாடல் வரிகள் – விஷ்ணு எடவன், அறிவு, அசால் கோலார், அமோக் பாலாஜி, ஹைசன்பெர்க்
நடனம் – சாண்டி
சண்டைக்காட்சிகள் – அன்பு, அறிவு
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா
காஸ்டியூமர் – முகமது சுபியர்
ஒப்பனை – சசிகுமார் பரமசிவம்
ஸ்டில்ஸ் – சிற்றரசு
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
தனக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குநர்களை முற்றிலுமாக தள்ளி வைத்துவிட்டு புதிய இளமையான இயக்குநர்களுடன் கை கோர்த்து சென்றால், இப்போதைய நிலவரப்படி நாம் ஜெயிக்கலாம் என்கின்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் ரஜினி தொடர்ச்சியாக புதிய தலைமுறை இயக்குநர்களுடன் இயங்கி வருகிறார்.
அவர் கடைசியாக நடித்த எட்டு படங்களில் ‘ஜெயிலர்’ படம் மட்டுமே வெற்றி பெற்றது. மீதி அத்தனையும் போட்ட காசு கைக்கு வந்தது என்ற நிலைமைதான். இப்பொழுது லோகேஷ் கனகராஜை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரை மேலும் சேதமாக்கிக் கொண்டிருக்கிறார் ரஜினி.
படம் பார்க்கும்போது இதுதான் கதை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதை மாறிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் தியேட்டரைவிட்டு எழுந்து வெளியில் வரும் பொழுது “படத்தின் கதை என்ன?” என்று உங்களை, நீங்களே கேட்டுக் கொண்டாலும் எந்த பதிலும் உங்களுக்குத் தோணவே தோணாது. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி..!
சென்னையில் ‘தேவா மேன்சன்’ என்ற பெயரில் மேன்சன் ஒன்றை நடத்தி வருகிறார் ‘தேவராஜ்’ என்ற ரஜினி. அவருடைய சொந்த மைத்துனரான சத்யராஜ் விசாகப்பட்டினத்தில் தனது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக செய்தி வர ரஜினி தன்னுடைய உதவியாளர்களுடன் விசாகப்பட்டினத்திற்கு நேரில் செல்கிறார்.
சத்யராஜூக்கு ரஜினி அஞ்சலி செலுத்தும்பொழுது சத்யராஜின் மூத்த மகளான சுருதி ரஜினியை “இப்போ எதுக்கு இங்க வந்தீங்க..? வெளியே போங்கள்” என்று சொல்லி விரட்டுகிறார்.
சத்யராஜூக்கு காரியங்கள் முடிந்த பின்பும் ரஜினி சென்னைக்கு வராமல் அங்கேயே தங்கியிருந்து சத்யராஜின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து விசாரிக்க தொடங்குகிறார்.
சத்யராஜை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பும் ரஜினி, அந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன?.. காரணகர்த்தா யார்?… “அவர்களை நான் பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று சொல்லி அங்கேயே டேரா போடுகிறார்.
அதே விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ‘கிங்பின்’ சைமன் என்னும் நாகார்ஜுனா தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். அவருடைய கம்பெனிதான் அதிகாரப்பூர்வமாக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஏற்றி இறக்கும் லாஜிஸ்டிக் வேலையை செய்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கே வேலை செய்வதால் அவர்களை வைத்து கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவுக்கு தளபதியாக இருப்பவர் சௌபின் சாகீர்.
இவருடைய வேலை இந்த தொழிலாளர்களுக்குள் யாராவது போலீஸ்காரர்கள் ஊடுருவி இருக்கிறார்களா என்பதை விசாரிப்பதுதான். அந்த வகையில் கிடைத்த போலீஸ் உளவாளிகளை எல்லாம் படுகொலை செய்து விடுகிறார் செளபின்.
இந்த நாகார்ஜுனாவின் கூட்டத்துக்கும், சத்யராஜின் மரணத்திற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறியும் ரஜினி அது என்ன பகை?.. எப்படி உருவானது?… ஏன் உருவானது?… என்று விசாரிக்கத் தொடங்க பல திடுக்கிடும் சம்பவங்கள் திரையில் ஓடுகின்றன.
சத்யராஜ் ஒரு விஞ்ஞானி. இறந்தவர்களை தகனம் செய்யும்போது மின்சார சுடுகாட்டில் ஒரு பிணம் எரிவதற்கு மூன்று மணி நேரம் ஆகிறது. ஆகவே, காத்திருந்து காத்திருந்துதான் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. அந்த மின் தகன முறைக்கு மாற்றாக எளிய முறையில் செயல்படும் மின்சார நாற்காலி ஒன்றை கண்டு பிடிக்கிறார் சத்யராஜ்.
அந்த மின்சார நாற்காலியில் யாரை உட்கார வைத்தாலும் இவருடைய கண்டுபிடிப்பின்படி அவர்களுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டு ஒரு நிமிடத்தில் அவர்கள் சாம்பல் ஆகி விடுவார்கள்.
“இந்த மின்சார நாற்காலி திட்டம் நாட்டு மக்களுக்கு நல்லதல்ல… தொழில் துறைக்கும் ஏற்றதல்ல” என்று கூறி இந்திய அரசு அதற்கு அனுமதி தர மறுக்கிறது. இதை தற்செயலாக கண்டறியும் நாகார்ஜுனா டீம், சத்யராஜிடம், “எங்களுடன் இணைந்து பணியாற்றினால் பணம் தருகிறோம்… இல்லாவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம்..” என்று மிரட்டுகிறார்கள்.
இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து சத்யராஜ் அவர்களுக்காக வேலை செய்ய ஒத்துக் கொள்கிறார். அதன்படி நாகார்ஜுனாவின் ஆட்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கின்ற உடல்களை தன்னுடைய மின்சார நாற்காலியில் வைத்து சாம்பலாக்கி விடுகிறார் சத்யராஜ். இதற்காக, பணமும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த சட்ட விரோத கொலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்த பொழுதுதான் சத்யராஜ் திடீரென்று இறந்துவிட்டார். ஆனால் அவருடைய மரணம் இயற்கையில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கண்டு பிடிக்கும் ரஜினியும் அந்தக் கூட்டத்தில் சேர்கிறார்.
சத்யராஜ் இல்லை என்றாலும் தனக்கும் அந்த மின்சார நாற்காலி அமைப்பை ஆப்பரேட் செய்ய தெரியும் என்று சொல்லி நாகார்ஜூனாவின் நம்பிக்கையை பெற்று இவரும் பிணங்களை எரிக்கத் துவங்குகிறார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக துறைமுகத்துக்குள் நுழைந்து நாகார்ஜுனா டீமுடன் நெருக்கமாகுகிறார் ரஜினி.
பின்பு என்னவானது?.. சத்யராஜின் கொலைக்கு காரணமானவர்களை ரஜினி கண்டுபிடித்தாரா..? கண்டுபிடித்து என்ன செய்தார்? என்பதுதான் இந்தப் படத்தின் நீட்டமான திரைக்கதை.
1992-ம் ஆண்டு லோகிததாசின் கதையில் பிரபல மலையாள இயக்குநரான ஜோஷியின் இயக்கத்தில் மம்முட்டி, விஷ்ணுவர்த்தன், அஞ்சு போன்றவர்கள் நடிப்பில் வெளியான ‘கௌரவர்’ என்ற மலையாளப் படத்தின் கதையை மையமாகக் கொண்டுதான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொய் வழக்கினால் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மம்முட்டி சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய விஷ்ணுவர்த்தனை கொலை செய்வதற்காக தேடி வருவார். அப்போது விஷ்ணுவர்த்தன் “என்னுடைய மூன்று மகள்களில் ஒரு மகள் உன்னுடைய மகள்” என்று சொல்லிவிட்டு இறந்து போய் விடுவார். அதன் பிறகு மம்முட்டி அந்த மூன்று மகள்களையும் விஷ்ணுவர்த்தனின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்.
அந்தக் ‘கௌரவர்’ படத்தில் தன்னுடைய மகள் யார் என்பது படத்தின் முடிவில் மம்மூட்டிக்கு தெரியாமலேயே போய்விடும். ஆனால் இந்தப் படத்தில் அப்பா ரஜினிக்குத் தெரியும். மகள் சுருதிஹாசனுக்கு தெரியாது. அவ்வளவுதான் வித்தியாசம்.
அதேபோல் லோகேஷின் முந்தைய படங்களின் கதைக் கருவும் இந்தப் படத்துடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறது.
‘விக்ரம்’ படத்தில் போதைப் பொருள் மாபியாவால் தன் மகன் கொல்லப்பட்டதற்கு கமல் பழி வாங்குகிறார். அதேபோல் ‘ஜெயிலர்’ படத்தில் கடத்தல்காரர்களால் தன் மகன் கடத்தப்பட்டதால் ரஜினி பழி வாங்குகிறார். இப்போது இந்தக் ‘கூலி’ படத்தில் நண்பன் கொலை செய்யப்பட்டதற்காக ரஜினி பழி வாங்குகிறார். அவ்வளவுதான் கதை..!
இந்த 75 வயதிலும் ரஜினி இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடுகிறார். ஆடுகிறார். சண்டையிடுகிறார். எந்தத் தடங்கலும் இல்லாமல் வசனம் பேசுகிறார். அதே ஸ்டைல் மேனரிசத்தை கொடுக்கிறார்.
1980-களில் சிகரெட்டை வைத்து என்னன்ன ஸ்டைல்களை காட்டினாரோ… அதே ஸ்டைலில் இப்போது பீடியை வைத்து சொல்லித் தந்திருக்கிறார் ரஜினி.
அவருக்கே உரித்தான சில ஸ்டைல்களை, சில காட்சிகளில் மட்டுமே காண்பித்து இருக்கிறார். அவ்வளவுதான் அதற்கான ஸ்கோப் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவருடைய தனி ஸ்டைலான வசனங்களை உச்சரிக்கும் பாணியும், எதிரிகளை கிண்டல் அடிக்கும் வேகத்தையும் அப்படியே இந்தப் படத்திலும் பாலோ செய்திருக்கிறார்.
சண்டை காட்சிகளில் இடையிடையே வரும் அவருடைய வழக்கமான சில ஸ்டைல் வசனங்கள் வெறும் நமத்துப் பட்டாசாகவே போய்விட்டது என்பதுதான் உண்மை.
விசாகப்பட்டினம் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் நடைபெறும் சண்டை காட்சியும், நாகார்ஜுனாவுடன் அவர் மோதும் சண்டை காட்சியும், தொழில் நுட்ப உதவியோடு வேகவேகமான ஆக்சன்களில் இது ரஜினிதானா என்று சந்தேகம் கேட்கும் அளவுக்கு தன்னுடைய வேகத்தைக் காட்டி இருக்கிறார். மற்றபடி ரஜினிக்கு ஒரு டூயட்டும் இல்லை என்பது நமக்கு சற்று ஆறுதலான விஷயம்.
பெரும் பணக்கார டானாக நடித்திருக்கும் நாகார்ஜுனா தன்னுடைய ஒவ்வொரு நடை, உடை, பாவனையிலும் பணக்காரத்தனத்தை காட்டி இருக்கிறார். சில இடங்களில் வில்லனுக்குரிய ஒரு கெத்தையும், திமிரையும், ஆணவத்தையும் தன்னுடைய பேச்சில் நிறையவே காட்டி இருக்கிறார். கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சியின் இறுதியில் அதே விலை உயர்ந்த கைக்கடிகாரத்தினாலேயே அவர் சாவது ஒரு டச்சிங்கான விஷயம்.
தளபதி ‘தயாளாக’ நடித்திருக்கும் செளபின் சாஹிர் படம் முழுவதும் வியாபித்து இருக்கிறார். நல்லதொரு நடிகர். சிறந்த நடிப்பையும் காண்பித்திருக்கிறார். ‘மோனிகா’ பாடலில் இவர் ஆடுகின்ற அந்த நடனமும் அசத்தல் ரகம்.
செத்துச் செத்து பிழைத்துக் கொண்டே இருக்கும் சௌபினுக்கு காட்சிகள் நிறையவே உண்டு. தான் இருக்கும் காட்சிகளில் எல்லாம் தனிப்பட்ட முறையில் ஸ்கோர் செய்திருக்கிறார் சௌபின்.
அவருடைய வெறித்தனமான சிரிப்பும், நாகார்ஜூனாவின் மகனை வசனம் பேசிக் கொண்டே கொலை செய்யும்போது “இவன்தான்யா வில்லன்” என்று நம்மை சொல்ல வைத்துவிட்டார்.
சுருதிஹாசனுக்கு இந்தப் படம் அவருடைய கேரியரில் மிக மிக முக்கியமான படம். அறிமுகமான முதல் காட்சியிலிருந்து கடைசி வரையிலும் ஒரு இடத்தில்கூட சிரிப்பை உதிர்க்காமல், கவர்ச்சியும் காட்டாமல், முழுக்க, முழுக்க ஒரு பொறுப்பான அக்காவாகவும், அன்பான மகளாகவும் கடைசிவரையில் வலம் வந்து கொண்டே இருக்கிறார். அவருடைய நடிப்பாற்றலை இந்தப் படத்தில் மெருகேற்றியிருக்கிறார். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் ஒரு காரணம் என்பதால் சிறந்த முறையில் இயக்கம் செய்து சுருதியிடம் இருந்து நடிப்பை வரவழைத்த இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
ரஜினியின் மைத்துனர் ராஜசேகராக நடித்திருக்கும் சத்யராஜ் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி குடும்ப பாசம் அதிகம் உள்ளவராகவே நடித்து இருக்கிறார். தன்னுடைய மகள்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அப்பாவிகளை படுகொலை செய்யும் வேலையை செய்து வருகிறார்.
இதனாலேயே கடைசியாக செளபினிடம் மாட்டிக் கொண்டு காதோரம் “பவர் ஹவுஸ்” என்கின்ற கோட் வேர்டை சொல்லிவிட்டு சாகும்போது நமக்கு எந்த ஃபீலிங்கும் வரவில்லை.
ரஜினியின் தளபதியாக உபேந்திரா கிளைமாக்ஸுக்கு முன்பாக களத்தில் வந்து அடிதடியில் இறங்குகிறார். செளபினின் மனைவியாக நடித்திருக்கும் கன்னடத்து பைங்கிளி ரக்சிதா ராம் இடைவேளைக்கு பின்பு அவருடைய நிஜ முகத்தை காட்டி ஒரு வில்லியாக அவதாரம் எடுக்கிறார். அவருடைய பரிதாபமான முடிவு நமக்கும் ஒரு பரிதாபத்தை தந்தது.
படத்தின் ஹீரோயின் என்று நம்ப வைக்கப்பட்டிருந்த பூஜா ஹெக்டேவைப் பார்த்ததும் ஒரு புத்துணர்ச்சி வந்த்து என்னவோ உண்மைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக ‘மோனிகா’ பாடலுக்கு மட்டும் ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போயிருக்கிறார். இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
அகில உலக டானாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ‘தாஹா’ என்ற அமீர்கான் ஏதாவது வில்லத்தனத்தைக் காட்டுவார் என்று பார்த்தால் துப்பாக்கியால் பட படன்னு சுட்டுவிட்டு அடுத்து துரோகிகளிடம் பேரம் பேசுகிறார். அவருடைய கதாப்பாத்திரத்தை ஏன் இப்படி படைத்தார்கள் என்று தெரியவில்லை. அவரும் நம் மனதில் நிற்கவில்லை.
மற்றும் படத்தில் மிக முக்கிய சிற்சில கேரக்டர்களில் நடித்த முக்கியமானவர்கள் எல்லாம் சட்டென்று வந்து வந்து போகிறார்கள்.
சத்யராஜின் மற்றைய மகள்களான ரெபா மோனிகா ஜான், மோனிகா பிளெஸி, மெகா குடிகாரராக இருக்கும் சார்லி, ரஜினியின் உதவியாளனாக இருக்கும் மாறன், கூட்டத்தில் ஒருவராக இருக்கும் திலீபன், ரக்ஷிதா ராம் காதலிக்கும் நாகார்ஜுனாவின் மகன் கண்ணன் ரவி என்று பல முக்கிய கதாபாத்திரங்களுக்கும் சிற்சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை காண்பித்துவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் அடுத்த ஆளிடம் திரைக்கதையைத் தாவிச் செல்ல வைத்திருக்கிறார்கள்.
500 கோடி பட்ஜெட்டில் உருவான படம் என்பதால் ஒளிப்பதிவு மிக, மிக தரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். ஒரு மந்தமான கிரே கலரில் படம் நெடுகிலும் அதிகமான காட்சிகளை இரவு நேர காட்சிகளாகவும் பகலில் கொஞ்சமாக காட்சிகளாக வைத்து படத்தை எடுத்து இருப்பதால் ஒளிப்பதிவு பற்றி நமக்கு எதுவும் தோணவே இல்லை.
இது ரஜினி படம் என்பதால் கதை, திரைக்கதையை மட்டும்தான் நாம் பார்த்தோம். ஆனால் ஒளிப்பதிவாளர் சண்டை காட்சிகளை பதிவு செய்தவிதமும், துறைமுகத்தைக் காட்டியிருக்கும்விதமும், நடிகர், நடிகைகளின் குளோஸப் காட்சிகள், உணர்ச்சி பொங்க பேசும் காட்சிகள்… இவைகளையெல்லாம் படமாக்கியவிதத்திலும் தனித்துத் தெரிகிறார்.
15 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு இசைத்திருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் பாடல்களை ஏற்கனவே ஹிட் செய்து விட்டார். அதிலும் ’மோனிகா’ பாடல் ஸ்கிரீனில் பட்டையை கிளப்புகிறது. அதற்குப் பிறகு ‘சிக்கிட்டு’, ‘உயிர்நாடி நண்பனே’, ‘கொக்கி’, ‘பவர் ஹவுஸ்’ என்று அவ்வப்பொழுது பாடல்கள் ஒலித்து நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகிறது.
இடையில் இசைஞானி இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் ஒலித்தபோது கொஞ்ச நேரம் நம் காதுகள் குளிர்ந்தன. பின்னணி இசையில் ஹீரோயிஸமும் தலைதூக்கியிருக்கிறது.
படத் தொகுப்பாளர் பிலோமின்ராஜ் இன்னும் கொஞ்சம் கை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 169 நிமிடங்கள் என்பது மிக. மிக அதிகம். இதையே இன்னும் சுருக்கமாக ஆக்கி இருந்தால் “படம் கொஞ்சம் நல்லா இருக்கு” என்றாவது சொல்லியிருக்கலாம்.
சதீஷ்குமாரின் கலை இயக்கம் பிரம்மாண்டம். மேன்சன் செட், விசாகப்பட்டினம் துறைமுகம்… நாகார்ஜுனாவின் நைட் கிளப்… கிளைமாக்ஸில் கிடைக்கும் துப்பாக்கி ஆயுதங்கள் என்று சகலத்தையும் ஆயுத பூஜை செய்வதுபோல எடுத்து பூஜை செய்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பிரச்சினை ரஜினியிடம் இல்லை. இயக்குநர் லோகேஷ் இடம்தான் உள்ளது. “இந்தப் படத்தின் கதை என்ன?” என்று படம் முடிந்து வெளியில் வரும் ரசிகர்களிடம் கேட்டால் மிக மிக யோசித்துதான் சொல்வார்கள். அதுவும் அரைகுறையாகத்தான் சொல்வார்கள்.
ஏனென்றால், இந்தப் படத்தின் கதை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டே போவதால் கடைசியில் எதுதான் கதை என்று நாம் திடமாக சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகி விட்டோம்.
முதல் சில நிமிடத்தில் மைத்துனர் சத்யராஜின் மரணத்திற்கு பழி வாங்கப் போகிறார் ரஜினி என்பதுதான் கதையாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து ஹார்பரில் நடக்கும் அட்டூழியங்களை ஒழித்துக் கட்டி நீதியை நிலை நாட்டப் போகிறார் ரஜினி என்று கதை மாறியது. அதுவும் கொஞ்ச நேரத்திலேயே அப்பாவிகளை ஏமாற்றி அவருடைய இதயங்களை திருடும் ஒரு கும்பல் வேலையைத்தான் இவர்கள் செய்து வருகிறார்கள் என்று கதை மாறியது.
இதற்குப் பின்பு தப்பிச் செல்லும் சௌபிர், சுருதிஹாசனை கடத்திக் கொண்டு போக இப்பொழுது சுருதிஹாசனை காப்பாற்றுவதற்காக ரஜினி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று கதை திசை திரும்பியது. நாகார்ஜுனாவின் மகனை செளபின் கொலை செய்த பின்பு நாகார்ஜுனா செளபினை என்ன செய்யப் போகிறார் என்று கதை கதகளியாட்டம் ஆடியது.
கடைசியாக மீண்டும் யு டர்ன் போட்டு ரஜினியை முன்னால் உட்கார வைத்து இப்ப ரஜினிக்கும் நாகர்ஜுனாவுக்கும் பழைய கதை என்ன?… பழைய பகை என்ன?… இவர்கள் எப்படி பகையாளியானார்கள் என்றெல்லாம் சொல்லி ஐந்தாவது முறையாக கதை திசை திரும்ப…. “என்னதான்டா கதை?..” என்று நம்மையே வாய்விட்டு கேட்க வைத்து விட்டார் இயக்குநர் லோகேஷ்.
லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்பதுபோல இந்தப் படத்திலும் முதலிலிலிருந்து கடைசிவரையிலும் லாஜிக் கிலோ கணக்கில் தொங்குகிறது. ஆனால், “என்னுடைய படத்தில் லாஜிக் எல்லாம் தேடாதீர்கள். இது எல்.சி.யூ. லோகேஷ் கனகராஜ் கதை. அப்படித்தான் இருக்கும் என்று தன்னுடைய முந்தைய படங்களில் எல்லாம் வரிசையாக சொல்லி இருந்த லோகேஷ், இந்தப் படத்திலும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்.
மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறல் என்னவென்றால் சத்யராஜ் மின்சார சேரில் அமர வைத்து அப்பாவிகளை கொலை செய்வதுதான். இந்தக் கொலையின் மூலம் கிடைக்கும் பணம் அவர் குடும்பத்திற்கே போகிறது. அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் இன்னொரு மெகா லாஜிக் மீறல்.
அப்பாவிகளை கொலை செய்துவிட்டு சத்யராஜ் மட்டும் சட்டத்தின் முன்பு தப்பிப்பாரா?.. அவர் கொலையானதில் என்ன தவறு இருக்கிறது..? இந்தக் கேள்விக்கு ரஜினிதான் விடை அளித்திருக்க வேண்டும்.
ஆனால் அண்ணன் ரஜினி என்ன செய்கிறார் என்றால் ஒரே ஒரு ஆளான சத்யராஜின் கொலைக்கு நியாயம் கேட்க வந்தவர் பல அப்பாவிகளை அதே மின்சார நாற்காலியில் வைத்து படுகொலை செய்கிறார்.
இவருடைய நண்பர் சத்யராஜ் மட்டும்தான் மனிதரா?… ரஜினி கொலை செய்தவர்கள் மனிதர்கள் இல்லையா?… ஒரு கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க பல கொலைகளை செய்வது எந்த வகையில் நியாயம்?.. இதில் ரஜினியை எந்த லிஸ்டில் சேர்ப்பது? நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் அதே போல் அதற்காக அப்பாவிகளை கொலை செய்யலாமா..? என்ன வகையான கதையை லோகேஷ் எழுதியிருக்கிறார் என்றே தெரியவில்லை.
சத்யராஜ் செய்வதும் படுகொலைதான். ரஜினி செய்வதும் படுகொலைதான். இந்த இரண்டு படுகொலைகளை செய்தவர்கள் நாகார்ஜூனா, செளபின் ஷாகிரை குற்றம் சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது? இவர்களும், அவர்களும் ஒன்றுதானே..?.
கடத்தல்காரர்களை, கொலை செய்தவர்களை, போலீசில் பிடித்துக் கொடுப்பதை விட்டுவிட்டு களத்தில் சந்தித்து அவர்களை பழி வாங்குவேன் என்று ரஜினி சொல்வதெல்லாம் எந்த ஊர் நியாயம் இயக்குநரே..?
படத்தில் கிளைமாக்ஸில் சர்வதேச தாதாவான தாகாவோடு இணைந்து கடத்தல் தொழிலை செய்வோம்… ஆனால், எங்களது கூலி தொழிலாளர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் வரக் கூடாது என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்கிறார் ரஜினி.
ஆக மொத்தத்தில் கடத்தல் தொழிலை தாராளமாக செய்யலாம். சட்டவிரோத செயல்களை தாராளமாக செய்யலாம். ஆனால், அப்படி செய்பவர்கள் என்னுடைய நண்பர்களான கூலித் தொழிலாளிகளை எதுவும் செய்யக் கூடாது என்பதுதான் ரஜினியின் தாரக மந்திரமாக இருக்கிறது! இது முட்டாள்தனமான கதை இல்லையா லோகேஷ்?
படத்தில் மருந்துக்குக்கூட போலீஸை காட்டாமல் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் லோகேஷ். அந்த வகையில் இந்த விசாகப்பட்டினம் இந்தியாவில் இல்லை போலும்… சென்னையும் இந்தியாவில் இல்லை போலும்…!?
மிகப் பெரிய குழப்பமாக ஸ்ருதிக்கு, ரஜினியை முன்பே தெரிந்திருக்கிறது. தன்னுடைய சொந்த அத்தையின் கணவரென்று..!
அப்படியென்றால் 30 வருடங்களாகப் பார்த்திருக்காத ரஜினியை எப்படி ஸ்ருதிஹாசன் அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறார்..?
இது மட்டுமல்ல.. ரஜினி கப்பலில் சக தொழிலாளர்களுடன் மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்னையில் அடைக்கலமாகியிருக்கிறார். அதன் பின்பு சத்யராஜூவுக்கும், ரஜினிக்கும் சந்திப்புகள் நடந்த்தா..? இல்லையா..? ஒரே ஒரு முறை சத்யராஜ் சென்னைக்கு வந்து மேன்ஷனுக்கு வந்தாலும், ரஜினியை சந்திக்காமலேயே கிளம்பிச் செல்வதை காட்சியாக்க் காட்டியிருக்கிறார்கள்.
ஸோ.. ரஜினி, சத்யராஜ் சந்திப்பு 30 வருடங்களாக நடக்காமலேயேதான் இருவரும் ஒருவரையொருவர் எங்கேயிருக்கிறோம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தார்களா..? நம்புற மாதிரியான கதையா இது?
இன்னொரு பக்கம் ரஜினியின் மனைவி ஷோபனாவும், சத்யராஜின் மனைவியும் வீட்டில் நடந்த கேஸ் வெடி விபத்தில் உயிரிழந்ததாக ஸ்ருதிஹாசன் ஒரு காட்சியில் கூறுகிறார்.
வீட்டில் மூத்தவரே ஸ்ருதிஹாசன்தான் என்றால் அதற்குப் பிறகுதான் 2 பெண்கள் சத்யராஜூக்கு பிறந்திருக்கிறார்கள். அப்படியானால் இந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எங்கேயிருந்தார்..? அவருக்கு மனைவி கர்ப்பமாக இருந்தது தெரியவே தெரியாதா..? அந்த வெடி விபத்து நடந்தபோது ரஜினி எங்கேயிருந்தார்..? ரஜினிக்கு தன் மனைவி இறந்தது எப்படி தெரியும்..?
சத்யராஜ் அந்த வெடி விபத்து நிகழ்ந்த பின்பு சென்னை சென்று ரஜினியுடன் இணைந்திருக்கலாமே..? ரஜினிக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று ரஜினியிடமே சொல்லியிருக்கலாமே..? இவ்வளவு கேள்விகளுக்கான விடை நமக்குக் கிடைக்கவேயில்லை..!
இப்படி நான் எடுப்பதுதான் படம். நான் கொடுப்பதுதான் கதை. திரைக்கதை. நான் காட்டுவதுதான் இயக்கம் என்றெல்லாம் அராஜகம் செய்து படத்தை இயக்கி கொடுத்திருக்கும் லோகேஷ் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.
எந்த ஒரு கமர்சியல் இயக்குநரும் தங்களுடைய இறுதிக் காலத்தில் இங்கே நினைத்து பார்க்கப்படுவதில்லை. அவர்கள் இயக்கிய மிக சிறந்த திரைப்படங்கள், மக்களுக்கு ஏதோ ஒரு நல்லவிதமான கருத்தை சொல்லிய திரைப்படங்கள் மட்டும்தான் மக்கள் மனதில் நிற்கும். அந்த இயக்குநர்கள்தான் கடைசிவரையிலும் மக்களின் மனதில் நீடித்து நிலைத்து நிற்கிறார்கள்.
தம்பி லோகேஷ், இந்த மாதிரி படங்களினால் உங்களுடைய பேங்க் பேலன்ஸ் வேண்டுமானால் கோடிகளுக்கு ஏறலாம். ஆனால் இப்படியே, இது மாதிரியே படங்களை தொடர்ந்து எடுத்தால், உங்களுடைய வயதான காலத்தில் மக்கள் மனதில் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
இந்தக் ’கூலி’ செய்த வேலையினால் சேதாரம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும்தான்..!
RATING : 3.5 / 5









