இந்தப் படத்தை ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.மாணிக்கம் தயாரித்துள்ளார்.
படத்தில் விக்னேஷ் நாயகனாகவும் மனிஷா ஜஸ்வானி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் அல்மாஸ் ஆதம், சா, நாசர் ஒய். ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, யோக் ஜெஸ்மி, லீலா சாம்சன், மோகன்ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசை அமைக்க, படத் தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.
பல இயக்குநர்கள் எதிர்காலத்தைப் பற்றி படம் எடுக்கிறார்களே நாமும் அதுபோல ஒரு படத்தை எடுத்துப் பார்ப்போம் என்ற ஆர்வக் கோளாறில் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எடுத்திருக்கும் திரைப்படம் இது.
படத்தின் கதை 2047-வது ஆண்டில் நடக்கிறது. அப்பொழுது இந்த உலகம் எப்படி இருக்கும்..? இந்தியா எப்படி இருக்கும்?.. இந்தியாவில் போக்குவரத்துகள் எப்படி இருக்கும்?.. மனிதர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?.. இதையெல்லாம் கொஞ்சம் சிந்தித்து அட்வான்ஸ் லைப் ஸ்டைலை காட்ட முனைந்திருக்கும் இயக்குநருக்கு பட்ஜெட் போதவில்லை என்பதால் முக்கால்வாசி காட்சிகளை கிரீன் மேட் காட்சியாகவே எடுத்து நம் கண்களை ஏமாற்றி இருக்கிறார்.
மூன்றாம் உலகப் போர் நிச்சயமாக தண்ணீர் பிரச்சனைக்காகத்தான் வரும் என்று அனைவரும் அடித்து சொல்லியிருந்த நேரத்தில் தற்போது நடைபெற்று வரும் உலக சூழலை பார்த்தால் ஒவ்வொரு நாடுகளும் தயாரித்து வரும் ஆயுதங்களின் விற்பனையினால் ஏற்படும் முட்டல் முதல்களினால்தான் மூன்றாவது உலகப் போர் நிச்சயமாக நடைபெற வாய்ப்புண்டு என்றே தெரிகிறது.
அந்த வகையில் மூன்றாம் உலகப் போரும் நடந்து முடிந்த பின்பு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு கற்பனை கதையாக எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
2047-வது ஆண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கி குவித்த ஆயுதங்களை சேகரித்த மால்கம் என்ற தனியார் ராணுவப் படை உலகத்தின் பல்வேறு நாடுகளை அடிமையாக்கி வைத்திருக்கிறது. இப்போது அவர்களின் பார்வை இந்தியா மீது விழுகிறது.
தங்களுடைய ராணுவம் இந்தியாவை தாக்காமல் இருக்க வேண்டும் எனில் இந்திய அரசு பல கோடி ரூபாய்களை மால்கம் ராணுவப் படைக்கு தட்சணையாக கொடுக்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்கவில்லை எனில் மால்கம் ராணுவம் இந்தியா மீது படை எடுக்கும் என்றும் பிரான்ஸில் இருந்து செயல்படும் உலகத்தின் மிகப் பெரிய தீவிரவாத கும்பலின் தலைவனான லூசிபரும் அறிவிக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் இந்தியாவிலேயே ஊடுருவி இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் பெண்களை கடத்திச் சென்று அவர்களை குரூரமாக சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள். அதேபோல் பல்வேறு இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்துகிறார்கள்.
இவர்களது இந்த நாச வேலையை கண்டு பயந்து போகும் இந்தியாவின் பிரதமரான ஒய்.ஜி.மகேந்திரா, இந்த மால்கம் ராணுவத்தையும், லூசிபரையும் எதிர்ப்பதற்காக உளவுத்துறை அதிகாரியான விக்னேஷ் மூலமாக ரெட் பிளவர் என்கின்ற ஒரு ஆபரேஷனை ஆரம்பிக்கிறது.
தான் ஒரு இந்தியாவின் உளவுத்துறை அமைப்பின் தலைவன் என்பதை வெளியில் சொல்லாமல் விக்னேஷ் இந்த களத்தில் குதித்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக முயல்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்றதா?.. இல்லையா?.. என்பதே இந்தப் படம்.
நாயகன் விக்னேஷ் இதில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒன்று ஹீரோ விக்னேஷ். இன்னொன்று லூசிபருடன் இணைந்து இந்தியாவை அழிக்க நினைக்கும் வில்லன் கதாபாத்திரம். இப்படி இரண்டு விதமான கேரக்டர்களை ஏற்றிருந்தாலும் இரண்டிலும் ஒன்று போலவே வாழ்ந்திருக்கிறார் விக்னேஷ்.
ஹீரோவாக நடித்திருக்கும்போது நிஜமாகவே தேச பக்தியோடு தன்னுடைய கடமையை செய்கிறார் என்று நினைத்தால் அது பற்றிய வசனங்களை குறைவாக வைத்துக் கொண்டு அவர் ஒரு சாதாரண கோடங்கிபட்டி ஹீரோ போலவே நடித்து இருக்கிறார்.
வில்லனாக நடித்த விக்னேஷ் இன்னொரு பக்கம் பெண்களுடன் சரசு சல்லாபத்தில் ஈடுபட்டு ஒரு மைனராக வாழ்வது போலவும் பல கொடுமை செயல்களை செய்வது போலவும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கான திரைக்கதைகள் நடித்திருக்கிறார் விக்னேஷ்.
படத்தின் நாயகியாகிய நடித்திருக்கும் மனிஷா ஜஷ்னானி நடிப்பை விடவும் கவர்ச்சியில்தான் கவர்கிறார். நல்ல விக்னேஷின் காதலியாகவும், வில்லன் விக்னேஷ் உடன் சரசமடியும் ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் கோலடிப்பதை போலவே நடித்திருக்கிறார்.
வருகின்ற காட்சிகளிலெல்லாம் தன்னுடைய அழகால் ஈர்க்கும் மனிஷா ஆடை குறைப்பிலும் மிகப் பெரிய அளவுக்கு புரட்சி செய்து இவர் நாயகியா அல்லது குத்துப் பாட்டில் ஆட வந்த நாயகியா என்கின்ற சந்தேகத்தையே எழுப்பிவிட்டார்.
இவர்கள் மட்டுமல்ல… படத்தில் நடித்திருக்கும் மற்ற பெண்களும், பாலியல் தொந்தரவுள்ளாகும் காட்சிகளில் எல்லாம் அப்பட்டமான அரை நிர்வாண கோலத்தில் காட்சியளித்து அதையும் பிளேர் செய்து சென்சாரிடம் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
லூசிபர் என்ற பாத்திரத்தில் இந்த உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டுகள் கொண்டு வர முயற்சிக்கும் தலைவாசல் விஜய்யின் ஆக்ரோஷமான வில்லத்தன நடிப்புதான் படத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல்.
மேலும் இந்திய பிரதமராக நடித்த ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக நடித்திருக்கும் நாசரும் தங்களால் முடிந்த அளவுக்கு நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.
இவர்கள் மட்டும் இல்லாமல் படம் நெடுகிலும் மிகப் பெரிய வில்லன்கள் அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு செத்துப் போய் இருக்கிறார்கள்.
ஜான் விஜய், அஜய் ரத்தினம், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, யோக் ஜேபி, மோகன்ராம், டி.எம்.கார்த்திக் என்று மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டமும் இந்த படத்தில் பவனி வந்திருக்கிறது. ஆனால், யாருடைய கேரக்டரும் நமக்கு ஈர்ப்பு இல்லை. ஏனெனில் கதையே நமக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை.
எதிர்காலத்தைப் பற்றி சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தால் எப்படி ரசிகனை ஏமாற்ற முடியும் என்பதற்கு இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்பதிவும் ஒரு மிகப் பெரிய உதாரணம்.
ஒளிப்பதிவாளர் தேவசூர்யா படம் முழுவதையும் கிரின்மேட்டுக்குள்தான் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது அந்த கிரீன்மேட்டுக்குப் பதிலாக அவர்கள் காட்டி இருக்கும் லொகேஷன் இடங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக பொருத்தம் இல்லாமல் தரம் குறைவாக இருப்பதால் கிரீன்மேட் காட்சிகள் பல்லை இளிக்கின்றன.
சிற்சில இடங்களில் நிஜமான இடங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும் அவையும் சென்னையை சுற்றி இருக்கின்ற பகுதிகளாகத்தான் இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளை காட்டுவதற்காக படத்தின் கலரையும், கிரே கலருக்கு கொண்டு வந்து படம் முழுவதும் நம் கண்களை பதம் பார்த்து இருக்கிறார்கள்.
சந்தோஷ் ராமன் இசையில் பாடல்கள் ஒலித்தன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்படாமல் ஏனோதானோ என்று இருக்கிறது. இதை விடவும் சவுண்ட் ரெக்கார்டிங் கொடூரமானதாக இருந்ததால் அவர்கள் பேசுகின்ற வசனமும், நமக்கு எரிச்சலைத்தான் தந்தது.
அரவிந்தன் ஆறுமுகத்தின் படத் தொகுப்புதான் இந்த படத்தை ஒரு சினிமாவாக மாற்றி அமைத்திருக்கிறது. இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து உருவாக்கி கொடுத்த டெம்ப்லேட் காட்சிகளை எல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து ஒரே மாதிரியான கலர் கிரீடிங் கொண்ட படமாக இதை கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். இவருடைய உழைப்புக்கு நிச்சயமாக நாம் பாராட்டினை தெரிவிக்க வேண்டும்.
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் ஹாலிவுட் படம்போல் தமிழில் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்தப் படத்தை கொடுத்திருந்தாலும் இது யானைக்கு சோளப்பொரி கொடுத்த கதையாகத்தான் முடிந்திருக்கிறது.
கிராபிக்ஸிலும் தெளிவில்லை. காட்சி அமைப்பிலும் தெளிவில்லை. வசனத்திலும் தெளிவில்லை. திரைக்கதையிலும் தெளிவில்லை. நடிகர்களின் நடிப்பை பார்த்தால் ஏதோ டான்களின் சாம்ராஜ்யத்தை காட்டுவதுபோல டான் படங்களுக்கே உரிய கெத்துடன் வந்து சென்று இருக்கிறார்கள்.
நினைப்பதை எல்லாம் படமாக்கிவிட முடியாது. நினைப்பது வேறு. படமாக்கும் திறமை என்பது வேறு. படைப்பாக்கல் திறமை இருந்தால் மட்டும்தான் நாம் நினைத்ததை மிக அழகாக தெளிவாக திரையில் கொண்டு வந்து நிறுத்த முடியும். அதை இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் சரியாக செய்தாரா என்பதை அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை காட்டுவதாக சொல்லி அந்த கொடுமைகளையே கொடுமையாக படம் எடுத்து வைத்திருப்பதெல்லாம் எந்த வகையிலும் நியாயம் இல்லை இயக்குநரே?!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக இந்த ரெட் பிளவரை சித்தரித்து இந்தியாவின் ஒற்றுமையையும் தேசபக்தியையும் ஜெய்ஹிந்த் கோஷத்தையும் முன் நிறுத்தி இந்தப் படத்தை அவர் கொடுத்திருந்தாலும் உண்மையாகவே இந்திய தேச பக்தர்களுக்கு இந்த படம் ஒரு சோதனையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத்தான் இந்தப் படத்தை செய்திருக்கிறார் இயக்குநர்.
படம் பார்த்து முடித்த பின்பு “ஜெய் ஹிந்த்” என்று சொல்வதா?.. “வந்தே மாதரம்” என்று சொல்வதா?… “பாரத மாதாகி ஜே?”… என்று சொல்வதா என்று நமக்கே புரியவில்லை.
RATING : 2 / 5









