full screen background image

கிங்டம் – சினிமா விமர்சனம்

கிங்டம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் கிரியேஷன்ஸ், மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பாக தயாரிப்பாளர்கள் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்ய தேவ், வெங்கடேஷ் வி.பி., அய்யப்பா பி. சர்மா, கோபராஜு ரமணா, மணீஷ் சவுதாரி, பாபுராஜ், மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித் கோஷி, ரோகிணி, பூமி ஷெட்டி, ரவி கிருஷ்ணா, நவ்யா சுவாமி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

​எழுத்து, இயக்கம் – கவுதம் தின்னனூரி, இசை – அனிருத், ஒளிப்பதிவாளர்கள் – ஜோமோன் டி ஜான் ISC &  கிரீஷ் கங்காதரன் ISC, படத் தொகுப்பு – நவீன் நூலி, சண்டை பயிற்சி இயக்குநர் – யானிக் பென், சேதன் D’Souza & ரியல் சதீஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவிநாஷ் கொல்லா ஆடை வடிவமைப்பாளர் – நீரஜா கோனா, பாடல்கள் – சூப்பர் சுப்பு – விஷ்ணு எடவன், வசனம் – கே.என்.விஜயகுமார், நடன இயக்குநர் – விஜய் பின்னி, கலர் கிரேடிங் – ரங்கா, ஒலி வடிவமைப்பு – Sync சினிமா, ஆடியோகிராபி – விநய் ஸ்ரீதர், VFX மேற்பார்வையாளர் – வசுதேவராவ்.எம்., பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

இதுவும் போலீஸ் ஸ்டோரிதான். தெலுங்கு படவுலகின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவை மட்டுமே நம்பி இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் கவுதம் தின்னனூனி முதலில் இயக்கிய ஜெர்சி திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு முழுக்க, முழுக்க உணர்ச்சி குவியலாக இருந்தது. ஆனால் அவருடைய இரண்டாவது திரைப்படமான இந்தப் படம் ரத்தக் குவியலாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்.

படத்தின் கதை 1990-களில் நடைபெறுகிறது.  மசூலிப்பட்டினத்தில் வசிக்கும் விஜய் ஒரு முரட்டுத்தனமான, கோபக்காரரான போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.

இளம் வயதில் வீட்டிலிருந்து ஓடிப் போன அவருடைய அண்ணன் சத்யதேவை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார். அவரே போலீஸ்காரராக இருந்தாலும் பல்வேறு வகைகளில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து அண்ணனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த நிலையில் அங்கே இருக்கும் போலீஸ் துணை கமிஷனரை மரண அடி அடித்து விடுகிறார் விஜய். இதற்காக அவர் மீது என்கொயரி நடக்கிறது. உயர் அதிகாரிகளின் விசாரணையில் தன்னுடைய புத்திசாலித்தனமான பேச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு பேசி தப்பிக்கிறார் விஜய்.

இவருடைய புத்திசாலித்தனத்தை பார்த்த மற்றொரு போலீஸ் உயரதிகாரி இவரை அண்டர்கிரவுண்ட் போலீசாக அதாவது உளவாளியாக வேலை செய்யும்படி சொல்கிறார். முதலில் அதை மறுக்கும் விஜய் பின்பு இவர் யாரைத் தேடிச் செல்ல சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு உடனே “ஓகே” என்கிறார்.

இத்தனை ஆண்டு காலம் தான் தேடி வரும் தன்னுடைய சொந்த அண்ணன் சத்யதேவைத்தான் தேடித்தான் தான் போக வேண்டும் என்பதை உணர்ந்த விஜய் டபுள் ஓகே சொல்லிவிட்டு இந்திய உளவாளியாக மாறுகிறார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பக்கத்தில் திதி என்ற தீவு இருக்கிறது. அங்கே பழங்குடி இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாண துறைமுகத்தில் இருந்து கடத்தல் பொருட்களை கடத்துவதற்கு கடத்தல்காரர்களுக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

“அந்தப் பழங்குடியின கூட்டத்தின் தலைவன்தான் உங்க அண்ணன் சத்யதேவ்” என்று இந்த உயர் அதிகாரி சொல்லி இருக்கிறார். அதோடு, “உன்னுடைய அண்ணனை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட வேண்டும். அந்தப் பழங்குடியின மக்களில் யார், யார் கடத்தலுக்கு உதவுகிறார்கள் என்பதை தெரிந்து சொல்ல வேண்டும். இந்த கடத்தல் காரர்கள் யார் என்பதையும் துப்பறிந்து இந்திய அரசுக்கு சொல்ல வேண்டும்.” இதுதான் விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட்.

விஜய் தன்னுடைய அண்ணனை சந்திக்கும் துடிப்போடு இலங்கை வருகிறார். முன்பே திட்டமிட்டபடி ஒரு சிறை கைதியாக மாறி  தன் அண்ணன் ஜெயிலில் இருக்கும் அதே ஜெயிலுக்குள் வருகிறார் விஜய். தன் அண்ணணையும் சந்திக்கிறார். அண்ணனிடம் நான்தான் உன்னுடைய தம்பி என்கிறார். அண்ணனோ சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் ஒரு கெட்டவனாக கடத்தல்காரனாக இருப்பதை தம்பிக்கு உணர்த்துகிறார். அண்ணனுக்கு மனைவியும் மகனும் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் அந்த புதிய மக்கள் ஒரு முறை கூட கடல் கடந்து துறைமுகத்தில் கால் வைத்ததே இல்லை. யாரையுமே கரைக்கு வர விடாமல் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது விஜய்க்கு அங்கு போன பின்புதான் தெரிகிறது.

அந்த மக்களுக்கு ஒரு சுதந்திர காற்றை கொடுக்க வேண்டும். அதே சமயம் தன்னுடைய அண்ணனை மீட்க வேண்டும். இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் கடத்தல்காரர்கள் மொத்தப் பேரையும் உயிருடன் பிடிக்க வேண்டும்.

இந்த அசைன்மெண்டுகள் விஜயின் மைண்ட்டில் இருக்க… அவர் என்ன செய்கிறார்… எப்படி இந்த அசைன்மெண்ட்களை செய்து முடிக்கிறார்… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயமாக இந்த படம் ஒரு முக்கியமான திரைப்படமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார். ஓவர் எமோஷன் செயல்களை எல்லாம் காட்டாமல், உணர்ச்சிக் குவியல்கள் எல்லாம் இல்லாமல் மிக எளிமையான ஒரு நடிப்பையே படம் முழுவதும் தந்திருக்கிறார்.

அவருடைய அண்ணனுடன் சண்டையிட்டுக் கொண்டே அவர் பேசுகின்ற அந்த பேச்சும், அண்ணனும் தம்பியும் பாசத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த காட்சியில் இருவரின் நடிப்பும் அபாரம்.

எந்த ஒரு அதீத உணர்ச்சிகளையும் காட்டாமல் மிக எளிமையாக அந்த புரிதலை அவர்கள் இருவரும் அந்த கட்சியில் காட்டி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படம் முழுவதுமே அவர்கள் இருவரும் நடித்துக் காண்பித்திருக்கும் பாச உணர்ச்சிகள் நிச்சயம் இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

சண்டைக் காட்சிகளிலும் தெறிக்க விட்டிருக்கிறார் விஜய். அவருடைய கடுமையான உழைப்பு சண்டை காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சில ஆக்சன்களிலேயே அவருடைய முகபாவனையிலேயே அந்த காட்சிக்குரிய நடிப்பை அவர் காண்பித்திருக்கிறார்.

நாயகியுடனான டூயட் காட்சி படத்தில் கட் செய்யப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த பாடல் கட்சிகூட அழகாகத்தான் இருந்தது. அதையும் வைத்திருந்தால் ரசிகர்களுக்குக் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்திருக்கும். தன் தரப்பு நியாயத்தை நாயகியிடம் சொல்லுகின்ற அந்த அமைதியான விஜய்யை, நிச்சயம் வேறு எந்தப் படத்திலும் அவருடைய ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

நாயகியான பாக்யஸ்ரீ போர்சேவுக்கு மிகப் பெரிய அளவுக்கான காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை. அதனால் அவருடைய நடிப்புத் திறமையை முழுமையாக பார்ப்பதற்கு இன்னொரு திரைப்படத்திற்காக நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

அண்ணனாக நடித்திருக்கும் சத்யதேவ், படத்தில் இன்னொரு ஹீரோ போலவே தோற்றம் அளிக்கிறார். அவருடைய தோற்றப் பொலிவும், நடிப்பும் குளோசப்பில் அவருடைய பல்வேறு நடிப்பு பரிமாணங்களை பார்க்கும்பொழுது மிகச் சிறந்த நடிகராக அவர் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷ் அட்டகாசமான நடிப்பை காண்பித்து இருக்கிறார். வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்ற எல்லைர் கோட்டுக்குள் போகாமல் இயல்பான ஒரு திமிர்த்தனத்தை தன்னுடைய முகத்திலேயே காட்டியிருக்கிறார்.

உளவுத்துறை அதிகாரியாக நடித்த விஜய பிரகாஷ் தன்னுடைய முகத்திலேயே கடுமையைக் காட்டி ஒரு வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். அம்மாவாக ரோகிணி ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

பழங்குடியின மக்களின் தலைவனாக நடித்தவர் சிறந்த குணச்சித்திர நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும் ஓடியப்பனாக நடித்த பாபுராஜ், பூமி சக்தி, ரவி கிருஷ்ணா, அஜித் கோஷை, நவ்யா சுவாமி, மகேஷ் அச்சந்தா என்று சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்கூட சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் கிரீஸ் கங்காதரன் மற்றும் ஜோமொன் டீ ஜான் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள் இலங்கை தீவின் அழகையும் அதன் கடலோர நிலப்பரப்புகளையும், யாழ்ப்பாண துறைமுகத்தையும் அவர்கள் காட்டியிருக்கும் விதம் அழகோ அழகு.

சண்டை இயக்குநர்களான யானிக் பென், சேத்தன் டிசெளசா, ரியல் சதீஷ் மூன்று பேருமே மூன்று சண்டை காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். ஆனால் கடைசி சண்டை காட்சி ரத்த குவியல், ரத்த சிதறல் என்று சொல்லலாம். இந்தப் படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து இருக்கவே கூடாது என்பதை படத்தின் இறுதியான கிளைமாக்ஸ் சண்டை காட்சி நமக்கு பறைசாற்றுகிறது. நிச்சயம் இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். இதற்கு இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளே சான்று.

அனிருத்தின் பின்னணி இசை இந்தப் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். படத்தின் முதல் பாதியில் அவருடைய இசையும் ஒரு தனித்து தெரிகிறது. இடைவேளைக்கு பின்பு பரபரப்பான காட்சிகளிலும், அமைதியான கட்சிக்கு பின்னால் ஒரு அடிதடி நடக்கப் போகிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் அனிருத். பாடல்களும் கேட்கும் ரகம்தான்.

நடனக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் நடன இயக்குநர். அந்த பழங்குடியின மக்கள் ஆடும் நடனத்தின்போது நாமும் சேர்ந்து ஆடலாமா என்று நினைக்க வைத்திருக்கிறது.

இவ்வளவு பெரிய படத்தை படத்தை எப்படித்தான் எடிட்டிங் செய்து கொடுத்தாரோ தெரியவில்லை. அந்த அளவுக்கு எடிட்டிங்கிற்கு மிகவும் கஷ்டமான காட்சி தொகுப்புகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்த பூர்வ குடி மக்களின் வாழ்க்கை கதையை படத்தின் துவக்கத்திலேயே காட்டுகிறார்கள். 1920-களில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் நிறைய வைரங்கள் கிடைப்பதாக பிரிட்டிஸாருக்கு தெரிய வர. அங்கே அவர்கள் முகாமிட்டு வைரச் சுரங்கங்களை அமைத்தார்கள்.

சுரங்கங்கள் அமைத்ததை எதிர்த்து அந்தப் பகுதியில் வசித்த பழங்குடியின மக்கள் பிரிட்டிஷ் படைகளுடன் நேருக்கு நேர் மோதி தோல்வி அடைந்தார்கள். உயிருடன் தங்களிடம் பிடிபட்ட பழங்குடியின மக்களை பிரிட்டிஷ் அரசு தங்களுடைய ஆதிக்கத்தில் இருந்த இலங்கைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைத்தார்கள்.

அப்படி வந்து சேர்ந்த பழங்குடியின மக்கள்தான் இப்போது கள்ளக் கடத்தலுக்கு துணை போகும் மக்கள் என்று படத்தின் இயக்குநர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது கற்பனைக் கதை என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியொரு மக்கள் அந்தப் பகுதியில் 1990-களில் இல்லவே இல்லை..! அதோடு அவர்களை ஆட்டிப் படைக்கும் கள்ள கடத்தல் கும்பல் தலைவராக தமிழர்களை காட்டி இருப்பது நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கையின் வரலாற்றை நினைத்துப் பார்த்தால் 1990-களில் தமிழர் சிங்களவர் இனப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தது. யாழ்ப்பாணத் துறைமுகம் செயல்படவே இல்லை. சில வருடங்கள் விடுதலைப் புலிகள் கையிலும், சில ஆண்டுகள் சிங்கள ராணுவத்தின் கையிலும் யாழ்ப்பாணம் இருந்ததால் கடத்தல் தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டார்கள் என்று சொல்வதெல்லாம் கற்பனைக் கதையாகத்தான் இருக்கும்.

இன்றுவரையிலும் அங்கே அடிபட்டு மிதிபட்டு வாழ்க்கையின் ஓரத்திற்கு சென்று பிச்சைக்காரர்கள் போல அடிமைகளாக வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள் மட்டும்தான். அவர்கள்தான் இந்த கடத்தல் தொழிலை செய்கிறார்கள் என்று அலட்சியமாக பழியைத் தமிழர்கள் மேல் தூக்கிப் போட்டு இருக்கிறார் இயக்குநர். இந்தக் கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக முருகன் என்ற ஒரு தமிழன்தான் என்று சொல்லி இருப்பதும் தமிழர்களை கேவலப்படுத்தும் செயல்தான்.

முருகன் என்ற தமிழனை விஜய் என்ற தெலுங்கன் இலங்கை சென்று வீழ்த்திவிட்டு பத்திரமாக ஆந்திராவுக்குத் திரும்பி வந்திருக்கிறான் என்பதை ஒரு படமாக எடுத்து அதையும் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கும் இந்தத் தைரியத்தை நாம் என்னவென்று சொல்வது..?

இந்தியாவிலேயே இளிச்சவாயன் தமிழன்தான் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேண்டுமா என்ன..?!

Our Score