full screen background image

அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்

அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சச்சின் சினிமாஸ் இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் எம்.ஐ.ஒய் ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர் செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

உதயா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ஜான்விகா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அஜ்மல் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். 

கன்னட திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீநிவாஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சேலத்தில் எம்.எல்..வை கொலை செய்த குற்றத்திற்காக சென்னையில் சரண் அடைந்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் ஏ.எல். உதயா.

அவரை நீதிமன்ற விசாரணைக்காக சேலத்திற்கு அழைத்துப் போக போலீசார் முடிவு எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் உதயாவைக் கொலை செய்ய ஒரு அரசியல் கும்பல் முயல்கிறது. அதே நேரம் காவல் துறையிலேயே ஒரு டீம் அவரை என்கவுண்டர் என்ற முறையில் சுட்டுக் கொள்ளவும் திட்டம் தீட்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அக்யூஸ்ட் என்ற குற்றச்சாட்டப்பட்டவரான உதயாவிற்கு பாதுகாவலராக சென்னையில் இருந்து சேலத்திற்கு உடன் பயணிக்கிறார் போலீஸ் கான்ஸ்டபிளான அஜ்மல்.

வழியில் போலீஸாரால் உதயாவுக்கு ஏற்பட போகும் என்கவுண்ட்டர் பிரச்சினை, மற்றும் பிற எதிரிகளால் உதயா கொல்லப்பட போகிறார் என்பதை எல்லாம் உணரும் அஜ்மல் அவரை காப்பாற்ற துணிகிறார். எப்படியாவது உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட வேண்டும் என்று அஜ்மல் நினைக்கஅவருடைய உயர் அதிகாரிகள் அதற்கு பல வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதையெல்லாம் தாண்டி அஜ்மல் எப்படி உதயாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார். ஆஜர்படுத்துகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

உதயாவின் கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் சின்ன சின்ன திருட்டுகளை செய்து அவ்வப்பொழுது சிறைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலியை எப்படியாவது திருமணம் முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் காதலியின் பாட்டி இதை எதிர்க்கிறார்.

இதற்கிடையில் தன் காதலியின் கையை பிடித்து இழுத்தவனை விரட்டிச் சென்று அவனுடைய கையையே வெட்டி எறிகிறார் உதயா. அந்த அளவுக்கு காதலியின் மீது வெறியுடன் இருக்கும் உதயாவிற்கு கடைசியாக காதலியும் கிடைக்காமல் போய் தான் யாரை வெட்டினோமோ அவனையே காதலி திருமணம் செய்து கொண்ட விஷயம் சிறையில் இருந்து வெளியே வரும் உதயாவுக்குத் தெரிய வர மனிதர் வெறுத்துப் போகிறார்.

அதன் பின்ப அவருடைய வாழ்க்கையில் நடைபெறும் மாற்றம்தான் அந்த எம்.எல்..வின் கொலை. எம்.எல்.ஏ வை எதற்காக கொலை செய்யப் போனார் கொலை செய்ய தூண்டியவர்கள் யார்இதற்கான ஒட்டு மொத்த விடையைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

உதயாவின் 25-வது ஆண்டில் இந்தப் படம் வெளிவந்திருப்பது மிக சிறப்பு. மிக சிறப்பான ஒரு நடிப்பையும் காண்பித்து இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத கேரக்டர் ஸ்கெட்ச் என்பதால் உதயாவின் இயல்பான, துறுதுறுப்பான, நடிப்பும், ஓட்டமும், சிரிப்பும் அவரைக் காப்பாற்றியிருக்கிறது.

காதலியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் எல்லை மீறி இருந்தாலும் அந்த நடிப்பிலும் ஒரு துடிப்பு தெரிகிறது. அதேபோல் காதல் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடையும் சோகத்தையும் அழகாக காட்டியிருக்கிறார் உதயா.

அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் எப்படி எல்லாம் ஒரு எளிய மனிதன் பாதிக்கப்படுவானோதுபோல உதயா இந்தக் கதையில் எம்.எல்.. தம்பியின் பாச பேச்சில், தேன் குழைந்த பேச்சில் விழுந்து இந்தக் கொலையை ஏற்றுக் கொண்டு செல்லும் கதையை மிக, மிக நியாயமான முறையில் எந்த லாஜி குறையும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அதை உதயாவும் அழகாக நடித்து உண்மையாக்கியிருக்கிறார்.

நாயகியான ஜான்விகா கேமிராவுக்கேற்ற அழகி. ஒரு பாடல் கட்சியில் அழகாக நடனமாடியிருக்கிறார். இரண்டு, மூன்று காட்சிகளில் மிக அழகாக நடித்தும் இருக்கிறார். இறுதிக் காட்சியில் ஏன் இப்படி செய்தாய் என்று உதயாவை கேட்கின்றபோது பரிதாப உணர்வையும் பெற்றுவிட்டார். பாராட்டுக்கள்.

எம்.எல்..வாக நடித்த பவன் அவருடைய தம்பியாக நடித்த ஸ்ரீதர் அவருடைய மனைவியாக நடித்த சுபத்ரா என்று இந்த குடும்பம் செய்யும் கோல்மாலில்தான் அப்பாவியான உதயாவின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. இவர்கள் மூவரும் இயக்குநர் சொன்னதைவிடவும் கூடுதலாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் சுபத்ராவின் அந்த கடைசி நிமிட ட்விஸ்ட் நாம் எதிர்பாராதது.

உதயாவின் அக்காவாக நடித்த தீபா, அரசியல்வாதியா நடித்திருக்கும் டி.சிவா மற்றும் பலரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மருதநாயகத்தின் கை வண்ணத்தில் சண்டைக் காட்சிகளும் சாலையில் நடக்கும் சேசிங் காட்சிகளும், பேருந்தில் நடக்கும் காட்சிகளும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒளிப்பதிவு இன்னும் தரமாக இருந்திருக்கலாம் என்பது நமது கருத்து.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் நிச்சயம் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தை விறுவிறுப்பாக நகரும் வகையில் அழகாக தொகுத்தளித்திருக்கிறார் பட தொகுப்பாளர் கே எல் பிரவீன். சண்டைக் காட்சிகளையும், பேருந்து விபத்து  காட்சியையும் படமாக்கி இருக்கும்விதமும் அதை படத்தொகுப்பு செய்த விதத்திலும் பாராட்டை பெறுகிறார்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும்.

ஒரு திருடனின் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று நம் அனைவரும் நினைக்கலாம். ஆனால் அவனை வைத்து சித்து விளையாட்டை காட்டும் அரசியல்வாதிகளினால் ஒரு சாதாரண மனிதன் எவ்வளவு பெரிய கொடியவனாக சித்தரிக்கப்படுகிறான் என்பதையும் அவனுக்குப் பின்னணியில் இருக்கும் ஆளும் அதிகார வர்க்கம் எந்த வகையில் தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதையும் இந்தப் படத்தில் சமுதாய நோக்கத்தோடு இயக்குநர் பிரபு சீனிவாஸ் பதிவாகி இருக்கிறார்

இதைவிடவும் சிறந்த இயக்கத்தில் இதைச் சொல்லி இருக்க முடியும். ஆனாலும் தன்னாலான வகையில் இயக்குநர் பிரபு சீனிவாஸ் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அவருக்கு நமது பாராட்டுக்கள்

படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்..!

RATING : 3 / 5

Our Score