இந்தப் படத்தை Vi Cinema Global Networks & Like Presents ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் நபி நந்து, ஷரத், ‘லப்பர் பந்து’ சுவாசிகா, பூனம் கவுர், வேல.ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராஜா சி.சேகர், இசை – மரியா மனோகர், படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சி இயக்கம் – அன்பறிவ், பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம், எழுத்து, இயக்கம் – எஸ்.விஜயசேகரன்.
‘போகி’ என்றால் பழையதை போக்குவது. பழைய பொருட்களை ஒழித்துக் கட்டுவது… என்ற ரீதியில் “சமூகத்திற்கு தேவையில்லாதவர்களை அப்புறப்படுத்துவது” அல்லது கொல்வது என்கின்ற அர்த்தத்தில்தான் இந்தப் படத்திற்கு போகி என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
தேனி அருகில் இருக்கும் மலை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருப்பவர் நபி நந்து. அவரும் அவருடைய நண்பர் சரத்தும் இணைந்து சில கொலைகளை சென்னையில் செய்கிறார்கள். அந்தக் கொலைகளை செய்தவர்களை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது.
அதே சமயம் இந்தர் கொலைகளுக்கு காரணமாக பாலியல் ரீதியில் பெண்களை பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றி பிளாக்மெயில் செய்யும் ஒரு மிகப் பெரிய சர்வதேச கும்பல் ஒன்று உள்ளது என்பதை கண்டறிகிறார்கள்.
அந்தக் கும்பலுக்கும் இந்த கதாநாயகர்களுக்கும் என்ன சம்பந்தம்? போலீஸ் இவர்களை ஏன் தேடுகிறது… கடைசியில் அந்த கும்பல் என்ன ஆனது.. அவர்கள் ஒழித்து கட்டப்பட்டார்களா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் விடுகதை.
ஹீரோவான நபி நந்து ஏற்கெனவே பல படங்களை நடித்தவர் போலத்தான் சிறந்த முறையில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் காதல் காட்சிகள் என்றில்லாமல் கோபம், ஆத்திரம் போன்ற நவரசங்களையும் கலந்து கட்டி கொடுத்து தானும் ஒரு நடிகர் என்கின்ற லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார்.
அதேபோல் தங்கை மீதான பாசத்தைக் காட்டுவதில் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டாரா என்று மற்றவர்கள் ஏங்குவதுபோல பாசமலர் அண்ணனாகவே படத்தில் ஜொலித்திருக்கிறார்.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் சரத்தும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற நடிப்பையை காண்பித்து இருக்கிறார். படத்தில் தங்கையாக நடித்திருக்கும் லப்பர் பத்து சுவாசிகா தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம் என்றாலும் மிக அழகாக படத்தில் தெரிகிறார்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள். மனைவியை துன்புறுத்தும் கணவனை சாட்டையால் அடித்து சாமி வந்ததுபோல் டிராமா போட்டு அவர் செய்யும் காமெடி கொஞ்சம் ரசிக்கத்தக்கது. அதே சுவாசிகாதான் மர்ச்சுவரியில் மொட்டை ராஜேந்திரன் செய்யும் அநியாயத்தை பார்த்துவிட்டு கோபத்தில் கொந்தளிக்கிறார். அந்த கொந்தளிக்கின்ற காட்சியில் சுவாசிகாவின் நடிப்பு சிறப்பு.
திறமையான போலீஸ் அதிகாரியாக வேல.ராமமூர்த்தி நடித்திருக்கிறார் சில காட்சிகளே ஆனாலும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் துவக்கத்தில் வந்து கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார். ஆனால், இவருடைய கதாபாத்திரம் எதற்காக வைக்கப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு அபத்தம். தேவையில்லாதது.
ஸ்கூல் பிரின்ஸ்பாலாக சங்கிலி முருகனும், பிச்சைக்காரன் கார்த்திக்கும் இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா சேகர் இன்னமும் கொஞ்சம் சிறந்த முறையில் ஒளிப்பதிவை செய்திருக்கலாம். ஆனால், சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் கட்சியையும் படமாக்கிய விதம் நன்று. இதற்காக சண்டைக் காட்சி இயக்குநரான அன்பறிவ் சகோதரர்களை மனதார பாராட்ட வேண்டும். இப்படி ஒரு வெறித்தனமான சண்டை காட்சியை கண்டிப்பாக இந்த மாதிரியான மீடியம் பட்ஜெட் படத்தில் பார்க்கவே முடியாது. மிகப் பெரிய பட்ஜெட் படங்களில், மிகப் பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே பார்க்க முடியும். அப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை இதில் அழகாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள் அன்பறிவ் பிரதர்ஸ்.
படத்தின் இன்னொரு இனிய அதிர்ச்சி. படத்தின் பாடல்கள்தான். மரிய மனோகரின் இசையில் பாடல்கள் அத்தனையும் லட்டு. அதிலும் ரோமியோ என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய வகையில் இருக்கிறது. நிச்சயம் இந்தப் பாடல் இந்த வருடத்தின் அனைத்து மேடைகளிலும் பாடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பின்னணி இசையில்தான் கொஞ்சம் நாடகத்தனமாகவும், பழைய காலத்து டிராக் போலவும் அமைத்திருக்கிறார் மரிய மனோகர்.
சுரேஷ் அர்ஸின் படத் தொகுப்பும் நன்றுதான். முன் பின்னான காட்சிகள் வடிவத்தில் நான் லீனியர் முறையில் படத் தொகுப்பு செய்யப்பட்டிருந்தாலும் நமக்கும் புரிவது போல படத்தின் கதையை இலகுவாக்கி தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.விஜய்சேகரன் பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் வெறுமனே உயிரோடு இருக்கும் வரையில் மட்டுமல்ல… இறந்த பின்பும் நடக்கிறது… இறந்த பின்பு உயிரற்ற உடலையும் காட்டி இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற ஒரு உண்மையை இந்தப் படத்தின் மூலமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர்.
பெண்கள் எந்தப் பக்கம் போனாலும், எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை கேலி, கிண்டல், தொந்தரவுகள், பாலியல் வன்புணர்வுகள் என்பதெவல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இதற்கு தீர்வை சொல்லக் கூடியவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை. இந்தப் படத்தில்கூட மொத்தக் கயவர்களையும் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள் என்று நினைத்த இடத்தில் மறுபடியும் இவர்களையும் தாண்டிய ஒரு மிகப் பெரிய மாபியா கும்பல் இருக்கிறது என்று சொல்லி படத்திற்கு இரண்டாம் பாகத்திற்கு அடிகோலிட்டு இருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இந்த படம் ஒரு முற்றுப் பெறாத திரைப்படமாகவே நமக்கு தோன்றுகிறது.
இரண்டாம் பாகத்துக்குரிய லீடினை வைக்காமல் அனைவருமே சுட்டுக் கொல்லப்பட்டதாக காட்சிகள் வைத்திருந்தால், நிச்சயம் இன்னமும் கூடுதலாக கை தட்டிப் பாராட்டியிருக்கலாம்.
இந்தப் படத்தை நிச்சயமாக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
RATING : 3.5 / 5









