விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா”, சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம் ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.
குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமடி.. ஆக்ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் 2013-ம் ஆண்டில் வெளியான “தேசிங்குராஜா”.
சரியாக 12 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகமாக இந்த “தேசிங்குராஜா–2” வெளியாகியுள்ளது.
இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரித்திருக்கிறார்.
‘தேசிங்குராஜா’வில் கதாநாயகனாக நடித்த விமல், இந்த “தேசிங்குராஜா–2”விலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் மூலமாக நடிகர் விமல், இயக்குநர் எழில் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.
s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா, டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார்.
இணை தயாரிப்பு – ஆர்.பாலகுமார், ஒளிப்பதிவு – செல்வா.ஆர்., எடிட்டிங் – ஆனந்த் லிங்கா குமார், கலை இயக்கம் – சிவசங்கர், வசனம் – முருகன், சண்டை இயக்கம் – ‘ஃபயர்’ கார்த்திக்(Fire Karthik), நடனம் – தினேஷ், பாடல்கள் – யுகபாரதி, விவேக், சுப்ரமணியம், பத்திரிக்கை தொடர்பு – ஜான்சன்.
வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் s.எழில்.
முதல் பாகத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் கதையில் எந்தவொரு தொடர்பும் இல்லை. அதேபோல் முதல் பாகத்தில் இருந்த சிரிப்பலையில் ஒரு சதவீதம்கூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னையில் இருக்கும் சுள்ளான்பேட்டை காவல் நிலையத்தில் படத்தின் ஹீரோவான விமல் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவருடைய ஸ்டேஷனில் வேலை செய்யும் காவலர்கள் அனைவருமே சிரிப்பு போலீசாகவே இருக்கிறார்கள்.
அதேபோல் இந்த ஸ்டேஷனுக்கு பக்கத்து ஸ்டேஷனில் நடிகர் புகழ் இன்ஸ்பெக்டராக பெண் வேடத்தில் இருக்கிறார். இந்த ஸ்டேஷனின் காவலர்களும் சிரிப்பு போலீஸாகவே தெரிகிறார்கள்.
சென்னையில் மிகப் பெரிய ரவுடியாக இருக்கும் மார்க்கெட் பாண்டி திடீரென்று படுகொலை செய்யப்படுகிறார். அவருடைய தலை கிடைக்கவில்லை. உடல் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த உடல் பாகம் இருந்த இடம் புகழின் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருவதால் அவர் இதை விசாரிக்க தொடங்குகிறார்.
அதே நேரம் மீன்வளத்துறை அமைச்சரான ரவி மரியாதான் இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கிறார் அவரை கண்டிப்பாக நாங்கள் படுகொலை செய்து விடுவோம் என்று மார்க்கெட் பாண்டியின் ஆட்கள் சபதம் எடுக்கிறார்கள்.
இது தெரிந்த அமைச்சர் ரவி மரியா போலீஸ் கமிஷனர் உதவியை நாடுகிறார். போலீஸ் கமிஷனர் அசிஸ்டன்ட் கமிஷனர் சந்திரகலாவிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார். இந்த சந்திரகலா விமலுடன் கல்லூரியில் படித்தவர். இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்தவர்கள்.
அதே நேரம் படத்தின் இன்னொரு ஹீரோவான ஜனா அதை ஊரிலேயே மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். இவரும் விமலுடன் படித்தவர்தான். சந்திரகலாவுக்கும் நன்கு தெரிந்தவர்தான். ஒரு கொலையை செய்துவிட்டு ஜெயிலுக்கும் சென்றுவிட்டு வெளியில் வந்தவர் மார்க்கெட் பாண்டியின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்.
சந்திரகலாவும், விமலும் இணைந்து ஒரு திட்டம் போட்டு அமைச்சரின் மகனை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்துவதற்காக அழைத்து வருகிறார்கள். ஆனால் வருகின்ற வழியில் ஜனா ஒரு சித்து விளையாட்டை காட்டி அமைச்சரின் மகனை படுகொலை செய்து விடுகிறார்.
இதனால் கோபமான அமைச்சர் போலீஸ் ஸ்டேஷனை தாக்குவதற்காக தன்னுடைய அடியார்களை அனுப்புகிறார். அந்த அடியாட்கள் போலீஸ் ஸ்டேஷனை அட்டாக் செய்ய போலீசுக்கு அவர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலினால் பெரும் பரபரப்பாக அமைச்சர் ரவி மரியாவை ராஜினாமா செய்யச் சொல்கிறார் முதல்வர் ஆர்.வி.உதயகுமார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கவும் ரவி மரியா அமைச்சரவையில் இருக்கும் பலருடைய அந்தரங்க லீலைகள் அடங்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் அதை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுக்கிறார். இதனால் முதல்வர் அரண்டு போகிறார்.
தான் மறைத்து வைத்திருக்கும் அந்த வீடியோக்களை எடுப்பதற்காக வங்கிக்கு வருகிறார் அமைச்சர் ரவிமரியா. ஆனால் வங்கியில் அவருடைய லாக்கர் திருடு போயிருக்கிறது. அது ஒன்றை வைத்துதான் தான் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும் என்பதால் அதை கண்டுபிடிக்க முனைகிறார் அமைச்சர் ரவிமரியா.
இந்தத் திட்டத்திற்கு ஹீரோ விமலும் ஹீரோயின் சந்திரலேகா என்ற புஜிதாவும் ஆதரவு கரம் நீட்டிக்கிறார்கள். இறுதியில் அந்த லாக்கர் கைக்கு கிடைத்ததா? மார்க்கெட் பாண்டியின் தலை கிடைத்ததா? புகழ் வழக்கை என்ன செய்தார்? ஜனா எப்படி தப்பித்தார்? ஜனா ஏன் அமைச்சரின் மகனை கொலை செய்தார்?
இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இரண்டே கால் மணி நேரம் பொறுமையுடன் நேரமும் இருந்தால் அமைதியாக தியேட்டரில் அமர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம்தான். என்னவானது இயக்குநர் எழிலுக்கு..? ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்கு பிறகு அவர் எடுத்த திரைப்படங்கள் அத்தனையும் படு தோல்வி தழுவி இருக்கின்றன.
இத்தனைக்கும் இதற்கு முன்பு அவர் எடுத்த அத்தனை படங்களும் சிறப்பாக இருந்தாலும் கடைசியாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அசுர மொக்கையாக இருப்பதன் காரணம் என்ன என்பதை தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
நகைச்சுவை திரைப்படம் என்று சொல்லிவிட்டு ஒரு காட்சியில்கூட நகைச்சுவையே வராத அளவுக்கு படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எழிலுக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
ஹீரோ விமல் என்றாலும் இன்னொரு ஹீரோவாக ஜனா என்பவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். விமலுக்கே வேலையில்லாத பொழுது ஜனா என்ன செய்வார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
புகழ் ஏதோ போனால் போகிறது என்று கத்தி கத்தி நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல படத்தில் நடித்த அத்தனை பேருமே ஓவராக பேசி பேசி.. அந்த பேச்சைக்கூட உச்சஸ்தாயில் கத்தி கத்தி நம்முடைய காதுகளையும் கிழித்திருக்கிறார்கள்.
விமல் நன்றாக கத்திப் பேசுகிறார். கொஞ்சமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடி இருக்கிறார். ஆனாலும் அவர் ஹீரோவா அல்லது காமெடியனா அல்லது என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது சத்தியமாக நமக்கே புரியவில்லை.
பெண் வேடத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கும் நடிகர் புகழ் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி படம் முழுவதும் கத்திக் கத்திக் கூப்பாடு போட்டு இருக்கிறார். இந்தக் கத்திக் கத்தித் கூப்பாடு போட்டதாலேயே அவருடைய கேரக்டர் நமக்குப் பிடிக்காமல் போகிறது. ஆனால், பெண் கதாபாத்திரத்தில் மிக அழகாக தெரிகிறார் புகழ். அவருடைய உழைப்பு அத்தனையும் வீணாகி போய்விட்டது என்பதுதான் வருத்தமான ஒரு விஷயம்.
நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடா, சந்திரகலா என்ற அசிஸ்டன்ட் கமிஷனர் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. ஏதோ வந்தோம்.. வசனம் பேசினோம்.. நடித்தோம்.. கிளம்பினோம் என்பதாகவே அவரும் தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார்.
இன்னொரு ஹீரோயினாக நடித்திருப்பவர் அல்பாயிசில் தன்னுடைய உயிரை விட்டு படத்தின் திரைக்கதையை நகர்த்த உதவியிருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் இயக்குநர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதை அப்படியே செய்துவிட்டு சத்தம் இல்லாமல் கிளம்பி போயிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.
இந்த படத்தில் நடிக்கும் பொழுதே இதில் என்ன காமெடி வருகிறது… இதில் என்ன காமெடி இருக்கிறது… யாருக்காவது சிரிப்பு வருமா என்ற சந்தேகம் எல்லாம் இந்த வேடங்களில் நடித்தவர்களுக்கு நிச்சயமாக எழுந்திருக்கும். அதை அவர்கள் இயக்குநரிடம் டிஸ்கஸ் செய்திருந்தால் படம் கொஞ்சமாவது உருப்பட்டிருக்கும்.
படம் நடிப்பு என்பதில்தான் படு சொதப்பலாக இருந்தாலும் தொழில் நுட்பத்திலும், இசையிலும் நிச்சயம் சொல்லத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. இசையில் மூன்று பாடல்களுமே அமர்க்களம் என்றாலும் டோலி என்கின்ற பாடல் இன்னமும் அவர்களமாக இருக்கிறது. அதனுடைய நடனமும் சிறப்புதான்.
ஒளிப்பதிவாளரின் வண்ணமயமான ஒளிப்பதிவில் படம் குறையில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. கலை இயக்கம் செய்தவரையும் நிச்சயமாக பாராட்ட வேண்டும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மற்ற இடங்களில் எல்லாம் கலை இயக்கத்தை சிறப்பாக செய்திருக்கிறார் அதன் இயக்குநர்.
இந்தப் படத்தை இயக்குநர் எழில் எதற்காக எடுத்தார் என்பதை நிச்சயமாக பின்னாளில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தயாரிப்பாளரின் மகனான ஜனா என்ற இரண்டாவது ஹீரோவுக்காவது ஒரு முக்கியத்துவம் கொடுத்து அவரை ஒரு நல்லவிதமான கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால்கூட பரவாயில்லை என்று பாராட்டியிருக்கலாம்.
ஆனால் படம் முழுவதும் ஒன்றுமே இல்லாத கதை, திரைக்கதையை வைத்து… ஜீவனே இல்லாத வசனத்தை பேச வைத்து… அதுவும் படம் முழுவதும் அத்தனை நட்சத்திரங்களும் 100 டெசிபலில் கத்திக் கத்திப் பேசி நம் காதை கிழித்ததோடு மட்டுமல்லாமல், இந்தப் படத்துக்கு வந்ததுக்கு இதுதான் உனக்கு தண்டனை. இனி சினிமா பார்க்க வருவியா என்று கேட்டு கேட்டு நம்மை தியேட்டரை விட்டு துரத்தி அடித்து இருக்கிறார்கள்.
இயக்குநர் எழிலுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மிகச் சிறப்பான ஒரு இயக்குநர் அவர். ஆனால் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் ஒரு மொக்கை படத்தை கொடுத்து நம்மை சோதித்து இருக்கிறார்.
ஐயா எழில் அவர்களே உங்களிடத்தில் ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அது என்ன என்பதை தயவு செய்து தனியே அமர்ந்து யோசித்து பார்த்து அதை அடுத்த முறை செய்யாமல் தவிர்த்துவிட்டு வெற்றி பெறப் பாருங்கள்.
ஏனெனில் உங்களுடைய முந்தைய ரெக்கார்டுகள் அனைத்துமே மிகச் சிறப்பானவை அந்த பழைய எழிலையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
RATING : 2.5 / 5









