full screen background image

அஸ்திரம் – சினிமா விமர்சனம்

அஸ்திரம் – சினிமா விமர்சனம்

பெஸ்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தன.சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘இறுதிச்சுற்று’ மற்றும்  ‘சூரரைப் போற்று’ படங்களில் துணை படத் தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார். பத்திரிக்கை தொடர்பு ; A.ஜான்.

இதன் கதையை கதாசிரியர் ஜெகன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும் படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை தமிழகமெங்கும் பைவ்-ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார்.

கொடைக்கானலில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ‘அகிலன்’ என்ற ஷாம். இவரது மனைவி ஒரு பத்திரிக்கையாளர். இவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்து உடனேயே இறந்துவிட்டது. அதன் காரணமாக அவருடைய கர்ப்பப்பை சேதம் அடைந்து விட்டதால் இனிமேல் அவருடைய மனைவி கருத்தரிக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்த சோகத்தினால் சோர்வடைந்திருக்கும் ஷாம் தற்போது விடுமுறையில் இருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் கொடைக்கானலில் ஒரு பூங்காவில் சாதாரணமாக நடந்து வந்த ஒரு இளைஞன் திடீரென்று கத்தியை எடுத்து தன் வயிற்றைத் தானே கிழித்துக் கொண்டு இறந்து போகிறான். போலீஸ் இதை விசாரித்துக் கொண்டிருக்கும்பொழுது இன்னும் இரண்டு இடங்களில் இதே போன்று மேலும் இரண்டு இளைஞர்கள் தங்களின் வயிற்றை கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்தத் தற்கொலை வழக்குகளை திண்டுக்கல் எஸ்.பி.யான அருள் சங்கர் இன்ஸ்பெக்டர் ஷாமிடம் விசாரிக்க சொல்லுகிறார். ஷாம் கொஞ்சம், கொஞ்சமாக விசாரிக்க ஆரம்பிக்க தற்கொலை செய்து கொண்ட அந்த மூன்று இளைஞர்களுக்குள் ஒரே ஒரு ஒற்றுமை இருப்பது தெரிய வருகிறது. அது என்னவெனில், மூன்று பேருமே செஸ் பிளேயர்கள்.

செஸ் பிளேயர்ஸ் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.. எதற்காக அதிலும் பலர் பார்க்கும் படியான இடத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.. இதன் பின்னணியில் ஏதோ உளவியல் சிக்கல் இருக்கிறது… என்பதை உணர்ந்து அதை நோக்கி விசாரணையை முடுக்குகிறார் ஷாம்.

இந்த நேரத்தில் அவரை சந்திக்கும் அவருடைய பள்ளிக் கால நண்பன் இந்தத் தற்கொலைகளைப் பற்றி பல விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று சொல்லி ஷாமிடம் வந்து உட்கார்ந்து பேசுகிறான்.

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் அவர்கள் படித்த பொழுது நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் இது இருப்பதை ஷாம் உணர்ந்த அதே நேரத்தில் அந்த பள்ளி நண்பனின் அண்ணனும் திடீரென்று வீட்டுக்குள் வர… இருவருமே தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்டு ஷாமின் கண் எதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே அவர் கண் முன்னாடியே இரண்டு தற்கொலைகள் நடந்திருப்பதால் கொடைக்கானல் அலறுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், கீழ் அதிகாரிகளை குடைந்து எடுக்கிறார்கள் இந்த சர்ச்சையினால் ஷாமிடமிருந்து இந்த விசாரணையே பறித்து வேறொருவரிடம் கொடுக்கும் எஸ்.பி.அருள்சங்கர் ஷாமை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்கிறார்.

ஆனால் ஷாம் மறைமுகமாக தன்னுடைய பழைய உதவியாளர் எஸ்.ஐ. ஒருவரை உடன் வைத்துக்கொண்டு மேலும் இது குறித்து விசாரிக்கத் துவங்குகிறார். இந்த தற்கொலைகளுக்கு பின்னால் ஒரு புத்தகம் இருப்பதை ஷாம் கண்டறிகிறார்.

கிபி 1300 களில் ஜப்பானில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அந்த செஸ் ஆட்டத்தை முன் வைத்து ஜப்பானிய மன்னர்கள் விளையாடிய ஒரு கோர சம்பவத்தின் தொகுப்புதான் அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தில் இருக்கின்ற நடந்த சம்பவங்கள்தான் இப்பொழுது கொடைக்கானலில் தன் கண் முன்னே நடந்தது என்பதை உணர்கிறார் சாம்.

அந்தப் புத்தகத்தை மையமாக வைத்து தன்னுடைய விசாரணையை முடக்குகிறார். அந்தப் புத்தகத்தில் அடுத்து என்ன சொல்லி இருக்கிறது… அடுத்து யார் இந்த தற்கொலையில் விழப் போகிறார்கள்… தற்கொலை முயற்சிக்கு தூண்டுவது யார்… அந்தக் குற்றவாளிகளை அகிலன் கடைசியாக பிடித்துவிட்டாரா… என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

ஷாமுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நடிப்பினை கொடுத்திருக்கும் படம் எது. ஒரு மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், துடிப்பான அதிகாரியாகவும் களமிறங்கி, குற்றச் செயலை கண்டுபிடிக்கத் துடிக்கும் ஷாமின் துடிப்பும், படபடப்பும் சேர்ந்து நம்மையும் படத்துக்குள் ஆழ்த்திவிட்டது.

குடும்பப் பிரச்சினை ஒரு பக்கம் அவரை ஆழ்த்த, இன்னொரு பக்கம் தன் கண்ணெதிரே இரண்டு தற்கொலைகள் நடந்துவிட தான் இதில் நேரடியாக விசாரிக்க முடியாவிட்டாலும் விசாரித்த தீர வேண்டும் என்று வெறியோடு அவர் இறங்கும் பிற்பகுதி ஆட்டம்தான் இந்தப் படத்தை கவனிக்க வைத்திருக்கிறது.

ஷாமின் மனைவியாக நடித்திருக்கும் நீராவுக்கு மிகப் பெரிய அளவுக்கான நடிப்பு இல்லை என்றாலும் இருந்த கட்சிகளிலும் தன்னுடைய நடிப்பினை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஷாமின் உதவியாளராக நடித்திருக்கும் சுமந்தும் படத்தின் கதையை நகர்த்துவதற்காக பெரிதாக உதவி இருக்கிறார். கடைசியில் இவருக்கு நேரும் சோகமும் மிகப் பெரிய டிராஜிடிதான்.

மனநல மருத்துவரான நிழல்கள் ரவி மிகவும் அழுத்தம் திருத்தமாக தன்னுடைய கண்ணீர் குரலில் செஸ் புத்தகத்தில் இருக்கின்ற அந்த சீக்ரெட்டை விவரித்து கடைசியில் அவரும் இதில் மாட்டிக் கொள்ளும்பொழுது நமது பரிதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

போலீஸ் உயரதிகாரியான அருள் ஜோதி ஒரு உயர் போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். சைக்கோ கொலையாளியாக வரும் வில்லனும், தத்தையாக நடித்திருக்கும் ஜீவா ரவி.. மேலும் வெண்பா, ரஞ்சித், ஜெயா மார்ட்டின் என்று படத்தில் நடித்த பலரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்கள். இதற்கு இயக்குனரின் இயக்கத் திறமையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் கல்யாண வெங்கட்ராமன் கொடைக்கானலின் அழகை அவ்வப்பொழுது சில சில காட்சிகளில் மட்டும் காண்பித்து இருக்கிறார். மற்றபடி இந்த படம் சென்னையில் எடுத்திருந்தால்கூட நம்முடைய மனதை தொட்டிருக்கும். அந்த அளவுக்கு கதையும் திரைக்கதையும் மிக வேகமாக பறந்து இருப்பதால் ஒளிப்பதிவாளரின் பங்கு சிறப்புதான்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களை விடவும் பின்னணி இசை அபாரம் என்றே சொல்லலாம். ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்திற்கு எந்த மாதிரியான பின்னணி இசை வேண்டுமோ அதை அழகாக கொடுத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளர் பூபதி வேதகிரி படத்தில் முன்னும், பின்னுமான காட்சிகள் நகர்வதிலும், ஒரு கொலையை காரணத்தை கண்டறியும் துப்பறியும் அந்த வேகத்தை கொட்டுவதற்காகவும் பல இடங்களில் தன்னுடைய எடிட்டிங் திறமையை காண்பித்து இருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

மெஸ்மரிசம் என்று சொல்லப்படும் ஒரு நவீனத்துவமான மன ரீதியான அடிமைத்தனத்தை கொண்டத.. மருத்துவர் ரீதியில் அதை வெளிப்படையாக காட்ட முடியாத தனித்திறன் கொண்டது. அந்த்த் திறனை பயன்படுத்தி எதிராளிகளையும், அப்பாவிகளையும் தன்னுடைய ஆளுமைக்கு உட்படுத்தி.. அவரை தற்கொலை செய்யத் தூண்டும் அந்த செயலை செய்பவர் யார் என்பதை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்பதாக இந்த படத்தில் முடித்து இருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

படத்தில் அடிக்கடி காட்டப்படட்டும், சொல்லட்டும், பேசப்பட்டும் இருக்கும் அந்த ஜப்பானிய அரசர் பின்னணியில் இருக்கும் செஸ் போர்டு கதையை மட்டும் கொஞ்சம் குறைத்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

மற்றபடி இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியை இந்த படத்தின் முடிவு நமக்கு உணர்த்திவிட்டது. அந்த வகையில் இந்தப் படம் நிச்சயமாக ஒரு குறிப்பிட்டத்தக்க சிறந்த படம்தான்.

RATING : 3.5 / 5

Our Score