இத்திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ ராம்சரண் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்போது விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்க வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்ரீகாந்த் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சரின் இரண்டு மகன்களான ஜெயராமும், எஸ்.ஜே. சூர்யாவும் அடுத்த சிஎம் ஆக வேண்டும் என்று துடிப்புடன் இருக்கிறார்கள்.
அப்பாவை எப்படியாவது கொலை செய்தாவது கட்சியையும், ஆட்சியையும் பிடித்துவிட வேண்டும் என்று எஸ்.ஜ.சூர்யா துடித்துக் கொண்டிருக்கிறார்.
விசாகப்பட்டினம் கலெக்டராக பொறுப்பேற்று இருக்கும் ராம்சரண், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துவித மக்கள் விரோத செயல்களையும், அட்டூழியங்களையும் தடுக்கிறார்.
கனிம வளக் கொள்ளை, மணல் கொள்ளை உட்பட அனைத்து சட்ட விரோத செயலர்களுக்கும் தடை போடுகிறார்.
இதன் மூலமாக கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் மகன் அமைச்சர் எஸ் ஜே சூர்யா உடன் ராம் சரணுக்கு நேரடி முதல் ஏற்படுகிறது.
அமைச்சராக இருந்தும் தன் பேச்சை மாவட்ட கலெக்டர் கேட்க மறுக்கிறார் என்ற கோபத்தில் எஸ்.ஜே.சூர்யா இவரை கலெக்டர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஒரு அரசு விழா மேடையில் அமைச்சர் சூர்யாவை, ராம்சரண் கை நீட்டி அடித்து விடுகிறார்.
இந்த நேரத்தில் மீண்டும் முதலமைச்சர் சீரியஸாக மருத்துவமனையில் சேர்க்கப்பட அப்பொழுது மகனுக்கும், அப்பாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்று எஸ்.ஜே. சூர்யாவை கட்சியில் இருந்தும், அமைச்சர் பதிவில் இருந்தும் நீக்க முதலமைச்சர் ஸ்ரீகாந்த் உத்தரவிடுகிறார்.
இதைப் பார்த்து வெறியாகும் சூர்யா, முதலமைச்சரை கொலை செய்து விடுகிறார். “அடுத்த முதல்வர் நான்தான்” என்று ஜெயராமுடன் சண்டை இட்டு தானே முதல்வர் பதவியை கைப்பற்றுகிறார்.
ஆனால், இறந்து போன முதலமைச்சர் ஸ்ரீகாந்த் கடைசியாக மக்களுக்கு ஒரு வீடியோ செய்தியை கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
அந்தக் கடைசி வீடியோவில் தன்னுடைய அடுத்த வாரிசாக ராம்சரணை தேர்வு செய்திருப்பதாகவும், அவர்தான் இனிமேல் கட்சிக்கும், ஆட்சிக்கும் முதலமைச்சர் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இதை எஸ்.ஜே.சூர்யா எதிர்க்கிறார். இதற்கு முன்பாகவே தன்னை தாக்கியதாக ராம் சரண் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அதை வாபஸ் வாங்க மறுக்கிறார்.
அவர் வாபஸ் வாங்கினால்தான் முதலமைச்சராக ராம்சரண் பொறுப்பேற்க முடியும் என்று அவர் ஆணித்தரமாக சொல்ல ராம்சரண் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார்.
முதல்வர் பதவியில் உட்கார்ந்தவுடன் எஸ்.ஜே.சூர்யா, உடனடியாக ராம் சரணை பழி வாங்கத் துடிக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாக ராம் சரணை மத்திய அரசு மாநிலத் தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்து உடனடியாக ஆத்திராவில் தேர்தலையும் அறிவித்துவிடுகிறது.
“இப்போது நான்தான் தேர்தல் ஆணையர். நீ எப்படி ஜெயிப்பாய் என்று பார்க்கிறேன்” என்று ராம் சரணும், “உன் கண்ணு முன்னாடியே நான் முதலமைச்சராகி காட்டுகிறேன்” என்ற எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக் கொள்கிறார்கள்.
இந்த சவாலில் யார் ஜெயித்தார்கள்? யார் தோற்றார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இயக்குநர் ஷங்கரின் திரைப்படங்களில் என்ன மாதிரியான கதை இருக்கும் என்பது நமக்கு தெரிந்ததுதான். அதேபோல் இந்தக் கதையும் அவருடைய இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த பல திரைப்படங்களின் கதைகளைத் தொட்டுத்தான் அமைத்திருக்கிறது.
‘முதல்வன்’, ‘இந்தியன்’, ‘இந்தியன்-2’ என்ற மூன்று படங்களின் கலவையாகத்தான் இந்தப் படத்தையும் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர்.
மெகா பவர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ராம்சரண் அந்தக் கலெக்டர் என்ற பதவிக்கு ஒரு பொருத்தமான துடிப்பை காட்டுகின்ற வகையில்தான் நடித்திருக்கிறார்.
முதல் கட்சியிலிருந்து கடைசிவரையில் இது ஒரு ஹீரோவின் படம் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கான காட்சிகளும், அவர் காட்டுகின்ற மேனரிசமும், ஹீரோயிஸமும் ஈர்ப்பாக இருந்தாலும் அனைத்துமே ஓவர் டோஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
எஸ் ஜே சூர்யாவுடன் சவால் விடுவதும், அவருடைய அம்மாவான அஞ்சலி இடம் பணிந்து பேசுவதும், மருத்துவக் கல்லூரி மாணவராக இருக்கும்போது தன்னுடைய கோபத்தை காதலுக்காக விட்டுக் கொடுப்பதுமாய், அந்த வயதுக்குரிய ஒரு கதாப்பாத்திரத்தை நிறைவுற செய்திருக்கிறார் ராம்சரண்.
இடைவேளைக்கு பின்பு தலைமைத் தேர்தல் ஆணையராக வந்த பின்பு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் எஸ் ஜே சூர்யாவை கவுக்கலாம் என்று இவர் போடுகின்ற திட்டமும், அதற்கு எஸ்.ஏ சூர்யா கவுன்ட்டர் அட்டாக்காக செய்கின்ற செயல்களும் படத்தை ஒரு சுவாரசியமாக பார்க்க வைத்திருக்கிறது.
அந்த வகையில் ராம்சரணின் நடிப்பும் இந்தப் படத்திற்கு ஒரு பலம்தான்.
சந்தேகமே இல்லாமல் வருடத் துவக்கத்தில் மிகச் சிறந்த வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த எஸ்.ஜே.சூர்யா அவருடைய வழக்கமான, ஸ்பெஷலான வசனங்களை தொடர்ச்சியாக பேசுகின்ற டயலாக் டெலிவரி, அபிநயத்துடன் காட்டுகின்ற நடிப்பு இந்தப் படத்திலும் மிக நிறைய இடங்களில் இருக்கிறது. அத்தனைகளும் அனாசயமாக ஜெயித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அவருடைய அப்பாவிடம் தான் கட்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்றெல்லாம் கெஞ்சிக் கூத்தாடி தன்னுடைய டிஸ்மிஸை வாபஸ் பெற வைப்பதற்காக அவர் போடுகின்ற டிராமாவும், அதற்குப் பிறகு அப்பாவை அவரே கொலை செய்துவிட்டு அவரே செத்துட்டார் என்று சொல்லும் போதும் சபாஷ் போட வைத்திருக்கிறார் சூர்யா.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையை அடியோடு ஒழிக்க நினைக்கும் தலைமை தேர்தல் கமிஷனரை அவருடைய பாணியில் சென்று தடுக்க வேண்டும் என்று நினைத்து சூர்யா போடுகின்ற திட்டங்ஙள் ஒவ்வொன்றும் பணாலாகும்போது அவர் காட்டுகின்ற வெறியும் கோபமும், ஆத்திரமும், ஒரு வில்லனுக்குரிய நடிப்புதான். படத்தின் பிற்பகுதியில் படத்தைப் பெரிதும் தாங்கிப் படித்திருப்பது சூர்யா.தான்
ஹீரோயினாக நடித்திருக்கும் கியாரா அத்வானி ஒரு கமர்சியல் திரைப்படத்தில் ஹீரோயினுக்கு என்ன மாதிரியான வேடம் கிடைக்குமோ அதே அளவுக்கான ஸ்கோப்தான் இந்தப் படத்திலும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை சரியாகவே செய்திருக்கிறார்.
பாடல் காட்சிகளில் மிக கிளாமராகவும் பார்ப்பதற்கு அழகாகவும் தென்படும் கியாரா அத்வானியின் நடன அசைவுகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒன் சைடாகவே நடந்து வரும் கலெக்டரின் டவாலி சுனில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் அஞ்சலி கொஞ்சம் தமிழ் ரசிகர்களை அசைத்துப் பார்த்திருக்கிறார். அவருடைய மனநோயாளி கேரக்டர் நிச்சயமா ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தும்.
சமுத்திரகனி மற்றும் முதலமைச்சராக நடித்த ஸ்ரீகாந்த் நண்பராக நடித்த ராஜீவ் கனகா மற்ற அத்தனை பேருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதில் இந்தப் படமும் தப்பவில்லை. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமாக பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 90 கோடி செலவழித்திருப்பதாக படத்தை தயாரிப்பாளர் பெருமிதமாக மேடையில் சொன்னார்.அந்த பெருமிதத்தை திரையிலும் நாம் பார்க்கலாம்.
படத்தின் பாடல் காட்சிகள் அத்தனையுமே மிகப் பிரம்மாண்டம். மிக அழகாக கலை இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக ஒளிப்பதிவை கொட்டி இருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும், சண்டை காட்சிகளை படமாக்கிய விதமும் பாராட்டுக்குரியது.
பாடல் காட்சிகளில் சிசி எல்லாம் தேவையே இல்லை ஒரு நல்ல ஆர்ட் டைரக்டரும், ஒரு நல்ல ஒளிப்பதிவாளரும் கிடைத்தாலே போதும் என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்தப் படம் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
எஸ்.தமணின் இசையில் ஐந்து பாடல்கள். ஆனால் பாடல் வரிகள் நம் மனதில் நிற்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இன்றைய இளசுகளை தியேட்டரில் ஆட வைப்பதற்காகவும், மேடைகளில் ஆட வைப்பதற்காகவும் தேவையான அளவுக்கு ட்ரம்ஸ்சை தட்டு, தட்ட என்று தட்டியே இசையை அமைத்திருக்கிறார்.
அதோடு பாடல்களுக்கு ஏற்ற நடன அசைவுகளை நடன இயக்குநர்கள் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் ஒரு இசை கொண்டாட்டம்தான்.
சண்டைக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தொகுத்து அளித்த இயக்குநர் ஷங்கரின் வழக்கமான படங்களை போலவே ஜம்ப் டூ ஜம்ப் என்பதை போலவே காட்சிகளை நறுக்கி அடுத்த காட்சிகளுக்கு ஜம்ப் செய்து போய்க் கொண்டே இருக்கிறது.
ஷங்கருக்கு எப்பொழுதுமே அடுத்தடுத்த காட்சிகளை இணைக்க ஒரு பேட் இன், பேட் அவுட் என்றோ இயற்கை காட்சிகளை இணைப்பது பிடிக்காது.
இந்தப் படத்தில் அதேபோலத்தான் ஜம்ப், ஜ ம்ப்பாக படத் தொகுப்பாளர் காட்சிகளை அடுத்தடுத்து கச்சிதமாக நறுக்கிக் கொடுத்து இருக்கிறார்.
இந்த ப் படம் இப்போதைய அரசியலை பேசுகிறது என்றாலும் ஆந்திராவில் இந்தப் படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சந்தேகமும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான்.
ஏனென்றால் இந்தப் படம் துவங்கியபோது ஆந்திராவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது இந்த படத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராம் சரணின் சொந்த சித்தப்பாவான பவன் கல்யாண். சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆக இருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்தப் படம் வெளிவந்து அங்கு இருக்கின்ற அத்தனை அரசியல்வாதிகளும் திருடர்கள், அத்தனை அரசியல்வாதிகளுமே கனிம வள கொள்ளையர்களிடம் கமிஷன் வாங்கித்தான் சம்பாதிக்கிறார்கள். லஞ்சம் வாங்கித்தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்றெல்லாம் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பதால் நிச்சயமாக பவன் கல்யாண், சிரஞ்சீவி குடும்பத்திற்கும் இந்தப் படம் கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதல் பாதியில் கொஞ்சம் லாஜிக்கல் எர்ரர் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்ட இயக்குநர் ஷங்கர் இரண்டாம் பாதியில் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டார்.
தலைமை தேர்தல் கமிஷனர் என்ற வகையில் அவர் இந்தப் பதவிக்கு வருவதிலேயே லாஜிக்கே இல்லை.
ஒரு அரசு பணி நியமனம் எப்படி நடைபெறுகிறது? ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி நியமனம் செய்யப்படுகிறார்கள் இதெல்லாம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் கதை சொல்லலாம்.
ஆனால் இப்பொழுது எல்லாம் அனைத்து அரசு ஆணைகளும் உடனடியாக மக்களிடம் போய் சேர்ந்து விடுகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று மாநில அரசுக்கு தெரியாமல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அதுவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இருப்பவர் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்பதெல்லாம் நம்முடைய காதில் பூ சுற்றும் வேலைதான்.
தேர்தல் கமிஷனர் ஆளுங்கட்சியை எதிர்த்து மிகப் பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தியோ அல்லது மறைமுக தாக்குதல் செய்தோ இங்கு எந்த தேர்தலையும் நடத்திவிட முடியாது.
எல்லாருமே இங்கே கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போவார்கள். அதே சமயம் அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதும் தெரியும்.
இந்தப் படத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது நடைபெறுகின்ற அந்த சண்டை காட்சிகள் இந்தப் படம் ஹீரோயிச படம் என்ற ஒரே காரணத்திற்காகவே திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்கிறது.
அந்த சண்டை காட்சிகளுக்கு பதிலாக போகிற இடமெல்லாம் வீடியோக்களை வைத்து விட்டிருந்தாலே போதுமே?!
பூத்துகளுக்குள் நுழைந்து ஒரு முதலமைச்சரே அதுவும் ஆக்டிங் முதலமைச்சரே வாக்கு பெட்டிகளை உடைப்பது போல் காட்சிகளை வைத்திருப்பது டூ மச்சான திரைக்கதை ஷங்கர் அவர்களே!
இதற்குப் பதிலாக எஸ்.ஜே.சூர்யா செய்யும் அத்தனை நடவடிக்கைகளையும் மீடியாக்கள் மூலமாகவே ராம்சரண் கண்காணிப்பது திரைக்கதை அமைத்திருந்தால் ஈசியாக எளிதாக அதை முறியடித்திருக்கலாம்
ஆனால் ஹீரோ கடைசியாக சண்டையிட்டு அதிலும் பிரம்மாண்டமாக புல்டோசரை வைத்து சண்டையிட்டு அதன் மூலம்தான் வில்லனை பழி தீர்க்க வேண்டும் என்று எண்ணத்தில் ஷங்கர் கமர்சியல் பார்முலாவில் படத்தை முடித்து இருப்பதால் நமக்கு படத்தின் பிற்பகுதி உவர்ப்பாக இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் மிகப் பெரிய ரவுடியாக மாறி தரைக்கு வந்து ரவுடித்தனம் செய்கின்றார் என்றால் அதற்கு ஐஏஎஸ் அதிகாரியும் எதிர்த்து நிற்கலாம்தான்.
ஆனால் அதை முறைப்படி அதிகாரத்தை வைத்துக் கொண்டே மிக எளிதாக அந்த முதலமைச்சரின் முகமூடியை கிழித்திருக்கலாம். அதற்கான திரைகதைகள் அமைத்திருக்கலாம்.இ
இயக்குநர் ஷங்கர் திரைக்கதையில் இந்தப் படத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தில் சுவாரசியம் கருதி ஒரு ஐஏஎஸ் ஹீரோவுக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தையும், அனுமதியையும் கொடுத்தது தியேட்டரில் பலரையும் சிரிக்கத்தான் வைத்திருக்கிறது.
தேர்தல் கமிஷனர் என்ற அந்த வார்த்தைக்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவுக்கு ஒரு பரபரப்பையும், ஒரு பயத்தையும் உருவாக்கியவர் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.என்.சேஷன்தான்.
அவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த பொழுது அவர் நடத்திய தேர்தல் கண்டிப்புகளில் அண்ணா திமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி என்று அத்தனை பேருமே மாட்டிக் கொண்டு முழித்தார்கள்.
அந்த நிகழ்வுகளில் இருந்து கொஞ்சத்தையாவது எடுத்து இதில் பயன்படுத்தி இருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்தப் படம் ஷங்கரின் முந்தைய படங்களின் கலவையாதான் இருக்கிறது என்பதால் ஒரு தடவை பார்க்கலாம் என்கின்ற முடிவுக்கு மட்டும்தான் நம்மால் வர முடிகிறது.
‘முதல்வன்’ படம் வந்த பொழுதும், ‘இந்தியன்’ படம் வந்த பொழுதும் சமூகத்தில் ஏற்பட்ட ஒரு தாக்கத்தை இந்த படம் நமக்குள் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்தான்.
RATING : 3.5 / 5









