full screen background image

ஜீப்ரா – சினிமா விமர்சனம்

ஜீப்ரா – சினிமா விமர்சனம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த ஜீப்ரா”. 

ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றி பெற்ற செம்பருத்திசீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். 

இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னட சினிமாவில் இருந்து டாலி தனஞ்சயா என பெரும் நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கை கோர்த்திருக்கின்றனர். 

இவர்களுடன், பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும்  இணைந்து நடித்துள்ளனர்.

சலார்’ மற்றும் ‘கே.ஜி.எஃப்.’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான .பெண்குயின். மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரான ஈஸ்வர் கார்த்திக், ரு மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். 

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், பான் இந்திய வெளியீடாகதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகியுள்ளது. 

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக் குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக் களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக உள்ளது.

நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக் குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவமாக இத்திரைப்படம் வந்துள்ளது.

வங்கி பணியாளரான நாயகன் சத்ய தேவ், மற்றொரு வங்கியில் பணியாற்றும் தனது காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக மோசடி செய்து ரூ.4 லட்சத்தை கைப்பற்றித் தந்து தனது காதலியைக் காப்பாற்றுகிறார்.

அந்த 4 லட்சத்தை இழந்த ரவுடி, பழிக்குப் பழியாக அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மோசடி செய்து எடுத்து விடுகிறார்.

இந்த 5 கோடி ரூபாயால் இந்தியாவின் மிகப் பெரிய தாதாக்களின் இடையில் சிக்கிக் கொள்கிறார் நாயகன் சத்யதேவ். இதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் முயலும்போதெல்லாம் பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் அவரைச் சூழ்கிறது.

அதில் அவர் வெற்றி பெற்றாரா?.. இல்லையா?.. அவரது பெயரைப் பயன்படுத்தி அந்தப் பணத்தை எடுத்தது யார்? என்பதுதான் இந்தப் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

பார்ப்பதற்கு படித்த, டீஸண்ட்டான இளைஞன் தோற்றத்தில் இருக்கும் சத்யதேவ் தனது புத்திசாலித்தனத்தால் கடைசிவரையிலும் எதிரிகளிடம் போராடுவதில் தனது வன்மையான, தன்மையான நடிப்பைக் காண்பித்து ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

காதலியை காப்பாற்ற தீவிர முனைப்புடன் இறங்கியவர் தொடர்ந்து தன்னைச் சூழ்ந்து கொண்ட சங்கிலித் தொடர் பின்னல் வலையிலிருந்தும் தப்பிக்க ஒவ்வொரு சூழ்ச்சியையும், இன்னொரு சூழ்ச்சியால் வெல்லும் காட்சிகளில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார்.

மிகப்  பெரிய பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிலும் பயம், பதற்றத்தைக் காட்டி நமக்கும் ஒரு பரிதாபத்தை வரவழைத்து கடைசிவரையிலும் அவர் ஜெயித்தாக வேண்டுமே என்று நம்மையும் பிரார்த்திக்க வைத்துவிட்டார். இதுவே அவரது கதாப்பாத்திரத்திற்குக் கிடைத்த வெற்றிதான்..!

இவருக்குச் சளைக்காமல் ஈடு கொடுத்து வில்லத்தனத்தைக் கொட்டியிருக்கும் டாலி தனஞ்செயா பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். நடிப்பிலும் கவர்கிறார்.

இவர்களையும் தாண்டி தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜூடன் சின்னச்சின்ன ஆக்சன்களாலேயே சிரிக்கவும் வைத்து, ரசிக்கவும் வைத்திருக்கிறார் சுனில் வர்மா.

ஏ டூ ஒய் பாபாவாக நடித்திருக்கும் சத்யராஜ் ஓரிரு காட்சிகளில் வந்திருந்தாலும் அந்த லொள்ளு குறையாமல் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அவ்வப்போது ரசிகர்களை குலுங்க, குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் காமெடி நடிகர் சத்யா அக்காலா. ஓரிடத்தில் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன் தனது கம்பீர நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வங்கியின் மேனேஜராக லைட்டான வில்லியாக நடித்திருக்கும் ஜெனிபர் பிச்சாண்டிகோ அழகிலும், கொஞ்சும் தமிழிலும், நடிப்பிலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார். இவருடைய உடல் அழகைவிடவும், உடையழகு அபாரம்..!

ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மாரின் கேமிரா மிகப் பெரிய பட்ஜெட் படத்துக்கே உரிய தோரணையோடு படம் முழுவதும் பயணித்திருக்கிறது. நாயகி பிரியா பவானி சங்கர், ஜெனிபர், நாயகனின் அம்மாவாக நடித்தவர்களின் அழகை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திக் காண்பித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ரம்மியத்தையும், சண்டை காட்சிகளில் பயத்தையும் கொடுக்கிறது கேமிரா.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. படத்தில் வரும் ஒரு குத்துப் பாடலில் நடனம் நன்றாக இருந்த அளவுக்கு இசை இல்லாதது சோகம்தான்.

10 ரூபாய் டிக்கெட்டில் வந்து அமர்ந்திருப்பவர்களுக்கு எளிதில் புரியாத பல  விஷயங்களை மிக வேகமாக வசனத்தில் சொல்லி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதை தனது கச்சிதமான படத்தொகுப்பில் சேர்ப்பித்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்.

பொதுத்துறை வங்கிகளில் மட்டுமில்லாமல் தனியார் வங்கிகளிலும் இன்றைக்கும் நடந்து வரும் பல பண மோசடிகளை இத்திரைப்படத்தில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுவரையிலும் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளில் இருக்கும் பணத்தை வங்கி அதிகாரிகளே எடுத்துக் கொள்ளும் உண்மைக் காட்சிகளைப் பார்க்கும்போது படித்தவன்தான் அனைத்துத் திருட்டுக்களையும் செய்கிறான் என்பது நிரூபணமாகிறது.

ஒரு சினிமாவாகப் பார்க்கப் போனால் முதல் பாதியில் நாயகன் வங்கியில் செய்யும் பண மோசடிகள், வங்கிகள் செயல்படும் விதம் மற்றும் அதில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளின் ரகசியங்களை சுவாரசியமான திரைக்கதையின் மூலமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதியில் நடக்கும் வங்கி கொள்ளை மற்றும் டாலி தனஞ்செயாவின் சவால், அதைத் தொடர்ந்து நாயகன் செய்யும் அதிரடி ஷோக்களும் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தியிருக்கிறது.

னால் வங்கியைக் கொள்ளையடிக்கலாம். ஹர்ஷத் மேத்தா பாணியில் பணத்தை எடுத்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் வங்கியிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று தவறான ஒரு கொள்கையை முன் வைத்தமைக்காக இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

நாயகனும், எதிர் நாயகனும், சத்யராஜூம் சேர்ந்து செய்யும் அனைத்துவிதமான பொருளாதாரக் குற்றங்களுக்கும் எந்தவிதக் குற்றவுண்ர்ச்சியும் இன்றி படத்தை வெற்றிகரமாக முடித்தமைக்காக அந்தக் கேரக்டர்களை வடிமைத்த சிருஷ்டி என்ற முறையில் இயக்குநருக்கு நமது இன்னொரு கண்டனங்கள்..!

எப்படியிருந்தாலும், எண்ணிலடங்கா லாஜிக் மீறல்கள் படத்தில் இருந்தாலும், இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு சாகசம் நிறைந்த திரைக்கதையை திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று கடைசிவரையிலும் நம்மை ரசிக்க வைத்துவிட்டார் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக், இனி வரும் காலங்களில் தான் இயக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களில் இந்தப் படத்தில் செய்த பாவங்களை நிவர்த்தி செய்யும்விதமாய் நல்ல கதைகளை இதே சிறந்த இயக்கத்துடன் கொடுப்பார் என்று நம்புகிறோம்..!

RATING : 3.5 / 5

Our Score