full screen background image

“ரஜினிக்கு வழிவிட்டு ‘கங்குவா’ வேறு தேதியில் வெளியாகும்..” – நடிகர் சூர்யாவின் திடீர் அறிவிப்பு!

“ரஜினிக்கு வழிவிட்டு ‘கங்குவா’ வேறு தேதியில் வெளியாகும்..” – நடிகர் சூர்யாவின் திடீர் அறிவிப்பு!

சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்க,  பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘மெய்யழகன்’.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை  மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். அப்பாடலின்  ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

பிறகு,  பேசிய நடிகர் சிவக்குமார், “சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன் நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம்தான் செலவு ஆனது. 

சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம்பட்டி பகுதியில்தான் எனக்கு பெண் தந்தார்கள். சூர்யா, கார்த்தி சினிமாவிற்கு வரக்கூடாது என ஒளித்து வைத்து இருந்தேன். ஆனால் கடவுள் அவர்களை சினிமாவிற்கு வர வைத்துவிட்டார். தமிழர்கள் போட்ட பிச்சைதான் இவ்வளவும். எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும் எங்களது குடும்பத்திற்கு வேண்டும்” என்றார்.

இயக்குனர் பிரேம்குமார் பேசும்போது, “இந்த மெய்யழகன் முதலில் சிறுகதையாகத்தான் உருவானது.   பின்னர் படமாக பண்ண சொல்லியவர் விஜய் சேதுபதி ன். இந்தக் கதையை யாரும் பண்ண முன் வருவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் கார்த்தி சார் படித்து விட்டு ஒகே சொல்லியது மிகவும் மகிழ்ச்சி. அரவிந்த்சாமி சார் படம் பண்ணலாம் என்று சொல்லிய பின்புதான் படத்திற்கு முழு உருவம் கிடைத்தது. இது குடும்ப உறவுகள் பற்றிய படம்” என்றார்.

நடிகர் கார்த்தி, “இந்தக் கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து  வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்குத்தான் வருவோம். எங்க அம்மாச்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும்.

பொற்காலம் என்றால் லீவில் ஊருக்கு வரக் கூடிய நாள்தான். ஊரில் இருக்கும் 10 நாளும் அருமையாக இருக்கும். 8 பேருக்கு விறகு வைத்து சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். குடும்பத்தினர் உறவுதான் இந்த மெய்யழகன் படம்.

96 படத்தில் காதலிப்பவர்களை பிரேம்குமார் கதற விட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். பிரேம் குமாரின் வசனங்கள் அருமையாக உள்ளது. மெல்லிய உணர்வுகள் தரும் படம் பண்ண நான் ஏங்கிய காலம் உள்ளது. குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து இந்தப் படம் பேசும். போன் இருந்தால் போதும் யார் கூடவும் பேச வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஆனால் அப்படி கிடையாது. அப்படி இருக்கக் கூடாது என்பதை இந்தப் படம் சொல்கிறது.

பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும். காதலே காதலே என்ற ரிங்டோன் எல்லா பக்கமும் ஒலித்து கொண்டு இருக்கிறது. சிங்கத்திடம் கொடுத்தால் படம் நன்றாக வரும் என்பதால், படத்தை அண்ணாவிடம் கொடுத்து விட்டேன்.

ஜல்லிக்கட்டு படப்பிடிப்பு எனக்கு புதுமையாக இருந்தது. உடம்பில் கருப்பசாமி வந்துவிட்டார் என்ற வசனம் எல்லாம் உடம்பு சிலிரிக்க வைக்கிறது. ஒரே வாரத்தில் இந்த கதையை எழுத்தியுள்ளார் இயக்குநர். லோகேஷ் கனகராஜ் நைட் எப்படி என்னை வெச்சு செய்தாரோ, அதே மாதிரிதான் இந்த இயக்குநர் பிரேம்குமாரும் இரவு முழுவதும் துங்கவிடாமல் என்னை நடிக்க வைத்தார்” என்றார்.

நடிகர் சூர்யா பேசும்போது, “நேற்று இரவுதான் இந்தப் படத்தை நான் பார்த்தேன். அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன்.  இரத்த சொந்தங்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. ‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டி பிடித்து பாராட்ட வைத்த  படம் இது. ஒரே இரவில் நடக்கும் படம்தான் இந்த மெய்யழகன் திரைப்படம்.

‘கங்குவா’ படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டரை  வருடமாக, ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது கங்குவாதான். அக்டோபர் 10-ம் தேதி ‘வேட்டையன்’ படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர். சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவதுதான் சரி. ‘கங்குவா’ ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். ‘கங்குவா’ படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். ‘கங்குவா’ படம் வரும்போது அதுவே நின்று பேசும்” என்று முடித்தார் சூர்யா.

Our Score