‘கே.ஜி.எஃப்-1, 2′, ‘காந்தாரா’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருக்கும் முதல் தமிழ்ப் படம் ‘ரகு தாத்தா’.
இத்திரைப்படத்தில் ‘நடிகையர் திலகமாக’ வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும், விருதுகளையும் வாரி குவித்த ‘பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் M.S.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T.S.சுரேஷ் படத் தொகுப்பில் உருவாகியிருக்கிறது இந்த ‘ரகு தாத்தா’ திரைப்படம்.
கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையேயான வாழ்க்கையைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு கலகக்கார இளம் பெண்ணின் கதை இது.
ஒரு இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக் கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம்தான் இத்திரைப்படம்.
இந்த ரகு தாத்தா நகைச்சுவை படம் மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான ஒரு பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டு கொண்டு, மற்றவர்களுக்கும் ஓர் எடுத்துச் சொல்லும்விதமாக உருவாகியுள்ளது.
படத்தின் நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பமே சிரிக்கும்படி எடுத்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதை எம்ஜிஆரின் ஆட்சிக் காலமான 1980-களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் வள்ளுவன் பேட்டை என்ற ஊரில் வசிக்கும் பெரியவரான எம்.எஸ்.பாஸ்கர் தமிழ் மீது தீராப் பற்றுக் கொண்டவர். இவருடைய பேத்தியான கீர்த்தி சுரேஷ் லோக்கல் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
அந்த வள்ளுவன் பேட்டை ஊரில் இருந்த ஹிந்தி பிரச்சார சபாவை தாத்தாவும், பேத்தியும் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக மூடிவிட்டார்கள். இந்த சபாவின் செயலாளராக இருப்பவர் இந்த சபாவை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தான் வங்கிய ஊழியராக இருப்பதால் ‘கயல்விழி பாண்டியன்’ என்ற புனைப் பெயரில் நாவல்களை எழுதி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நாவல்களைப் படித்திருக்கும் அதே ஊரில் வசிக்கும் பொறியாளரான ரவீந்திர விஜய், கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார்.
இந்த நேரத்தில் கீர்த்திக்கு பிரமோஷன் கிடைக்கும் வாய்ப்பு வருகிறது. ஆனால் அதில் ஒரு நிபந்தனையாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் கீர்த்திக்கு ஏற்படுகிறது. இதனால் பிரமோஷனே வேண்டாம் என்று மறுக்கிறார் கீர்த்தி.
இன்னொரு பக்கம் கீர்த்தியின் தாத்தாவான எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்று நோய் பாதிப்பு உள்ளதாக தெரிய வர.. மிக அவசரமாக தனது பேத்திக்குக் கல்யாணம் செய்து வைக்க துடியாய் துடிக்கிறார் தாத்தா. இப்போது தாத்தாவின் ஆசைக்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது கீர்த்திக்கு.
இந்த நேரத்தில் தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் ரவீந்திர விஜய்யை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள விரும்ப.. இதற்கு ரவீந்திர விஜய்யும் ஓகே சொல்ல நிச்சயத்தார்த்தமும் நடக்கிறது.
இதன் பிறகு ஒரு நாள் ரவீந்திர விஜய் பற்றிய உண்மை கீர்த்திக்கு தெரிய வர.. அவர் அதிர்ச்சியாகிறார். இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிட முனைகிறார் கீர்த்தி. இதற்காக தான் வெறுத்து வந்த ஹிந்தியைப் படித்துத் தேர்வெழுதி, பிரமோஷனில் டிரான்ஸ்பராக முயல்கிறார் கீர்த்தி.
கீர்த்தியின் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா..? ரவீந்திர விஜய் பற்றிய உண்மைதான் என்ன..? கீர்த்தி ஹிந்தி படித்தாரா..? தேர்வெழுதினாரா..? இவர்களின் திருமணம் நடந்தேறியதா..? இதுதான் இந்த ‘ரகு தாத்தா’ படத்தின் திரைக்கதை.
‘கயல்விழி பாண்டியன்’ என்ற எழுத்தாளர், தமிழ்ப் பற்றாளர், இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர், தாத்தா மீது பாசமான பேத்தி என்ற பல்வேறு கேரக்டர் ஸ்க்டெச்சில் நாயகியாக அசத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ், மொத்தப் படமுமே அவரை சுற்றித்தான் நடக்கிறது.
ஒரு கண்ணியமான பெண்ணாக… வங்கி ஊழியராக.. வீட்டில் புதுமைப் பெண்ணாக.. என்று மாறுபட்ட வேடங்களில் காட்சிக்குக் காட்சி மாற்றி மாற்றிப் பேசும் கீர்த்தியை அவருடைய அழகுக்காகவே பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல தோன்றுகிறது.
ரவீந்திர விஜய் பற்றிய உண்மை தெரிந்தவுடன் திருமணத்தை நிறுத்த தனது அண்ணன், அண்ணன் மனைவி மற்றும் தேவதர்ஷினியுடன் இணைந்து செய்யும் பல மர்மத் திரைக்கதைளில் சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸில் தான் செய்த்தை நியாயப்படுத்தி பேசிவிட்டு அப்போதும் இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாகப் பேசும்போது கை தட்டவும் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.
பசுத்தோல் போர்த்திய புலி என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சில் கீர்த்தி சுரேஷின் காதலனாக, ‘தமிழ்செல்வன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்தர விஜய் கச்சிதமான தேர்வு. ஆனால் படத்தின் வியாபாரத்தை மனதில் வைத்து வேறொரு முக்கிய நடிகரை நடிக்க வைத்திருந்தால் படத்தின் ரிசல்ட்டும் இதைவிட நன்றாக இருந்திருக்கும்.
ரவீந்திர விஜய்யும் தன் கதாப்பாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். ஏதோ தனக்கெதிராக சதி வேலை நடக்கிறது என்பதை ஊகித்து கீர்த்தியை பாலோ செய்யும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் கல்யாணத்திற்கு துடியாய் துடிக்கும் காட்சியிலும் மனிதர் நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இயல்பாக நடித்து நம் மனதினை கவர்ந்திழுக்கிறார். மருத்துவராக நடித்திருப்பவர் கிளைமாக்ஸில் படும் பாடு தனி காமெடி. அப்பாவாக நடித்திருக்கும் ஜெயக்குமார், கீர்த்தியைப் புரிந்து கொள்ளும் ரவீந்திர விஜய்யின் அம்மா, கீர்த்தியின் அண்ணன், அண்ணியாக நடித்தவர்கள், வங்கியின் மேலாளராக நடித்தவர்.. கீர்த்தியின் உற்ற தோழியாக நடித்திருக்கும் தேவதர்ஷிணி என்று அத்தனை பேருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
படத்தின் உண்மையான நாயகன் ஒளிப்பதிவாளர் யாமினிதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் திரையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் என்று சொல்வதற்கு முழு காரணமாய் இருந்தது கேமிராவின் பணி.
நெல்லை சீமையின் அழகு, பச்சைப் பசேல் வயல் வெளிகள், கிராமத்து வீடுகள், தெருக்கள், சாலைகள் என்று காட்டப்பட்ட அத்தனை இடங்களுமே அழகோ அழகு. மேலும் கீர்த்தியையும் கூடுதல் அழகுடன் காண்பித்தமைக்காக பாராட்டுக்கள்..!
1980-களின் வீடுகள், இருப்பிடங்கள் என்பதால் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குநர். பூர்ணிமா ராமசாமியின் டிரெஸ்ஸிங் சென்ஸூம் அருமை. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 1980-களின் மெலடிகளைப் போல பாடல்களை உருவாக்கியிருப்பது சாலப் பொருத்தம்தான்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, எழுத்தாளினியாக ஜொலிக்கும் பெண், வேலைக்குப் போய் சம்பாதிக்கும் துணிச்சல்.. தன் திருமணத்தைத் தானே தீர்மானம் செய்ய நினைக்கும் தைரியம்.. ஆணின் ஏமாற்று வேலை தெரிந்தவுடன் கல்யாணத்தை நிறுத்த முயலும் நாகரிகம்.. இதையெல்லாம் ஒரு சேர செய்யும் ஒரு துணிச்சலான பெண்ணின் கதையை காமெடியாக சொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குநர் சுமன் குமார்.
முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில்தான் நகைச்சுவை தெறிக்க வைக்கிறது. அதை சிச்சுவேஷன் காமெடியாகவே ரசிக்க முடிவது படத்தின் பலம். பெண்களுக்கே தெரியாத அவர்களின் பலம் பற்றி எடுத்துச் சொல்லும் பெண்ணிய திரைப்படம்..! அவசியம் பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!
ரகு தாத்தா – உண்மையான பெண்ணியத்தைப் பேசும் படம்…!
RATING : 4 / 5









