இன்றைய தமிழ்த் திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தப்பட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் உருவாகி இருக்கிறது இந்த ‘பார்க்’ என்கிற திரைப்படம்.
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லயன் E.நடராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாகச் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு நொடி’ படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார். இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன். இசை – ஹமரா சி.வி, படத் தொகுப்பு – குரு சூர்யா, நடனம் – ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் – ஆர் வெங்கடேஷ், பாடல்கள் – நா.ராசா, சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகம் – கே.எஸ்.சங்கர், உடைகள் – ஜி. வீரபாபு, ஒப்பனை – ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் – எம். அருள், இணைத் தயாரிப்பாளர் – நா .ராசா., தயாரிப்பு – லயன் ஈ. நடராஜ்.
இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர்.
சஸ்பென்ஸ், ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தப் படப்பிடிப்பும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களிலேயே நடந்துள்ளது.
நாயகன் தமன்குமார் வேலை, வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றி வரும் ஒரு இளைஞர். இவருக்குத் துணை இவருடைய நண்பரான பிளாக் பாண்டி. ஒரு நகைக் கடையில் நடந்த குலுக்கல் போட்டியில் தமனுக்கு ஸ்கூட்டர் பரிசாகக் கிடைக்கிறது. அதே நேரம் நாயகி டோரதிக்கும், அதே குலுக்கல் போட்டியில் பைக் பரிசாகக் கிடைக்கிறது.
“பைக்கை நான் வைச்சுக்குறேன்.. ஸ்கூட்டரை நீங்க வைச்சுக்குங்க…” என்று நாயகன், நாயகியிடம் பேரம் பேச.. அவரும் ஒத்துக் கொண்டு இருவரும் வாகனங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதே நேரம் நாயகனும், நாயகியிடம் மனதைப் பறி கொடுக்கிறான்.
நாயகனுக்குத் திடீரென்று வேலைக்குப் போகும் ஐடியா வர.. நாயகி வேலை செய்யும் அதே டிடிஎச் சேல்ஸ் கடையில் சேர்கிறார். அங்கு வேலை பார்த்தபடியே நாயகியின் மனதை மாற்றித் தன்னைக் காதலிக்கவும் வைக்கிறார். இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட நிலையில் திருமணத் தேதியும் முடிவாகிறது.
இந்த நேரத்தில் ஒரு நாள் லோக்கல் எம்.எல்.ஏ.வின் மகன் நாயகியையும், நாயகனையும் இரவு நேரத்தில் பார்க்கிறான். தன் அடியாட்களைவிட்டு நாயகியைத் தூக்க முயல.. இருவரும் தப்பியோடுகிறார்கள். ஓடிய வேகத்தில் அந்த ஊரிலயே யாருமே போக விரும்பாத ‘ஜாலி பார்க்’ என்ற பூங்காவுக்குள் ஓடி ஒளிகிறார்கள் காதலர்கள்.
ஏற்கெனவே அதே பூங்காவிற்குள் சில காலத்திற்கு முன்பாக இதே வில்லன் கோஷ்டியினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு காதலனும், காதலியும் ஆவிகளாக உலாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாயகன், நாயகி இருவரும் அந்தப் பூங்காவிற்குள் நுழைந்தவுடன் அவர்களது உடலில் இந்தக் காதலர்களின் ஆவிகள் ஏறிக் கொள்கின்றன. தங்களைத் தாக்க வந்த வில்லனின் ஆட்களை கொலை செய்கிறார்கள் நாயகனும், நாயகியும்.
அதற்கடுத்து வில்லன் கோஷ்டியில் மேலும் 2 பேரை போட்டுத் தள்ள திருவண்ணாமலை நகரமே பரபரப்பாகிறது. இந்தக் கொலையை விசாரிக்க புதிதாக டிஎஸ்பி ரஞ்சனி நாச்சியார் நியமிக்கப்படுகிறார்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் செல்போன் டிராக்கின் உதவியால் நாயகனும், நாயகியும் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதே நேரம் இப்போது உயிருடன் இருக்கும் வில்லனை கொல்லவும் அந்தப் பேய்கள் திட்டமிடுகின்றன.
கடைசியில் என்னவாகிறது..? வில்லனை பேய்கள் கொலை செய்தனவா..? நாயகன், நாயகியைவிட்டு பேய்கள் விலகிச் சென்றனவா..? இல்லையா..? இவர்களது திருமணம் நடந்தேறியதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் பேய்ப் படத்தின் திரைக்கதை.
நாயகன் மித்ரனாக நடித்திருக்கும் தமன்குமாருக்கு இந்த லவ்வர் பாய் வேடம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதல் வசனங்களை சுற்றி வளைத்துப் பேசி நாயகியை வளைக்க முயற்சிக்கும்போதும், டிடிஎச் கனக்ஷன் கொடுக்கச் செல்லும்போது நடக்கும் சம்பவங்களில் அசால்ட்டாக நடித்தும் நடிப்பில் ஓகே வாங்குகிறார்.
முதல் பாதியில் ஜாலியான காதலனாகவும், ஊர் சுற்றியாகவும் வலம் வந்தவர், இரண்டாம் பாதியில் பேய் பிடித்தவுடன் கொஞ்சம் மேக்கப்பில் மிரட்டும்விதமான கண்களை வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக வசனம் பேசியும் பேய் மிரட்டல் செய்திருக்கிறார். ஏதாவது ஒரு படம் ஹிட்ட்டித்துவிடாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் தமனுக்கு, இதைவிடவும் ஒரு நல்ல படம் கிடைக்க வாழ்த்துகிறோம்.
நாயகி ‘யாழினி’யாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரதி அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பிற்பாதியில் பெண் பேயின் பிடியில் சிக்கிக் கொண்டு தன் அகல, ஆழமான கண்களை உருட்டியும், மிரட்டியும் வில்லன்களை காவு கொடுக்கும் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
படம் நெடுகிலும் வலம் வந்தாலும் சில இடங்களில் மட்டுமே காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார் ‘பிளாக்’ பாண்டி. வில்லன் யோகிராமின் காமக் கொடூரன் கதாப்பாத்திரம் மிரட்டுகிறது. போலீஸ் டிஎஸ்பியாக நடித்திருக்கும் ரஞ்சனா நாச்சியார் எதையாவது செய்து கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்த்தால் அது புஸ்வானம்தான். ஆனால், அவர் செய்யும் கடைசிக்கட்ட டிவிஸ்ட் எதிர்பாராதது.
போலி சாமியாரான கிரேன் மனோகர் புன்னகைக்க வைத்திருக்கிறார். பெற்றோர்களாக நடித்தவர்களில் ரேகா சுரேஷ் தன் இருப்பைக் காண்பித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். வாழ்த்துக்கள்.
கோவில் நகரமான திருவண்ணாமலையை பலவித கோணங்களில் காட்சிப்படுத்தியும், ஊரையே வளைத்துப் பிடித்து, அனைத்துப் பகுதிகளையும் அளவெடுத்து செய்ததுபோல படத்தில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன். பாடல் காட்சிகளில் லட்டு போல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
ஹமராவின் இசையில் காதல் பாடல் ஓகே ரகம். அதேபோல் ஒரு குத்துப் பாடலையும் கொடுத்து அதன் ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
முதல் பாதியை கலகலப்பாகக் கொண்டு சென்ற இயக்குநர் முருகன், இரண்டாம் பாதியை சற்று மிரட்டலாகவும், போரடிக்காத திரைக்கதையிலும் கொண்டு சென்று படத்தை முழுமையாகப் பார்க்க வைத்திருக்கிறார்.
தங்களை கொலை செய்தவர்களை பேய்களாக வந்து பழி வாங்கும் அரதப் பழசான பழைய கதைக் களம்தான் என்றாலும், தங்களைப் போலவே இரண்டு காதலர்களின் உடம்பில் ஏறி அவர்களைப் பழி வாங்குவதாக வித்தியாசத்தைக் கடைப்பிடித்துக் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
சின்னப் பட்ஜெட் படம்.. சின்ன நடிகர், நடிகைகள்.. அறிமுக இயக்குநர் என்றாலும் சுவாரசியமான இரண்டாம் பாதியினால் இந்தப் படம் ஜெயித்துவிட்டது என்றே சொல்லலாம்.
பார்க் – பார்க்கலாம்தான்..!
RATING : 3 / 5









