1980-களில் ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பாட்டி சொல்லை தட்டாதே’.
மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும், மற்றும் ஊர்வசி, சில்க் ஸ்மிதா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்து நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த இந்த ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படம், அன்றைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது 1990 கிட்ஸ், 2k கிட்ஸ் ரசிகர்களுக்கு இந்த நகைச்சுவை அனுபவத்தை கொடுப்பதற்காக ஏவி.எம். நிறுவனத்தின் அனுமதியுடன் இந்தப் படம் மீண்டும் அதே பெயரில் தயாராகியுள்ளது.
இந்தப் புதிய படத்தை வின்னர் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹேம சூர்யா, சஞ்சய் பாபு, ஜூலி, தனசேகரன் ஆகியோர் இணைந்து அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஆர்.ஜே.விஜய் கதாநாயகனாகவும். அனு ஷீலா கதாநாயகியாகவும் முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கலக்கப் போவது யாரு பாலா, பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி உள்ளிட்ட எராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ், வசனம் – சுகுணகுமார், இசை – விஜய் சங்கர், படத் தொகுப்பு – சசிகுமார், கலை இயக்கம் – மணிமாறன், நடன இயக்கம் – சங்கர்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான ஹேமசூர்யா ஏற்கனவே கன்னடத்தில் 3 படங்களை இயக்கியிருக்கிறார். பிரபல கன்னட ஹீரோக்கள் உபேந்திரா, தர்ஷன், சுதீப், கணேஷ் போன்றவர்கள் நடித்த படங்களுக்கு கதை எழுதி வெற்றிகரமான படைப்புக்களை தந்தவர்.
கன்னட படங்களில் பணியாற்றினாலும் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதன்முறையாக இந்தப் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தின் மூலமாக ஹேம சூர்யா இயக்குநராக நுழைகிறார்.
இந்தப் படம் ஒரு பாட்டிக்கும், பேரனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாகவும் காமெடி, காதல் கலந்த படமாகவும் சொல்கிறது.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் விஜய் சங்கரின் இசையில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் டி.ராஜேந்தர் பாடிய “கோலி சோடா ரம்மு கலந்து குடிக்கிறான்” என்ற பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. நடிகர் நட்டி தனது இணைய பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டார்.
டி.ராஜேந்தர் தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கலாக பாடி வெளியாகிய இந்தப் பாடல், தற்போது ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குழந்தை மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டி.ராஜேந்தர் குரலுடன், துள்ளல் இசையும் கலந்து இந்தப் பாடல் வெளியாகிய சில தினங்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்க வைத்துள்ளது.
பொதுவாக பெரிய படங்களுக்கும், பெரிய நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பை இந்த ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தில் டி.ராஜேந்தர் பாடி வெளியாகியுள்ள ‘கோலி சோடா ரம்மு கலந்து குடிக்கிறான்’ பாடல் பெற்றுள்ளது.
இந்தப் பாடலுக்கு. மக்கள் கொடுத்து வரும் ஆதரவு, தனக்குப் பெறும் மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும், அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தப் பாடலை எழுதியவரும், இப்படத்தின் இயக்குநருமான ஹேமசூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை, திருச்சி, பெங்களூர் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.










