எஸ்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ .
இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – எஸ்.எஸ்.பிக்சர்ஸ், எழுத்து இயக்கம் – ராஜ செல்வம், இசை – சுபாஷ் கவி, ஒளிப்பதிவு – அர்ஜுனன் கார்த்திக், படத் தொகுப்பு – G.சசிகுமார், கலை இயக்கம் – K.M.நந்தகுமார், நடன இயக்கம் – தினேஷ், ராதிகா, சண்டை இயக்கம் – பீனிக்ஸ் பிரபு, உடைகள் – P.ரெங்கசாமி, ஒப்பனை – P.S.குப்புசாமி, புகைப்படங்கள் – மோகன், பத்திரிகை தொடர்பு – சதீஷ் AIM.
தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடந்தேறியது.
இவ்விழாவில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசும்போது, “இந்தப் படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட்டைதான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்..” என்றார்.
நடிகர் கார்த்திக் சிங்கா பேசும்போது, “இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர்போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லாவித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்…” என்றார்.
நடிகை அனயா பேசும்போது, “தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுக் கொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..” என்றார்.
நடிகர் ராதாரவி பேசும்போது, “இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும்படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் மிகச் சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வர வேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன். அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்..” என்றார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக் குழுவினர் நிறைய உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப் பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை…” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். ‘கொடை’ என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது. இந்தக் காலத்தில் யாரும் தமிழில் டைட்டில் வைப்பதில்லை. இதற்காக படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப் பெரிய வெற்றியடையும்..” என்றார்.
தயாரிப்பாளர் அம்மா T.சிவா பேசும்போது, “இந்த ஒட்டு மொத்த படக் குழுவின் கூட்டு முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களை திரையில் பார்ப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை சரியான முறையில் புரமோட் செய்து, மிகப் பெரிய வசூலை, படக் குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படம் மிகப் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் எழில் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லர் ஈர்க்கும்படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றி போய் உள்ளது. இந்த படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக் குழுவினரின் உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாக தெரிகிறது. படம் மிகப் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் ராஜா செல்வம் பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்தின் மிகப் பெரும் ஜம்பாவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளை கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள்..” என்றார்.












