அவ்னி டெலி மீடியா நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் குஷ்பூ சுந்தர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பட்டாம் பூச்சி’..!
இந்தப் படத்தில் நடிகர் சுந்தர்.சி.யும், நடிகர் ஜெய்யும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைமைக்கிறார். படத் தொகுப்புப் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சி இயக்கம் – ராஜசேகர், திரைக்கதை – நரு.நாராயணன், மகா கீர்த்தி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

1980-களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர்.
முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் கதை இறுதிக் காட்சிவரையிலும் சீட் நுனியில் அமர வைக்கும் திரில்லராக உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார்.
“ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா; ஜெயில்ல தவ்லத்தான் வாழ்ந்து வரும் நாங்கடா…” எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ‘ஜெயில் குத்து’ என்று பெயரிட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டராக அமைந்திருந்தது. இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது.
விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.









