ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’. இந்தப் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டது.
இந்தப் படத்தின் வெளியீடு சமயத்தில் இதில் சம்பள பாக்கித் தொகையான மீதமான 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத் தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
அதேசமயம், இந்தப் படத்தால் தனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்புவிடம் இருந்து மீ்ட்டுத் தரக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக சிம்பு தரப்பிலும், தயாரிப்பாளர் தரப்பிலும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டு அதில் தத்தமது தரப்பு வாதங்களை பத்திரிகையாளர்களிடத்தில் முன் வைத்திருந்தனர்.
இது தொடர்பாக இணையத் தளங்களில் எழுதப்பட்ட பல கட்டுரைகளில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் விளக்கம் அளிக்கும்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் நடிகர் விஷால் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை அனுப்பி 1,080 நாட்கள் ஆகியும், இன்றுவரையிலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது தரப்பிலான எழுத்துப்பூர்வமான பதில் விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விளக்கக் கடிதம் தாக்கல் செய்யவில்லை என்பதை அறிந்த நீதிபதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த அபராதத் தொகையை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையையும் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.









