இயக்குநர் எச்.வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை-2’ படம் தயாராகியுள்ளது.
முதல் பாகத்தை தயாரித்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். நிர்மல்குமார் என்பவர் இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எச்.வினோத் எழுதியுள்ளார். அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் வெளியீடு கடந்த 4 வருடங்களாக தாமதமாகி வருகிறது. மக்களை புத்திசாலித்தனமாக ஏமற்றுவதுதான் படத்தின் கதைக் களம். இரண்டாம் பாகமும் இதே களத்தில்தான் தயாராகி உள்ளது. படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் கதையை திருடி தெலுங்கில் ‘கிலாடி’ என்ற பெயரில் சினிமாவாக எடுத்துள்ளதாக தயாரிப்பாளர் கங்காதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சதுரங்க வேட்டை-2’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை ஐதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவிற்கு 40 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன்.
இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்திற்கு விரோதமாக ‘சதுரங்க வேட்டை-2’ படத்தின் கதையை திருடி ரவி தேஜாவின் நடிப்பில் ‘கிலாடி’ என்ற பெயரில் ஒரு படத்தை கிரண் ஸ்டூடியோ நிறுவனம் எடுத்துள்ளது. எனவே அந்தப் படத்தை எந்தவொரு தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். ஒரு வாரத்திற்குள் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்தது.









