‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடு்த்து வைத்தவர் நடிகர் ராதாரவி.
தனது முதல் திரையுலக அனுபவம் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் முதன்முதலாக கே.பாலசந்தரை சந்தித்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் 1976-ல் இரண்டு கன்னடப் படங்களில் நடித்திருந்தேன். தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், நிறைய மேடை நாடகங்களில் நடித்து வந்தேன்.
அந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். நாங்க ரெண்டு பேருமே ‘வாடா’, ‘போடா’ன்னு பேசுற அளவுக்கு நண்பர்களாக இருந்தோம். அப்போ அவர்தான் “எதுக்கு கன்னடத்துல நடிக்குற..? உன்னைப் பத்தி கே.பாலசந்தர்கிட்ட சொல்லியிருக்கேன். அவரைப் போய் பாரு..” என்றார்.
சரி.. கமல் சொல்றாரே.. போய்ப் பார்ப்போம்ன்னு அவர் வீட்டுக்குப் போனேன். கே.பாலசந்தரை அப்போது நான் நேரில் பார்த்ததே இல்லை. அவர் எப்படியிருப்பாருன்னே எனக்குத் தெரியாது.
நான் அவர்கிட்டயே “நான் பாலசந்தரை பார்க்கணும்..” என்றேன். “நான்தான் பாலசந்தர்” என்றார். “ஸாரி ஸார்.. எனக்குத் தெரியலை.. கமல் சொல்லியனுப்பிச்சாரு. நான் ராதாரவி. எம்.ஆர்.ராதாவோட மகன்…” என்றேன்.
“ஓ.. நீதானா அந்த ரவி.. கமல் சொன்னான்..” என்று சொல்லிவிட்டு என்னை அமரச் சொன்னார். நானும் உட்கார்ந்தேன். அப்புறம் பேசி்ட்டிருக்கும்போது, “எந்திரிச்சு அங்க ஓரமா போய் நில்லு. அப்புறம் அங்கேயிருந்து மெதுவா நடந்து வா…” என்றார்.
நான் சட்டென்று “ஸார்.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. நடிக்க வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க. நடிக்கிறேன்…” என்றேன். இதைக் கேட்டு அவரே அதிர்ச்சியாயிட்டார். “என்னப்பா.. உன்னோட அண்ணன் வாசுவே என்னைப் பார்த்தா பயப்படுவான். நீ இப்படி பேசுற..?” என்றார். “ஸார்.. அவர் பயந்தாருன்னா நானும் பயப்படணுமா.? நான் எதுக்கு ஸார் உங்களுக்குப் பயப்படணும்…?” என்றேன்.
அப்புறம், “நீ சிகரெட் குடிப்பியா..?” என்றார். “குடிப்பேன்…” என்றேன். “டிரிங்க்ஸ் சாப்பிடுவியா…?” என்றார். “சாப்பிடுவேன்” என்றேன். “இந்த சிகரெட்டை விட்டுடேன். நானும் அந்த சிகரெட்டைக் குடிச்சு இப்பத்தான் ஆஸ்பத்திரில சீரியஸா இருந்து வெளில வந்திருக்கேன்…” என்றார்.
“சரி ஸார்.. இனிமேல் சிகரெட் பிடிக்க மாட்டேன்” என்றேன். அதேபோல் அதுக்கப்புறம் சிகரெட் பிடிக்கிறதையே நிறுத்திட்டேன்..” என்றார் ராதாரவி.









