எஸ் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், டி.சரவணன், சிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குப்பத்து ராஜா’.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், பிரவீன் K.L. படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
பிரபல திரைப்பட நடன இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் பார்த்திபன், நடிகை மதுமிதா, இயக்குநர் ‘பாபா’ பாஸ்கர், கலை இயக்குநர் T.R.K.கிரண், தயாரிப்பாளர்கள் சிராஜ், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
பாடலாசிரியர் லோகன் பேசுகையில், “உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பு ‘காலா’, ‘லூசிஃபர்’ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறேன். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “நானும் மூர்த்தி என்னும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரைப் போலவே நரேந்திரனும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.
ஜி.வி.பிரகாஷ் உடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளேன். அந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு நான் மாமனாராக நடித்தேன். இந்தப் படத்தில் அப்பாவாக நடித்திருக்கிறேன். அவருடன் மிகவும் நெருக்கமாகும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக அமைந்தது. கூடவே, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடித்த அனுபவமும் எனக்கு வித்தியாசமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது…” என்றார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, “எஸ் ஃபோகஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள்.
சில கதைகளைக் கேட்கும்போது கதை கேட்ட முதல் 10 நிமிடங்களிலேயே அந்தக் கதை சிறப்பானது என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வு இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதும் எனக்குள் கிடைத்தது.
இயக்குநர் ‘பாபா’ பாஸ்கர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததைவிட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என விட்டுவிட்டேன்.
இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். இந்தப் படத்தில் ‘எம்.ஜி.ராஜேந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இந்தக் கேரக்டருக்காக எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
எனக்கு விஜயகாந்த் அண்ணன் மாதிரி. அவரை ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ன்னு சொன்னபோது வெளில எல்லாரும் கேலி செஞ்சாங்க. அதுமாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பயம் இருந்தது. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நல்லவர் என்பதாக இருந்ததாலும், யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதாலும் துணிந்து நடித்திருக்கிறேன்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலையா, எஸ்.வி.சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம்.எஸ்.பாஸ்கர் போக்கியிருக்கிறார்…” என்றார்.
படத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் பேசும்போது, “ஒரு நடன இயக்குநராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ் சார்தான். என் இயக்குநர் கனவை நனவாக்கியவர் ஜி.வி.பிரகாஷ். ‘குப்பத்து ராஜா’ கதை உருவாக நான் காரணமாக இருந்தாலும், அது படமாக மாறுவதற்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் குமார்தான். அவர் கதை மீது வைத்த நம்பிக்கைதான் காரணம்.
பலமான பல கலைஞர்கள் சேர்ந்ததுதான் இந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படம். பார்த்திபன் சாரை நடிக்கக் கேட்டு, அவரிடம் கதை சொல்ல போனேன். அதைக் கேட்ட அவர், ‘ரொம்ப நல்லா இருக்கு.. இதை அப்படியே படமாக எடுங்க. நான் நடிக்கிறேன்’ என நம்பிக்கை கொடுத்தார். எம்.எஸ்.பாஸ்கர் சார் என்னை ‘மச்சான்’ என்றுதான் அழைப்பார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம். கலை இயக்குநர் கிரண், ராயபுரத்தை சார்ந்தவர் என்பதால் படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.
இந்தக் குழுவில் எங்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார். பூனம் பஜ்வா, பாலக் லால்வானி இருவருமே மிகவும் அர்ப்பணிப்புத் தன்மை உடையவர்கள். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள்…” என்றார்.
படத்தின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம் இது. படத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர், அவருடைய வாழ்வியலில் இருந்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் டிரெயிலர் கமெர்சியலாக இருந்தாலும் இத்திரைப்படம் மிக நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது.
பார்த்திபன் சாரை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஒரு ராஜாவாக நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்குப் பிறகு இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். ஏற்கனவே பாலா சார், ராஜீவ் மேனன் சார் படங்களில் என்னை வேறுவிதமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்…” என்றார்.















