தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’.
இந்தப் படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாகவும், ஸ்வேதா திருப்பதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவணன் ராஜேந்திரன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருடைய முதல் படமாகும்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் தலைமையேற்க, இவர்களுடன் ஞானவேல் ராஜா அவரின் தந்தை ஈஸ்வரன், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச்.வினோத், நலன் குமாரசாமி, ‘சிறுத்தை’ சிவா, ‘மௌன குரு’ சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, 2-D ராஜசேகர், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி.ஜி, ரமேஷ் பாபு மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “ஜீவா மூலமாகத்தான் நான் இந்தப் படத்தின் இயக்குநரான சரவணனை சந்தித்தேன். திறமையான அனுபவமுள்ள மனிதர் அவரின் அறிமுக படமான இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
சுவேதா திறமையான நடிகை. நவாசுதீன் சித்திக் படத்தில் ஸ்வேதாவின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப் பெரிய இடம் கிடைக்கும் .
ஹிட் கொடுக்கும் பிரபலங்கள் அனைவரும் இந்த படத்தில் உள்ளார்கள். படம் பழைய நினைவுகள் மீண்டும் நம் நினைவிற்கு கொண்டு வரும். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்…” என்றார்.
இயக்குநர் எழில் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான சரவணன் ராஜேந்திரன் இயக்குநர் ராஜு முருகனின் அண்ணன்னு சொன்னதும் இந்த நிகழ்ச்சிக்கு வரேன்னு சொல்லிட்டேன். சரவணன் லேட்டா வந்தாலும் சிறப்பான கதையோடு வந்திருக்காரு. பாடல், ட்ரைலர் என அனைத்தும் சிறப்பாக ஒரு நேர்த்தியான படமாக அமைந்துள்ளது…” என்றார்.
பாடகர் விஜய் இயேசுதாஸ் பேசும்போது, “சான் ரோல்டனின் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போதைய தலைமுறைக்கு ஏற்றார் போல இருக்கும். பாடல்கள் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளன. எனக்கும் முதலில் பாட சிரமமாக இருந்தது. ஆனால் சான் ரோல்டன் ஒத்துழைப்பால் சிறப்பாக அமைந்துள்ளது…” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “இயக்குநர்கள் வெற்றி மாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் ‘அட்டக்கத்தி’ படத்தை புரமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.
சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ‘ஜிப்ஸி’யில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும். இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும்…” என்றார்.
இயக்குநர் கரு. பழனியப்பன் பேசும்போது, “இயக்குநர் சரவணன், ராஜூ முருகன், பாடலாசிரியர் யுகபாரதி, மூவரும் கஷ்டப்பட்டுதான் வளர்ந்தார்கள். சரவணன் இயக்குநராக ஆசைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குநராக்கினார். தற்போது சரவணனும் இயக்குநராகி விட்டார்.
இருப்பதலிலேயே கஷ்டமான தொழில் சமைப்பதுதான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார். தற்போது ‘விஸ்வாசம்’ போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..” என்றார்.
தயாரிப்பாளர் 2-D ராஜசேகர் பேசும்போது, “ராஜூ முருகனின் ஜோக்கர் படத்தை போலவே இந்த படமும் இருக்கும். இந்தப் படத்தின் கதையை கேட்கும்போதே அருமையாக இருந்தது. படத்தின் விசுவல்ஸ் அனைத்தும் சூப்பராக உள்ளது…” என்றார்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “என்னுடைய கவிதை அரங்கேறும் நாள் இன்று. எனக்கு சினிமாவில் பலரை அறிமுகப்படுத்தியவர் சரவணன். நெருங்கிய நண்பர். ராஜு முருகன் தேசிய விருது வாங்கியபோது எனக்கு சரவணன்தான் நினைவிற்கு வந்தார்.
தமிழ்ச் சினிமாவில் இன்னும் 50, 60 ஆண்டுகளுக்கு பெயர் சொல்லும் இயக்குநராக சரவணன் இருப்பார். எனக்கு நல்ல சினிமா, அரசியல், கவிதை என அனைத்தையும் கொடுத்தது சரவணன்தான்.
திறமைகளை அறிந்து பராட்டுபவர் சிவகுமார். மாபெரும் திறமையும் கொண்டவர். இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அது நடக்கவில்லை. ஆனால் அவரது வாழ்த்து சரவணன் படத்திற்கு கிடைத்துள்ளது…” என்றார்.
இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜாதான். இத்திரைப்படம் எங்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.
என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும்தான். சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி‘ என என் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்கு உண்டு. கதை, வசனம் என்று என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.
ஒளிப்பதிவாளர் செல்வா மிகவும் திறமையானவர். அதனால்தான் ‘ஜிப்ஸி’ படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். சான் ரோல்டனின் இசை இப்படத்திற்கு முக்கியமான ஒன்று…” என்று வாழ்த்தினார்.
நடிகை ஸ்வேதா பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் நன்றி…” என்றார்.
நாயகன் ரங்கராஜ் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. இயக்குநர் சரவணனின் படத்தில் ஹீரோவானதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இது கடவுள் கொடுத்த வரம். மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்…” என்றார்.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசும்போது, “யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் மூவரிடமும் பேசுவதற்குக் கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டனின் இசை இந்தப் படத்தை அடுத்தத் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். அவருக்கு ஒரு சிறப்பான அறிமுகமாக இத்திரைப்படம் அமைந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி..” என்றார்.
இசையமைப்பாளர் சான் ரோல்டன் பேசும்போது, “இயக்குநர் சரவணன் சிறந்த படைப்பாளி. ஒரு திரைப்படத்தை அறிமுகப்படுத்த அதன் தலைப்பே போதும். அது இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. மக்களுக்கான தரமான படமாக இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ இருக்கும்.” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “கரு. பழனியப்பன் சரவணனின் வாழ்க்கை வரலாற்றையே கூறிவிட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார். சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள்.
ராஜு முருகனின் ‘குக்கூ’ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் யுக பாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம். இளையாராவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்…” என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும்போது, “ஈஸ்வரன் பெற்ற மகன் ரங்கராஜ். நான் பெறாத மகன். ஞானவேல் ராஜா. சூரியா, கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை கொடுத்தவர் ஞானவேல் ராஜா. அந்த படங்களின் வரிசையில் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படமும் இருக்கும்…” என்றார்.
நிகழ்ச்சியில் முடிவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசையை நடிகர் சிவக்குமார் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜும், படக் குழுவினர் அனைவருமே பெற்றுக் கொண்டனர்.






















