full screen background image

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி முதலமைச்சரிடம் மனு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி முதலமைச்சரிடம் மனு..!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய தயாரிப்பாளர்கள் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து, சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :

தமிழக மக்களின் நல்வாழ்விற்காக பல நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பென்னெடுங்காலமாய் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்த திரையரங்குகளின் அனுமதிச்சீட்டு விலையை முறைப்படுத்தியும், நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிறு முதலீட்டுப் படங்களுக்கு மானியம் வழங்கியும் திரைத்துறையினரை கனிவோடு காத்துவரும் தமிழக முதல்வரிடம், தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும்விதமாக சில கோரிக்கைகளை இங்கு சமர்ப்பிக்கிறோம்.

1. அம்மா அரசு அறிவித்த அம்மா திரையரங்குகளை விரைந்து உருவாக்கித் தர வேண்டும்.

2. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்கங்களின் அனுமதிச் சீட்டு விற்பனையை, ஒருங்கிணைந்த கணினி மூலம் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வரவேண்டும்.

3. வருடம்தோறும் தமிழக அரசால் வழங்கப்படும் மானியத் தொகையை, விடுபட்டுப்போன சிறு பட நலிந்த தயாரிப்பாளர்களுக்கும் வழங்கி, அவர்கள் வாழ்விலும் ஒளி வீசிடச் செய்ய வேண்டும்.

4. தமிழ்ப் படமெடுத்து இன்று வறுமையில் வாடும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு, தங்க அரசின் மூலம் மாதம்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

5. சில வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கும் தமிழக அரசின் திரைப்பட விருதுகளை, சிறப்பான விழா எடுத்து வழங்கி கவுரவிக்க வேண்டும்.

6. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உதவித் தலைவர்கள் இரண்டு பேர் கடந்த 15 மாதங்களாக சங்கம் சார்ந்த எந்த நிகழ்விலும் பங்கெடுப்பதில்லை. சென்ற நிர்வாகக் குழு விட்டுச் சென்ற காப்பீட்டுத் தொகை 7.85 கோடி ரூபாய் பொதுக் குழுவின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து, கூட்டுறவு சங்கத் துறை அதிகாரிகள் மூலம் சங்கத்தின் கணக்கு வழக்குகளைச் சரி பார்க்க வேண்டும்.

7. இன்னும் 4 மாதங்களில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையான தேர்தலை நடத்த ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, டி.சிவா, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், பாபு கணேஷ், ரித்தீஷ் மற்றும் பலர் இருந்தனர்.

Our Score