full screen background image

“இயக்குநர் சங்கத் தலைவரா? இல்லை.. ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா?” – இயக்குநர் பேரரசு கேள்வி!

“இயக்குநர் சங்கத் தலைவரா? இல்லை.. ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா?” – இயக்குநர் பேரரசு கேள்வி!

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம்  ’99/66′ திரைப்படம். 

இந்தப் படத்தில் சபரி, ரோகிந் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.  கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தியும் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார். பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு நிறுவனம் – மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட். கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து, இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தின் பிரம்மாண்ட அரங்கில், படக் குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வினில் கலைப்புலி தாணு  பேசும்போது, “99/66 பிரம்மாண்டமான படைப்பு. இயக்குநர் எந்த நேரத்திலும் வியாபார சிந்தனையுடன் இருப்பதால்தான் இவ்வளவு பெரிய படைப்பினை தந்துள்ளார். நான் முதன்முதலில் தயாரிப்பாளராக திகில் படத்தைத்தான் தயாரித்தேன், தம்பி மூர்த்தியும் அதைத்தான் செய்துள்ளார். இப்படம் படக் குழுவுக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தரும். மூர்த்திக்கும் அவரது துணைவிக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார். 

மாண்புமிகு ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் பேசும்போது, “தம்பி மூர்த்தி அவர்களின் திரைப்பட சேவை இன்று துவங்கியுள்ளது. பிள்ளையாரை வைத்து அழகாக பாடலை எடுத்திள்ளார். உலகமெங்கும் அவர் படம் ஒளிபரப்பாகும். இன்று நாம் சந்திரனுக்கு செல்கிறோமே, அந்த  சந்திரனும் சூரியனும் வாழ்த்தி மகிழ்வார்கள்.  இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “ஒரே மேடையில் மூன்று விழாவை நடத்துவது இங்குதான் பார்க்கிறேன். நாயகி ரக்‌ஷிதாவின் ரசிகன் நான். தயாரிப்பாளர் பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார்.  விளம்பர படம் எடுக்க வந்து, இப்போது கதை கேட்டு படம் செய்கிறார். இவர் என்னையும், பேரரசையும் மீண்டும் இயக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார். அவர் மூன்றாவது படத்திற்கு இங்கேயே பூஜை போட்டுவிட்டார். பாடலும், டிரெய்லரும் அட்டகாசமாக உள்ளது. நடிப்பு ராட்சசி ரக்‌ஷிதா கலக்கியிருக்கிறார். படக் குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…” என்றார். 

கு.ஞானசம்பந்தம் பேசும்போது, “இந்த விழா அழைப்பிதழே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் கருப்பண்ண சாமி அரிவாளுடன் இருக்க, இன்னொரு பக்கம் புத்தர் முகம் இருக்கிறது. இது எல்லாமும் சேர்ந்து, மிக வித்தியாசமனா படைப்பாக இப்படம் இருக்கும். இயக்குநர் மூர்த்தி மற்றும் படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்…” என்றார். 

 இயக்குநர் பேரரசு பேசும்போது, “ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவதை இங்குதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். தயாரிப்பாளர் தாணுவையே மிஞ்சிவிட்டார். மூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள். ஆர்.வி.உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதாவின் ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ரக்‌ஷிதா எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். பேய்ப் படம் என நினைத்தால் பாடல் எல்லாம் பக்திப் படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது. அமைதிக்கான கடவுள் புத்தர் அவர் பற்றி தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறட்டும். நன்றி..” என்றார். 

இயக்குநர் அகத்தியன் பேசும்போது, “டிரெய்லர் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. இங்கு படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் தனித்தனியாக புரமோ ஒளிபரப்பியது மகிழ்ச்சியாக இருந்தது. எந்த புதுப்படத்திலும் அதை செய்யமாட்டார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மூர்த்திக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…” என்றார். 

நடிகை ரக்‌ஷிதா பேசும்போது, “உங்கள் ஆதரவு எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. ஷீட்டிங்கின்போது இந்தப் படம் சின்னப் படம் என்றுதான் நினைத்தேன். இந்த விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப் பெரிய படமாக தெரிகிறது. மூர்த்தி சார் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொள்வார். புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். பட ஷீட்டிங் மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் மூர்த்தி பேசும்போது, “நான் சினிமாவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன். படம் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.  

அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக் குழு படமாக்கியுள்ளது. மற்றும் படத்தில் AI-CG – காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Our Score