மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் ‘96’.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.
இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மதியம் நடைபெற்றது.
இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம், மகேந்திரன் தேவராஜ். நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷிணி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத் தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ கார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி, பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “எனக்கு சினிமாதான் வாழ்க்கை. எனக்கு தொழில் முறையான வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என வாழ்க்கை இரண்டாக பிரித்து வைத்து வாழ்ந்ததில்லை. இரண்டும் ஒன்றாக கலந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள். நண்பர்களுக்கு நன்றி சொல்லக் கூடாது என்பார்கள். ஊடகவியலாளர்களுக்கும் நன்றி சொல்லப் போவதில்லை. ஏனெனில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றிக்கு உங்களின் வழிகாட்டல்தான் காரணம். அதனால்தான் ஒரு மாதம் கழித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அன்று முதல் நீங்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க இயலாத உறவாகிவிட்டீர்கள். நான் நன்றி சொல்ல விரும்புவது படத்தில் இடம் பெறுவது போல் ‘இயற்கை’க்கு மட்டும்தான்.
இந்தப் படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் லலித்குமார் என்ற இரண்டு நண்பர்கள்தான் இந்தப் படத்தைக் காப்பாற்றினார்கள்.
இதையும் கடந்து இந்தப் படத்தின் அடையளமாக இருப்பவர்கள் விஜய் சேதுபதியும், திரிஷாவும்தான். இவர்கள்தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள்…” என்றார்.
நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் பேசுகையில், இந்தப் படத்தில் நடிப்பது சம்பந்தமா இயக்குநர் பிரேம்குமாரே என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். விஜய்சேதுபதி, திரிஷா நடிக்கிறார்கள் என்றவுடன் உடனேயே ஒத்துக் கொண்டேன்.
எனக்கு இப்போதிருக்கும் ஒரேயொரு வருத்தம் என் ஆசான், குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இப்போது இல்லையே என்பதுதான். இருந்திருந்தால் நிச்சயமாக என்னைப் பாராட்டியிருப்பார். அவர் ஒரு தடவை என்கிட்ட கேட்டார்.. இதுவரைக்கும் எத்தனை படங்கள்ல நடிச்சிருக்க என்று. சுமாரா 200 படத்துல நடிச்சிருக்கேன் ஸாருன்னேன்.. டேய் மடையா.. படத்துல வந்ததை சொல்லலை.. நடிச்சிருக்கியான்னு கேட்டேன்னார்.. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை..!
அப்போ அவரே சொன்னார்.. படத்துல வர்றது, போறது முக்கியமில்லடா.. நம்ம இருக்குறதை காட்டுற மாதிரி நடிச்சிருக்கணும். வாழ்நாளுக்குள்ள ரசிகர்கள் நம்மை நினைவுல வைச்சுக்குற மாதிரி ஒரு கேரக்டர் பண்ணிரணும் என்றார். இன்றைக்கு இந்தப் படத்தை இயக்குநர் சிகரம் கே.பி. பார்த்திருந்தால் நிச்சயமா என்னைப் பாராட்டியிருப்பார். ஒரேயொரு காட்சி என்றாலும் என்னை நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு நடிக்க வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்.
படப்பிடிப்பின்போது செட்டில் விஜய் சேதுபதிக்கும், திரிஷாவுக்கும் என்ன மரியாதை கொடுத்தாங்களே.. அதே மரியாதையை எனக்கும் கொடுத்தாங்க.. இந்தப் படக் குழுவினருக்கு எனது நன்றிகள்..!
இயக்குநரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.. ‘தமிழ்ச் சினிமால இத்தனை பேர் இருக்கும்போது என்னைய எதுக்கு இந்த ஒரு சீனுக்காக கூப்பிட்டீங்க?’ என்றேன். ‘கதை எழுதும்போதே எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு. உங்களைத்தான் நடிக்க வைக்கிறதா முடிவு பண்ணியிருந்தேன்…’ என்றார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..” என்றார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில், “தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாளின்’ வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது.
பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்புதான் இந்த ‘96’ திரைப்படம். ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.
நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாகத்தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுகோலாக வைத்துதான் இதனை பேசுகிறேன்.
இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார் மீதும் குறை சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்… எது இறுதி… என்று கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதேபோலத்தான் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.
அதற்காக இந்த விசயம் தொடர்பாக யார் மீது பழி சுமத்த விரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயங்களில் வேறு வழியில்லை.
ஏனெனில், இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும்போதுதான் நான் அடுத்தக் கட்டத்திற்கு போகப் போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப் போகிறார்களோ.. யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ.. அவர்கள்தான் இன்னும் மேலே உயர முடியும்.
என்னுடைய வாழ்க்கையில் பல முறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக் குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. தமிழ்த் திரையுலகத்தில் காலங்காலமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது…” என்றார்.