“96’ படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது…” – பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் போர்க்கொடி..!

“96’ படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது…” – பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் போர்க்கொடி..!

இந்தாண்டு வெளிவந்த படங்களிலேயே அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தி மிகச் சிறந்த காதல் திரைப்படமாக பெயரெடுத்திருக்கும் ‘96’ திரைப்படம் அதே அளவுக்கான சில சங்கடங்களையும் அனுபவித்து வருகிறது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம்குமார்தான் இந்த ‘96’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே விஸ்வநாத் என்ற இணை இயக்குநர் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று முகநூலில் ஒரு தகவலைப் பதிவு செய்தார்.

இந்த அதிர்ச்சி அகல்வதற்குள் தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரும் இந்த ‘96’ படத்தின் கதை தன்னுடையது என்றும் தனக்குத் தெரியாமலேயே இந்தப் படத்தின் கதையைத் திருடி படமெடுத்திருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கதைத் திருட்டு குறித்து இணை இயக்குநர் சுரேஷ் பேசுகையில், “நான் இயக்குநர் பாரதிராஜாவிடம் சில ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன்.

‘96’ படம் திரைக்கு வந்த முதல் நாளே என்னுடைய நண்பர்கள் சிலர்.. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு “உன்னுடைய கதை அப்படியே வந்திருக்கிறது…” என்று என்னிடம் சொன்னார்கள்.

director - suresh

அதிர்ச்சியான நான் உடனடியாக படத்தை பார்த்தேன். அது என்னுடைய கதை என்று தெரிந்து பெரிதும் அதிர்ச்சிக்குள்ளானேன். இது என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த கதை. அந்த ஜானகி என்னும் கதாபாத்திரம் இப்போதும் உயிருடன் இருக்கிறார். அவருடன் நான் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் நடந்த இந்தக் கதையைத்தான் நான் பள்ளியில் படித்த காலக்கட்டமான ‘1992’ என்கிற ஆண்டை குறிக்கும் பொருட்டு ‘92’  என்கிற பெயரில் படமாக்க நினைத்திருந்தேன்.

2013-ம் ஆண்டில்தான் இந்தப் படத்தின் கதையை எழுதினேன். அப்போது நானும் இயக்குநர் பாரதிராஜாவும் தேனியில் ‘அன்னக்கொடி’ படப்பிடிப்பில் இருந்தோம். அங்கே வைத்து இந்தக் கதையை பாரதிராஜாவிடம் சீன் பை சீன் எடுத்துச் சொன்னேன். உடனேயே அவர் அப்போதே அங்கேயிருந்தே என் எதிரிலேயே இசைஞானி இளையராஜாவுக்கு போன் செய்து “ஒரு அருமையான கதை சிக்கியிருக்கு. நான்தான் செய்யப் போறேன். நீதான் மியூஸிக்…” என்று சொன்னார். இயக்குநர் பாரதிராஜாவை இதில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தேன்.

பாரதிராஜாதான் “92 என்ற டைட்டில் வேண்டாம். உன்னுடைய அப்போதைய காதலியின் பெயரான பாரதி என்ற பெயரையே படத்துக்கு வை…” என்றார். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் யோசித்து, பாரதிராஜாவும் இதில் நடிக்கவிருப்பதால் அவருடைய இயற்பெயரான பால்பாண்டி என்கிற பெயரையும் சேர்த்து ‘பாரதி என்கிற பால்பாண்டி’ என்று பெயர் வைத்து ஸ்கிரிப்ட்டை எழுதினோம்.

இதை அப்போதே படமாக்க முனைந்தோம். சில காரணங்களினால் தொட முடியவில்லை. உடனேயே இயக்குநர் பாரதிராஜா ‘ஓம்’ பட வேலைகளில் மூழ்கியதால், அதை முடித்துவிட்டு திரும்பவும் ‘பாரதி’ படத்துக்கு வருவோம் என்று நினைத்திருந்தோம். அதற்குள்ளாக திடீரென்று எனது கதை அப்படியே 90 சதவிகிதம் உண்மையாக இதில் எப்படி பதிவானது என்று எனக்கு முதலில் தெரியவில்லை.

அதே தஞ்சாவூர் களம்.. அதே போன்ற பள்ளி, அதே போன்ற வகுப்பறை.. அதேபோல் பாடகியாக இருக்கும் காதலி.. இவனுக்காக பாடலை பாடும் அளவுக்கு பிரியமானவள்.. அது அனைத்தும் இளையராஜாவின் இதே பாடல்கள்தான். அவன் பள்ளியில் கேட்க, கேட்க அவள் மறுத்த அதே பாடலை அவன் எதிர்பார்க்காத தருணத்தில் சந்திக்கும்போது அவள் பாடுவாள்.. இந்தத் திரைக்கதை அப்படியே இந்த 96 படத்தில் பதிவாகியிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் ‘இது என்னுடைய கதைதான்’ என்பதற்கான முதற் ஆதாரமாக எனக்குத் தெரிந்தது டைட்டில் கார்டில் ‘நன்றி : மருதுபாண்டி’ என்று போட்டிருந்ததுதான். இதைப் பார்த்தவுடன்தான் எனக்கு எல்லாமே மிக எளிதாக புரிந்தது..!

இந்த மருதுபாண்டி நடிகர் விஜய் சேதுபதியின் மிக நெருங்கிய நண்பர். ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’ மற்றும் ‘அசுரவதம்’ ஆகிய படங்களை இயக்கியவர். எனக்கும் நண்பர்தான்.

2016-ம் ஆண்டில் ஒரு நாள் இந்த மருதுபாண்டியை நான் சந்தித்தபோது இந்தக் கதையை முழுமையாக சீன் பை சீனாக அவரிடத்தில் சொல்லியிருந்தேன். அவர் மூலமாக விஜய்சேதுபதியை பிடித்து அவரை வைத்து படம் செய்யலாம் என்று நினைத்துதான் அவரிடத்தில் கதையைச் சொன்னேன்.

அப்போதே விஜய் சேதுபதியிடம் பேசினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அப்போது விஜய்சேதுபதி ஒரு ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றும், அந்தப் படத்துக்கு பிரேம்குமார்தான் ஒளிப்பதிவாளர் என்றும் மருதுபாண்டிதான் என்னிடம் சொன்னார்.

உடனேயே மருதுபாண்டியின் செல்போனை வாங்கி அதில் பிரேம்குமாரை அழைத்து “விஜய்சேதுபதியிடம் உடனே பேச வேண்டும்..” என்று சொன்னேன். விஜய்சேதுபதி ஷாட்டில் இருப்பதாக பிரேம்குமார் சொன்னார். தொடர்ந்து, “என்ன விஷயம்.. எதற்காக..?” என்று பிரேம்குமார் கேட்டார். அப்போது மருதுபாண்டியிடம் சொன்ன அதே ‘பாரதி’ கதையை நான் பிரேம்குமாரிடத்திலும் சொன்னேன். பிறகு விஜய் சேதுபதியிடம் இது பற்றிப் பேசுவதாகச் சொன்னார் பிரேம்குமார்.

அவ்வளவுதான்.. அதற்குப் பிறகு மருது பாண்டியையும், பிரேம்குமாரையும் நான் பிடிக்க முடியவில்லை. அதோடு எனக்கும் வேறு, வேறு வேலைகள் இருந்ததால் கவனிக்காமலும், தொடராமலும் விட்டுவிட்டேன். இடையில் மருதுபாண்டியனை ஒரு முறை சந்தித்தபோது இது பற்றிக் கேட்டேன். “பிராசஸ் போயிட்டிருக்கு…” என்று மட்டுமே சொன்னார்.

ஆனால் 2 ஆண்டுகள் கழித்து இப்போது படமாகவே எடுத்துவிடுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உடனேயே இதனை இயக்குநர் இமயத்திடம் கொண்டு போனேன். அவர் தயாரிப்பாளர் தரப்பில் பேசியவுடன் அவர்கள் இயக்குநருக்காக ஒரு ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்தார்கள். அதில் நான், இயக்குநர் பாரதிராஜா, மருதுபாண்டியன் மூவரும் சேர்ந்து அமர்ந்து ‘96’ படத்தினை பார்த்தோம்.

நான் 2016-ல் சொன்ன அதே கதை, திரைக்கதையில்தான் பிரேம்குமார் இப்போது இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை இயக்குநர் பாரதிராஜாவும் ஏற்றுக் கொண்டார். மருதுபாண்டியிடமும் இது பற்றிக் கேட்டார். அவரும் நான் அவரிடம் கதை சொன்னதையும், அவர் கதையைக் கேட்டதையும், தொடர்ந்து பிரேம்குமாரிடம் நான் பேசியதையும் அங்கேயே ஒத்துக் கொண்டார்.

தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமாரை, பாரதிராஜா இது குறித்துப் பேச அழைத்தபோது அவர் வரவேயில்லை. இதுவே எனக்கு சந்தேகத்தை எழுப்பிவிட்டது, இப்போதுவரையிலும் இது தொடர்பான என் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

இந்தக் கதையை எழுதி முழுமையாக முடித்துவிட்டேன். அதன் பைண்டிங் காப்பியை அப்படியே வைத்துள்ளேன். ஆதாரத்திற்கு அதனை தரவும் தயாராகவே உள்ளேன்.

எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. இந்தத் துறையில் எல்லோருமே நண்பர்கள்தான். சினிமாவை நேசிக்கும் மனிதர்கள்தான். ஆனால் ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ வேண்டும் என்று நினைத்தல் கூடாது. ஆனால், இது என்னுடைய கதை என்று சொல்லும் நபர்களில் ஒருவராக என்னுடைய பெயரும் வந்துவிட்டதே என்பதுதான் எனக்குப் பெரிய வேதனையாக இருக்கிறது.

நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆகவே அங்கே எனது கதையை பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இதைத்தான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறேன். ஆனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அந்தச் சங்கத்திலும் இது பற்றி கடந்த அக்டோபர் 14-ம் தேதியே புகார் கொடுத்துவிட்டேன். தீபாவளி முடிந்தவுடன் என் பிரச்சினை தொடர்பாக என்னுடைய இயக்குநர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்…” என்றார்.

 

Our Score