full screen background image

96 – கதைத் திருட்டு விவகாரம் – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

96 – கதைத் திருட்டு விவகாரம் – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

சமீபத்தில் வெளி வந்து பெரும் வெற்றியினைப் பெற்ற ‘96’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் சத்ரியன் உரிமை கொண்டாடிய விவகாரம் தொடர்பாக நமது இணையத்தளத்தில் முன்பேயே செய்திகளை வெளியிட்டிருந்தோம்.

அதற்கு ‘96’ படத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் அளித்த பதிலையும் நமது இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

அதோடு இந்த ’96’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறிய இன்னொரு உதவி இயக்குநர் விஸ்வநாத் என்பவரின் பேட்டியையும் இதில் பதிவு செய்திருந்தோம்.

ஆனாலும் இந்த விவகாரம் இப்போதுவரையிலும் புகைந்த நிலையில்தான் இருக்கிறது. காரணம், உதவி இயக்குநர் சுரேஷ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதுதான். ஆனால் ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். அதோடு இந்த ‘96’ படத்தின் முழு ஸ்கிரிப்டையும் அந்தச் சங்கத்தில் பதிவும் செய்திருக்கிறார்.

எழுத்தாளர் சங்கத்தின் விதிமுறைப்படி ‘யார் முதலில் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ, அவர்கள்தான் கதையின் உரிமைதாரர்’ என்பதுதான். இதன்படிதான் இப்போது ‘சர்கார்’ படத்திற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் எழுத்தாளர் சங்கம் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரதிராஜாவின் சீடரான பாக்யராஜ்தான் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தாலும் ‘சங்கத்தின் விதிமுறைகளை யாருக்காகவும் மாற்ற முடியாது’ என்று பாக்யராஜ் தன்மையாக தனது குருநாதரிடம் தெரிவித்துவிட்டதால், இந்தப் பிரச்சினையில் சுணக்கம் ஏற்பட்டது.

அதேசமயம் உதவி இயக்குநர் சுரேஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். அந்தச் சங்கத்தில் இது குறித்து அவர் புகார் அளித்திருக்கிறார். ஆனால் தமிழ்த் திரையுலகத்தில் கதை உரிமை விவகாரத்தில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் முடிவுதான் இறுதியானது என்பதால் இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சங்கமும் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாமல் போய்விட்டது.

96 suresh

இந்த நிலையில் உதவி இயக்குநர் சுரேஷுக்கு ஆதரவாக சில உதவி இயக்குநர்கள் ஒன்று கூடி நேற்று மதியம் பாரதிராஜாவின் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தனர்.

இந்தப் பேட்டியின்போதும் உதவி இயக்குநர் சுரேஷ் “96 படத்தின் கதை என்னுடையதுதான். அதனை நான் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்..” என்று சொல்லி அந்த டைரியையும், எழுதி வைத்திருந்த கதைச் சுருக்கத்தையும் பத்திரிகையாளர்களிடத்தில் காட்டினார்.

“அசுரவதம் இயக்குநரான மருதுபாண்டியிடம் இந்தக் கதையை முழுமையாகச் சொன்னேன். அவர் இன்றைக்கு அதை மறுப்பதன் காரணம்தான் எனக்குத் தெரியவில்லை. அதோடு ‘96’ படத்தின் டிஸ்கஷனில் அவர் இருந்திருக்கும்பட்சத்தில் என் கதையும், அவருடைய கதையும் ஒன்று என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் அவர் மெளனமாக இருந்து இந்தக் கதைத் திருட்டுக்கு உதவியிருக்கிறார்…” என்றும் குற்றம் சாட்டினார் சுரேஷ்.

கடைசியாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சொந்த பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ‘தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு தர வேண்டும்’ என்றும், ‘இனிமேல் இது போன்ற கதைத் திருட்டுக்கள் நடைபெறாமல் திரையுலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு விபரம் இங்கே :

“கடந்த 2012 டிசம்பரில் எனது உதவி இயக்குநர் சுரேஷ் சத்ரியன் சென்னையில் உள்ள எனது அலுவலகத்தில் ‘92’ என்ற தலைப்பில் கூற்ய கதையைக் கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன்.

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

96 asst directors

எனவே, அந்த காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.

இது இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்துள்ள ‘96’ எனும் படம் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரு.நந்தகோபால் அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி. பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக் காட்டினார்கள்.

இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப் பிரதியாக இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்து பேசினேன். எவ்வித முடிவு எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.

மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார்.

96 suresh

மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014-ல் எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு ‘96’ ஆனது என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை விசாரித்து தீர்வு கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமலிருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..”

என்று கேட்டுக் கொண்டுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

இதன் மூலம் இப்போது இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக உதவி இயக்குநர் சுரேஷுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தரும் முயற்சிதான் இது என்கிறார்கள் திரையுலகத்தினர்..!

Our Score