“96 படத் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒத்துழைப்பு இல்லை” – நடிகர் சங்கம் அறிவிப்பு..!

“96 படத் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒத்துழைப்பு இல்லை” – நடிகர் சங்கம் அறிவிப்பு..!

சென்ற மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படமான ‘96’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வரும் காலத்தில் எந்தவித ஒத்துழைப்பும் தரப் போவதில்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் நந்தகோபாலின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திச்சண்டை’, ‘துப்பறிவாளன்’, ‘வீர சிவாஜி’, ‘96’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

கடைசியாக அந்த நிறுவனம் தயாரித்திருந்த மூன்று திரைப்படங்களான ‘துப்பறிவாளன்’, ‘வீர சிவாஜி’, ‘96’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நாயகர்களான விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகிய மூவருக்கும் பல கோடிகளை சம்பளப் பாக்கியாக வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் நந்தகோபால்.

nandgopal-2

இந்தப் படங்களின் வெளியீட்டுக்கு முன்பாக கடைசி நிமிடத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வதையே வழக்கமாக வைத்திருந்தார் நந்தகோபால். இதனால் தங்களுடைய படம் சொன்ன நேரத்தில் வெளியாக வேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில் நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிட அனுமதியளித்தார்கள். இப்படித்தான் நந்தகோபால் இந்த மூன்று ஹீரோக்களிடமிருந்தும் தப்பித்துள்ளார்.

கடைசியாக ‘96’ பட ரிலீஸ் சமயத்திலும் இதே போன்று பிரச்சினைகள் எழுந்தது. அதற்கு முந்தைய படமான ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தமைக்காக தனக்கு பாக்கி பணம் வைத்திருப்பதாகச் சொல்லி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷாலே புகார் கொடுத்திருந்தார்.

nandgopal-5

படத்தின் கடைசி நிமிடத்தில் நடந்த இந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டி தயாரிப்பாளருக்கு உதவ முன் வந்த ‘96’ படத்தின் நாயகன் விஜய் சேதுபதி விஷாலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தான் தருவதாக எழுதிக் கொடுத்த பின்புதான் ‘96’ படம் வெளியானது.

ஆனாலும், இந்தப் பிரச்சினை வெளியில் கசிந்தபோது, ‘நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து கொண்டே ஒரு பட வெளியீட்டுக்குத் தடை போடலாமா..?’ என்று விஷால் மீது திரையுலகத்தினர் பலரும் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக விஜய் சேதுபதி கொடுக்க வேண்டிய பணத்தை “வேண்டாம்” என்று மறுத்த விஷால், அதனை தான் தயாரிப்பாளரிடத்திலேயே வசூலித்துக் கொள்வதாகக் கூறிவிட்டார்.

nandgopal-3

‘துப்பறிவாளன்’ படத்திற்கு தன் பெயரில் சில கோடிகளை கடன் வாங்கி தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு வழங்கியிருந்தார் விஷால். அந்தக் கடனுக்காக இப்போதுவரையிலும் விஷாலே வட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் கடும் பணச் சுமையில் சிக்கித் தவிக்கிறார் நடிகர் விஷால்.

இதேபோல நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் அவருக்கான சம்பளத்தில் பெரும் தொகையை பாக்கி வைத்திருந்தார் நந்தகோபால். அப்போது படம் வெளியாக வேண்டுமே என்பதற்காக பெருந்தன்மையாக படத்தை வெளியிட அனுமதித்த விக்ரம் பிரபு அதற்குப் பிறகு தொடர்ச்சியாக சம்பளப் பாக்கியைக் கேட்டும் தயாரிப்பாளர் நந்தகோபால் இதுவரையிலும் அவருக்கும் தரவில்லை.

nandgopal-4

இதனால் கோபமான விக்ரம் பிரபு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகார் மற்றும் நடிகர் விஷாலின் புகார் மற்றும் விஜய் சேதுபதியின் விட்டுக் கொடுத்தல் அனைத்தையும் விசாரித்த நடிகர் சங்கம் இப்போது “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கும் அதன் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை..” என்கிற கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் திரு.விஷால் அவர்கள் நடித்தமைக்காகவும், ‘வீர சிவாஜி’ என்ற திரைப்படத்தில் திரு.விக்ரம்பிரபு அவர்கள் நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் ‘96’ என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஊதிய பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது. 

மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து  ஊதியம்  வழங்காமல்  படங்களை  திரையிட்டுள்ளது. 

IMG_9422

படம் வெளியீட்டின்போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக் கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்நற்செயலை பலவீனமாக எடுத்துக் கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக் கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது. 

கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இது குறித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு கலந்து ஆலோசித்தது. 

அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இது போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் / தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள் / நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. 

அதனடிப்படையில் தற்போது ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’  தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது…”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவசரமாக இந்த அறிக்கை வெளியிடுவதற்கான காரணம் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இத்தனை கோடி சம்பளப் பாக்கி மற்றும் கடன்களையும் வைத்துக் கொண்டு  புதிய படத்திற்கு பூஜை போட்டிருப்பதுதான்.

இந்தப் படத்தை ‘96’ படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம்குமாரே இயக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியை மீண்டும் அணுகியிருக்கிறார் நந்தகோபால். ஆனால் விஜய் சேதுபதி இந்த நிமிடம்வரையிலும் அதற்கு சம்மதிக்கவில்லை.

அதோடு கூடவே படத் தயாரிப்பு பற்றி நந்தகோபால் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிதான் நடிகர் விஷாலை கோபப்படுத்தியிருக்கிறது.

IMG_9344

தயாரிப்பாளர் நந்தகோபால் அந்தப் பேட்டியில், “வெற்றிகரமான ஒரு நல்ல படத்தைக் கொடுப்பதில் அந்தப் படத்தின் கதாநாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று பேருக்குமே பங்கு இருக்கிறது. கதாநாயகன், தயாரிப்பாளரை நம்பி படத்தில் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர் இயக்குநரை நம்ப வேண்டும்.

கதாநாயகன் கதை விவாதத்தில் தலையிடலாம். படப்பிடிப்பு தொடங்கிய பின்பு திரைக்கதையில் தலையிடக் கூடாது. கதை மற்றும் காட்சிகளை மாற்றும் உரிமை இயக்குநருக்கு மட்டுமே உண்டு. கதாநாயகன் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் நம்ப வேண்டும். இப்படி செயல்பட்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும்..” என்று நேர்மையான ஒரு தயாரிப்பாளரை போல பேட்டியளித்திருந்தார் நந்தகோபால்.

இந்தப் பேட்டியைப் பார்த்து கோபமடைந்த விஷாலின் திடீர் முடிவெடுப்புதான், இந்த நடிகர் சங்கத்தின் ஒத்துழையாமை இயக்கத் தடையுத்தரவு.

தவளை தன் வாயாலேயே கெடும் என்பதை போல தயாரிப்பாளர் நந்தகோபால் தனது பேட்டியாலேயே தன்னைச் சிக்கலுக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்.

இப்போது ‘நாடோடிகள்-2’ படத்தையும் நந்தகோபால் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார், அதுல்யா ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்து வருகின்றனர். சமுத்திரக்கனி படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் அடு்த்தாண்டு வெளியாகவுள்ளது. நடிகர் சங்கத்தின் இந்த மறைமுக தடையுத்தரவின் மூலமாகவும், மூன்று நாயகர்களின் சம்பளப் பாக்கி விவகாரமாகவும் இந்தப் பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர் நந்தகோபால் நிச்சயம் மிகப் பெரிய சிக்கலை சந்திக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதி.

Our Score