1983-ம் ஆண்டு லண்டனில் நடந்த புருடென்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் அப்போதைய சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இப்போது அந்த 1983-ம் ஆண்டு தருணத்தை நினைவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அந்த வெற்றி சம்பவத்தை திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்தப் படத்திற்கு 83 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். சுனில் கவாஸ்கராக தாஜீர் பாசின் நடிக்கிறார். மதன்லாலாக ஹார்டி சாந்து நடிக்கிறார். சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்கிறார். அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்கிறார். தமிழ் நடிகரான ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார். சிராக் படீல் சந்தீப் பட்டீலாக நடிக்கிறார். சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்கிறார். ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்க்காராக நடிக்கிறார். தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்கிறார். டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்கிறார். ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்கிறார். நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்கிறார். ஆர்.பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்கிறார். போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்கிறார். பங்கஜ் திரிபாதி பி.ஆர்.மான்சிங்காக நடிக்கிறார். தீபிகா படுகோனே கபில்தேவின் மனைவியான ரோமி கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் கபீர் கானின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ’83’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர்.
அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில்தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச் சிறந்த புகைப்படம்.
அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டி நடந்த தினத்தன்று பி.பி.சி. தொலைக்காட்சியின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி வீடியோவில் பதிவு செய்யப்படவில்லை என்பது சோகமான விஷயமாகும்.
ரன்வீர் சிங்கின் வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே தெரியாத வகையில் அமைந்திருந்தது.
இந்திய சினிமாவில் இதுவரையிலும் வெளியான விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான செலவில் உருவாகியிருக்கிறது.
இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.