சமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தில் சிறப்பாக நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தைப் பார்த்த திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அவரை பாராட்டி வருகின்றனர்.
மேலும், “இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மாநில அரசின் விருதும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக எம்.எஸ்.பாஸ்கருக்குத்தான் தரப்பட வேண்டும்” என்று நடிகர் நாசரே, இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது அவரை மேலும் பெருமைக்குரியவராக்கியுள்ளது.
இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இந்தக் கதாப்பாத்திரத்தை தனக்குக் கொடுத்து பெருமையடையச் செய்த படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு தனது பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்து பாராட்டியுள்ளார்.
பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து அவரைப் பார்க்க வந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், திடீரென தங்கச் சங்கிலியை பரிசாகக் கொடுத்து பாராட்டியதால் நெகிழ்ந்து போனார்.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு இந்தத் தம்பி என்னுடன் தொலைபேசியில் பேசினார். ‘ஒரு கதை சொல்லணும் ஸார். தயாரிப்பாளர் ரெடியா இருக்கார். டைம் கொடுத்தால் நல்லாயிருக்கும்..’ என்றார். ‘வீட்லதான் இருக்கேன். வாங்க..’ என்றேன்.
அரை மணி நேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் முதலில் எனக்கு இவர்தான் இயக்குநர் என்ற எண்ணமே வரவில்லை. அந்த அளவுக்கு காலேஜ் படிக்கிற பையன் மாதிரி, சின்னப் பையனா இருந்தார். என் பையனோட பிரெண்டு போலிருக்கு. அவனைப் பார்க்கத்தான் வந்திருக்காப்புல நினைச்சு. ‘பையன் வீட்ல இல்லையேப்பா.. வெளில போயிட்டாரே..?’ என்று சொன்னேன்.
அப்புறம்தான் அவர் சொன்னார்.. ‘இல்ல ஸார்.. என் பேர் ஸ்ரீகணேஷ். உங்ககிட்ட போன்ல பேசினனே.. கதை சொல்லணும்னு.. அதான் வந்திருக்கேன்’னு சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு சின்ன வயசுல இயக்குநரா என்று..!?
அப்போ நான் அவருக்கு சொன்ன அட்வைஸ் ‘கொஞ்சம் உடம்பையும் தேத்துங்க தம்பி’ என்பதுதான். ஆனால், அவர் சொன்ன கதையும் என் கதாப்பாத்திரமும், அந்த இளைஞர் சொன்னவிதத்தில், உடல் பலத்தைவிட அவருடைய மூளையின் பலம் அதிகம் என்று சொல்லாமல் சொல்லியது. அவர் சொன்னக் கதையில் என்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பெரிசா தெரிஞ்சது.. இதை விட்டிரவே கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. பட்டுன்னு ஒத்துக்கிட்டேன்..
என்னிடம் சொன்னது போலவே படத்தையும் அருமையாக எடுத்து, எனக்கும், அதில் நடித்த எல்லோருக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுத்து, எல்லோரது மனதிலும் நின்றுவிட்டார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
என் மகனாக நான் ஏற்றுக் கொண்ட அந்த இளைஞனுக்கு, மேலும் நிறைய கற்பனை வளத்தையும், நிறைய படங்களையும் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
படத்தில் பங்கேற்ற நடிகர் சங்க தலைவரும், என்னுடைய மாமாவுமான திரு.நாசர் அவர்களுக்கும், படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஐயா திரு. மு.வெள்ளைப்பாண்டி அவர்களுக்கும், அவரது மகன், கதாநாயகன் வெற்றி அவர்களுக்கும், லைன் புரொடியூசர் கார்த்திக் அவர்களுக்கும், அருமை சகோதரர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்களுக்கும், எங்களை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிக பெருமக்களுக்கும், மற்றும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், படக் குழுவினர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.