full screen background image

7 நாட்கள் – சினிமா விமர்சனம்

7 நாட்கள் – சினிமா விமர்சனம்

மில்லியன் டாலர் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.கார்த்திக், கே.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபுவும் நடித்திருக்கிறார்.  26 வருடங்களுக்கு பிறகு பிரபு – சக்திவேல் வாசு இணைந்து நடிக்கும் படம் இது. பி.வாசு இயக்கிய ‘சின்னதம்பி’ படத்தில் சிறு வயது பிரபுவாக, சக்திவேல் வாசுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக நிகிஷா பட்டேல் நடிக்க, மற்றுமொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்கிறார்.  மேலும் கணேஷ் வெங்கட்ராமன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்ஷிணி, மாஸ்டர் ராகவன், வள்ளி விஷிஸ்டா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர். இவர் ‘ஜில் ஜங் ஜக்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்கும் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத் தொகுப்பு – ஜெஸ்வின். கலை இயக்கம் – ராஜு. சண்டை பயிற்சி – பிரதீப். நடனம் – ராஜு சுந்தரம். தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி. ஆடை வடிவமைப்பு – கவிதா கௌதம். விமல் பீதாம்பரம் எழுதிய கதைக்கு, டி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கௌதம் வி.ஆர். இவர் இயக்குநர் சுந்தர்.சி-யிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

ஹீரோ சக்தி வாசு ஒரு தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். இவருடைய அக்காள், அக்கா பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார். இவர் வளர்க்கும் நாயான பிளாக்கிதான் இவரது ஒரே பொழுதுபோக்கு.

இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் ஹீரோயின் நிகிஷா பட்டேல் குடியிருக்கிறார். சக்திக்கும், நிகிஷாவுக்கும் ஏழாம் பொருத்தம். அவ்வப்போது இருவருக்குமிடையில் சண்டை நடக்கும். இது அந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்..

தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபர் பிரபு. இவரது ஒரே மகன் ராஜீவ் பிள்ளை. பெண்கள் விஷயத்தில் காதல் மன்னன். பல பெண்களுடன் பழகுவார். ஆனால் காதலிக்கவும் மாட்டார். திருமணமும் செய்து கொள்ள மாட்டார். ஆனால் பிடித்த பெண்களுடன் பேசியும், பழகியும் ஆக வேண்டும் என்பதில் வெறியுள்ளவர்.

இவரது பழக்க வழக்கம் பிடிக்காமல் இன்னொரு ஹீரோயினான அங்கனா ராய் இவரைத் தவிர்க்கிறார். ஆனால் அங்கனா ராயை விடாமல் துரத்துகிறார் ராஜீவ் பிள்ளை.

பிரபுவின் தத்துப் பிள்ளை கணேஷ் வெங்கட்ராம். சைபர் கிரைம் பிரிவில் துணை கமிஷனராக இருக்கிறார். இவருக்கும் ஒரிஜினல் பிள்ளையான ராஜீவ் பிள்ளைக்கும் இடையில் எப்போதும் முட்டல், மோதல்கள்..!

இந்த நேரத்தில் தனது பையன் ராஜீவ் பிள்ளைக்கு இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர் வீட்டில் இருந்து பெண் எடுக்கிறார் பிரபு. நிச்சயத்தார்த்த விழாவுக்கு மாநிலத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளுமே திரண்டு வந்திருக்கிறார்கள்.

அன்றைய இரவிலேயே அங்கனா ராய் கூவம் ஆற்றில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அங்கனா ராய் ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது அவருடன் ராஜீவ் பிள்ளை சண்டையிட்டது ஹோட்டலின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. இது போலீஸ் வசம் சிக்குகிறது.

மறுநாள் பிரபுவுக்கு ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அங்கனா ராயின் சாவில் அவரது மகன் ராஜீவ் பிள்ளைக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறது மர்மக் குரல்.

குழம்பிப் போன பிரபு, தனது வளர்ப்புப் பையனான கணேஷ் வெங்கட்ராமிடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைத்து கல்யாண நாளுக்குள் பிரச்சினையை முடிக்கும்படி சொல்கிறார். கணேஷ் வெங்கட்ராம் இந்த வழக்கை பதிவு செய்யாமலேயே விசாரிக்கிறார்.

தொலைபேசி எண்ணை வைத்து விசாரிக்க, விசாரிக்க.. அது கடைசியாக சக்தி வாசு குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டிலேயே இருக்கும் அவரது நண்பனான விஷ்ணுவிடம் போய் நிற்கிறது. விஷ்ணுவைத் தேடி போலீஸ் வர.. விஷ்ணு தப்பியோடுகிறான். ஆனால் கணேஷ் வெங்கட்ராமின் அடியாட்கள் அவனை கொலை செய்து விடுகின்றனர்.

விஷ்ணு தப்பியோடும்போது ஒரு முக்கியமான தகவல்கள் அடங்கிய குறுந்தகட்டை நிகிஷாவின் வீட்டுக்குள் போட்டுவிட்டு போகிறான். அந்த குறுந்தகட்டை சக்தி வாசுவின் நாயான பிளாக்கி எடுத்து வந்து சக்தி வாசுவின் சட்டைக்குள் வைக்கிறது.

விஷ்ணுவிடம் இருந்த ஆதாரம் சக்தி வாசு, நிகிஷாவிடம்தான் இருக்கிறது என்பதை அறிந்த கணேஷ் வெங்கட்ராம் இவர்களைத் தேடி வந்து டார்ச்சர் செய்ய.. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

ஒரு சம்பவம் நடந்து 7 நாட்களுக்குள்ளாக நடக்கும் விஷயங்கள்தான் படமே என்பதால்தான் இந்தத் தலைப்பாம்..!

சுந்தர்.சி.யிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவராச்சே என்று போனால் நிறையவே ஏமாற்றியிருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.கவுதம். டைட்டிலுக்கு இத்தனை கவனமாக யோசித்து கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கும் இயக்குநர் திரைக்கதைக்கும் அதிக கவனம் கொடுத்திருக்கலாமே..?

நாயான பிளாக்கி வசனம் பேசுவதுபோல் அமைத்திருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தில் சுவாரஸ்யமானது. வேறு எதுவுமில்லை என்பது சோகமான விஷயம்.

சக்தி வாசுவுக்கு ஒரு படி ஏறினால்.. இரண்டு படியிறக்கிவிடும். இந்தப் படம் ‘சிவலிங்கா’வில் ஏற்றிவிட்டதை கொஞ்சம் கீழே இறக்கிவிட்டிருக்கிறது. நடிப்புக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் ஹீரோவை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். ச்சும்மா சாதாரணமாக வந்து வசனத்தை பேசிவிட்டு போவதைப் போலவே செய்திருக்கிறார் சக்தி வாசு.  

நிகிஷா பட்டேலுக்கு இந்த அளவுக்குக்கூட நடிப்புக்கான வாய்ப்பில்லை. இத்தனை பெரிய முகத்தை குளோஸப்பில் பார்க்கவே முடியலை. எப்படி நடிப்பதை பார்ப்பது..?

கணேஷ் வெங்கட்ராம் மட்டுமே சில காட்சிகளை காப்பாற்றியிருக்கிறார். அவர் நல்லவரா, கெட்டவரா என்பதையே யூகிக்க முடியாமல் கொண்டு போயிருக்கும் இயக்குநர் மற்ற கேரக்டர்களையும் இதேபோல் செய்திருக்கலாமே..?

பாசமான அப்பாவாக நடித்திருக்கும் பிரபுவின் வஞ்சகமில்லாத நடிப்பும், சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் நாசரும், 2 நிமிட வசனத்தில் அப்படியே ஆடியன்ஸை கட்டிப் போட்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரும்தான் படத்தில் நடித்திருக்கக் கூடிய நடிகர்கள். அதிலும் காமெடி போலீஸாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தன் சாவு எதிரில் இருப்பதை உணர்ந்து பேசும் அந்த 2 நிமிட காட்சி அசத்தல்..!

போலீஸ் கமிஷனரின் பெண் தற்கொலையையே கண்டுபிடிக்க முடியவில்லையெனில் அந்த கமிஷனர் இருந்தென்ன..? போயென்ன..? எத்தனை பெரிய வில்லன்தான் என்றாலும் போலீஸ் ஒரு பெரிய எதிர்ப்பையாவது காட்டியிருக்காதா என்ன..? அலட்சியமாக அவரை ‘மனவியாதிக்காரர்’ என்று சொல்லி மன நல விடுதியில் அடைக்கிறாராம் வில்லன்.. இப்படித்தான் திரைக்கதை சொதப்பலாகியிருக்கிறது.

மிகப் பெரிய ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவின் அற்புத ஒளிப்பதிவு படத்தில் இருப்பது உண்மைதான். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமில்லை. பின்னணி இசையில் அநியாயத்திற்கு நாடகத்தனமான இசையை அழுத்தி படத்தை காமெடியாக்கியிருக்கிறார்கள்..!

வலுவில்லாத திரைக்கதை.. அழுத்தமில்லாத இயக்கம்.. பரபரவென ஓடியிருக்க வேண்டிய காட்சியமைப்புகள் சவசவவென்று நகர்வதால் ரசிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது படத்தின் பிற்பாதி காட்சிகள்..!

படத்தில் ஒரு திரில்லர், சேஸிங் படத்திற்குரிய கதை இருந்தாலும் திரைக்கதையும், இயக்கமும் கோட்டைவிட்டதால் படம் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.

Our Score