வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிபபாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தின் நாயகனாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
திரைக்கதை, இயக்கம் – ராதா மோகன், வசனம் – விஜி, ஒளிப்பதிவு – எம்.எஸ்.விவேக் ஆனந்த், இசை – இசைஞானி இளையராஜா, படத் தொகுப்பு – டி.எஸ்.ஜெய், சண்டை பயிற்சி – மகேஷ் மாஸ்டர், பாடல்கள் – பா.விஜய், பழனிபாரதி, விவேக், தயாரிப்பு நிர்வாகம் – ராஜூ உடையாளி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.
சென்ற ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த ‘kothi bannaa sadhaarana maaykattu’ என்ற படத்தின் ரீமேக்குதான் இத்திரைப்படம்.
“பெயர் : கோவிந்தராஜ், வயது 60 : மாநிறம், வெள்ளை கலரில் கோடு போட்ட சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மூக்குக் கண்ணாடி அணிந்தவர். சற்று புத்தி சுவாதீனம் இல்லாதவர். இவரைக் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. கண்டறிந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கோ, அல்லது தொலைபேசியிலோ தகவல் கொடுக்கவும். தக்க சன்மானம் வழங்கப்படும்..”
இது போன்ற எத்தனையோ அறிவிப்புகளை நாம் செய்தித் தாள்களில் படித்திருக்கும். போஸ்டர்களில் பார்த்திருக்கிறோம். படித்ததும், பார்த்தும்விட்டு அகன்றிருக்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் காணாமல் போனவரின் குடும்பத்தாரின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கோமா..?
அப்படி யோசிக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘ககணம்’, ‘கெளரவம்’, ‘உப்புக் கருவாடு’, ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளிவரும் 10-வது படம் இது.
ஓய்வு பெற்ற கணித ஆசிரியரான கோவிந்தராஜ் என்னும் பிரகாஷ்ராஜ், தனது காதல் மனைவியை கேன்சர் நோயால் பறி கொடுத்தவர். ஒரே மகன் சிவா என்னும் விக்ரம் பிரபு. ஐ.டி. பொறியியல் பட்டதாரி. இப்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறார். விரைவில் அமெரிக்க செல்லப் போகிறார்.
பிரகாஷ்ராஜ் இப்போது அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்று அவருக்கே தெரியாத நிலை. பல சமயங்களில் அனைத்தையும் மறந்துவிடுவார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை எந்நேரமும் கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே என்பதால் சென்னை புறநகரில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்தில் அப்பாவை சேர்ப்பித்துவிட்டு மும்பைக்கு சென்றிருக்கிறார் விக்ரம் பிரபு.
மாதாமாதம் அப்பாவுக்காக பணத்தை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்போது அமெரிக்கா செல்லவிருப்பதால் அப்பாவை பார்ப்பதற்காக சென்னைக்கு வருகிறார் விக்ரம் பிரபு. அப்பா பிரகாஷ் ராஜை வெளியில் அழைத்துச் செல்கிறார். அவருக்காக புதிய துணிமணிகளை வாங்கித் தருகிறார்.
திரும்பவும் பிரகாஷ்ராஜை கொண்டு வந்து விடும்போது தற்செயலாக பிரகாஷ்ராஜ் தொலைந்து போய்விடுகிறார். அதே ஹோமில் மருத்துவராக வேலை செய்யும் இந்துஜா பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவரும், விக்ரம் பிரபுவும் சேர்ந்து பிரகாஷ் ராஜை தேடுகிறார்கள்.
இதே நேரம் சென்னையில் மிகப் பெரிய பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அருள் ஜோதி, தனக்கு குடைச்சல் கொடுக்கும் ஒரு அரசு அதிகாரியைத் தீர்த்துக் கட்டும்படி தனது அடியாள் சமுத்திரக்கனியிடம் சொல்கிறார்.
சமுத்திரக்கனி இதைச் செய்து முடிக்கும் நேரத்தில் எதிர்பாராமல் பிரகாஷ்ராஜும் அந்த வேனுக்குள் வந்து அமர்ந்து விடுகிறார். பிரகாஷ்ராஜின் திடீர் வருகையால் அந்த வேனும் விபத்துக்குள்ளாகிறது.
அப்போது அந்த வழியாக வரும் தனியார் சக்கரை ஆலையில் அதிகாரியாகப் பணியாற்றும் குமாரவேல், கொலையுண்டு கிடக்கும் அதிகாரி மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரையும் பார்த்துவிடுகிறார்.
விபத்தினால் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து நிற்கும் சமுத்திரக்கனியை அவரது உதவியாளன் காப்பாற்றி குமாரவேலின் காரில் அனைவரையும் ஏற்றி அழைத்துச் செல்கிறார். உடன் குமாரவேலும், பிரகாஷ்ராஜூவும் இவர்களுடனேயே காரில் இருக்கிறார்கள்.
கனி தான் கண் விழித்தவுடன் நிலைமை கை மீறிப் போய்விட்டதை உணர்ந்து இப்போதைக்கு குமாரவேலின் வீட்டில் தங்கிக் கொள்ள முடிவெடுக்கிறார். அதே வீட்டிலேயே பிரகாஷ்ராஜையும் தங்க வைக்கிறார்கள்.
இப்போது அருள்ஜோதி குமாரவேலுவையும், பிரகாஷ்ராஜையும் கொலை செய்யும்படி சொல்கிறார். இதற்காக கொஞ்சம் டைம் கேட்கிறார் கனி. ஆனால் அவருக்கு அவர்களை கொலை செய்ய மனமில்லை. அடுத்த நாள் கூடுதலாக கனியின் உதவியாளரையும் தீர்த்துக் கட்டிவிடும்படி உத்தரவிடுகிறார் அருள்ஜோதி.
இதற்கிடையில் அரசு அதிகாரியின் கொலையை போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்குகின்றனர். குமாரவேலுவின் வீட்டுக்கெல்லாம் போலீஸ் வந்து செல்கிறது. இன்னொரு பக்கம் தனது தந்தையைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவு இந்துஜா மீது காதல் பிறக்கிறது. ஆனால் அதனை வெளிப்படையாய் சொல்ல முடியாமல் தவிக்கிறார். தனது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்கிறார் விக்ரம் பிரபு.
கனி தான் சொன்னதைச் செய்யாததால் அவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் அருள்ஜோதி. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
கன்னட மூலத்தில் இருந்து திரைக்கதையை மட்டும் தமிழுக்கேற்றாற்போல் கொஞ்சம் மாற்றியமைத்து தனது ஆஸ்தான வசனகர்த்தாவான விஜியின் உதவியோடு அவ்வப்போது சிரிப்பு மாலைகளை உதிர வைத்து, தனது அழுத்தமான இயக்கத்தினால் அழகான படத்தினை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
இந்தியாவில் முதியவர்களின் நிலைமை இப்போது மோசமாகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. வீட்டுக்கு இரண்டு பிள்ளைகள் என்றாகி பின்பு ஒரு பிள்ளைதான் என்று வம்சத்தின் கணக்கு நிற்கிறது. இதனால் பெற்றோர்களை முழுமையாக தாங்களே பரமாரிக்க வேண்டியிருக்கிறதே என்றெண்ணும் இன்றைய இளைய சமுதாயம் ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை சேர்ப்பித்துவிட்டு தங்களது வேலையைப் பார்க்கப் போகிறார்கள்.
இதற்காகவா கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கினோம் என்று பெற்றவர்கள் மனம் வெதும்பும் கதைகள் ஊர் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. கூடுதலாக அந்த முதிய பெற்றோர்களுக்கு நோயும் சேர்ந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆனால் பிள்ளைகளின் எதிர் செயல்பாடு இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது.
பாதிப் பேர் கடமைக்கே என்று பார்த்துக் கொள்கிறார்கள். கால்வாசி பேர் முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுகிறார்கள். மீதமான கால்வாசி பேர்தான் பெற்ற கடமையைச் செய்தாக வேண்டுமே என்றெண்ணத்தில் பெற்றோர்களை தங்கள் கூடவே வைத்து பரிமாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் நாயகன் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தைக் கவனித்தில் கொள்ளும் அளவுக்கு அப்பா மீது பாசத்தைக் கொட்ட நினைக்கவில்லை. ஆனால் அப்பா காணாமல் போன் பின்புதான் உண்மையை உணர்ந்து, “நீங்க காணாமல் போன ஒருத்தரை தேடுறீங்க. நான் எங்க அப்பாவைத் தொலைச்சிட்டு தேடுறேன்..” என்று வேதனையோடு சொல்கிறார்.
இந்த உணர்தலைத்தான் இத்திரைப்படம் படம் பார்க்க வந்திருக்கும் அனைத்து ரசிகர்களிடத்திலும் உணர்த்தியிருக்கிறது.
பிரகாஷ்ராஜ் வழக்கம்போல தனது மறுதலிக்கவே முடியாத நடிப்பால் சிகரமாய் நிற்கிறார். அடிக்கடி அவர் சிரிக்கும் பளீரென்ற சிரிப்பே போதும்.. எப்போதும் “சிவா, சிவா…” என்று தன் மகனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் அவரது எண்ணமெல்லாம் அல்சீமர் நோய் தாக்கிய பின்பும் அவர் கூடவே இருக்கிறது என்பதுதான் மிகச் சிறப்பான திரைக்கதை.
தனது காதல் கதையை கொஞ்சம், கொஞ்சமாக இந்துஜாவிடம் சொல்லும்போது ஏற்ற இறக்கங்களுடன் அவர் சொல்லும்விதம் ஆஸம்..! இதே கதைப்படிதான் விக்ரம் பிரபுவும், இந்துஜாவும் கிளைமாக்ஸில் இணைகிறார்கள் என்பது சிறப்பான திரைக்கதைக்கு ஒரு அடையாளம்..!
குமாரவேலுவின் வீட்டிற்குள் பிரகாஷ்ராஜ் காட்டும் நடிப்பும், பேசும் வசனங்களும், கெட்ட நாய், நல்ல நாய் கதையும், “எந்த நாய் நன்றியோட இருக்கோ அந்த நாய்தான் ஜெயிக்கும்…” என்கிற அந்தக் கதையின் முடிவும் டச்சிங்கான திரைக்கதை.
முதியவர்களிடத்தில் நாம் காட்ட வேண்டிய அன்பு, பரிவு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, பொறுமை என்று எல்லாவற்றையும் பிரகாஷ்ராஜ் தான் ஏற்றிருக்கும் கேரக்டர் மூலமாக நமக்கு உணர்த்துகிறார்.
விக்ரம் பிரபுவுக்கு இதுதான் முதல் படமோ என்பது போல இருக்கிறது. மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். நடித்திருப்பது போலவே தெரியவில்லை. தந்தையைக் காணாமல் கலங்கத் துவங்குபவர், பின்பு தந்தையின் அருமை தெரிந்து அவரை தேடியலையும் காட்சிகளிலெல்லாம் ஐயோ பாவம் என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவித்திருக்கிறார். வெல்டன் விக்ரம் பிரபு..
ரவுடி கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சரியான தேர்வு. அவருக்குள் இருக்கும் கெட்ட சகவாசத்தை, நன்றிக்காக எதையும் செய்யும் முட்டாள்தனத்தை பாசம் என்ற ஒரு விஷயத்தை வைத்தே பிரகாஷ்ராஜ் உடைத்தெறிவது சுவையான காட்சிகள்.. சமுத்திரக்கனி விடைபெறும்போது பிரகாஷ்ராஜின் காலில் விழுந்து வணங்கிவிட்டுப் போகும்போதே அவரது திருந்திய குணம் தெரிந்துவிடுகிறது.
கனியின் உதவியாளனாக நடித்திருக்கும் அந்தப் பையனுக்கும் அருள்ஜோதியின் வீட்டு வேலைக்காரிக்குமான காதல் போர்ஷன் இன்னொரு பக்கம் சுவையானது. இவர்களின் நட்பே திரைக்கதைக்கும் பெரிதும் உதவியிருக்கிறது.
குமாரவேல் எப்போதும்போல வசனகர்த்தா விஜியின் எழுத்தாற்றலால் பல இடங்களில் கை தட்டலை வரவழைத்திருக்கிறார். தனது மனைவியை பெண் பார்க்க வந்திருப்பதுபோல பிரகாஷ்ராஜ் பேசுவதை குத்திக் காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது..! இதேபோல் இவரது மனைவி மதுமிதாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்துஜா கண்ணியமான வேடத்தில் நடித்திருக்கிறார். சேவை மனப்பான்மையோடு மருத்துவத் தொழில் செய்யும் அவருக்கு காணாமல் போன நோயாளியான பிரகாஷ்ராஜை தேடியலையும் ஒரு பொறுப்பையும், அதற்கான சரியான காரணத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பல காட்சிகளில் அழகாய் தெரிகிறார். கேமிரா முகம் என்று சொல்வார்களே அது போன்று ஜொலிக்கிறது இவரது முக அழகு.
மிக நாகரிமான முறையில் இவர்கள் இருவருக்கும் இடையில் தொடரும் நட்பு எப்போது காதலாகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்றாலும், இருவரும் அதை வெளிப்படையாய் சொல்லிக் கொள்ளாமல் இருப்பதை மட்டுமே வசனங்கள் மூலமாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர்.
அந்த முதியோர் இல்லத்தில் பலதரப்பட்ட முதியவர்கள்.. தாங்கள் யார் என்பதையே மறந்துவிட்டு அங்கே அவர்களைக் கவனித்துக் கொள்ளும் அக்கறையினால் மட்டுமே உயிர் வாழ்வதை படம் பிடித்திருக்கிறார் இயக்குநர்.
தன்னுடைய மறதி நோயினால் கணவரைக்கூட மறந்துவிட்டு அதே ஹோமில் இருக்கும் இன்னொரு நோயாளியை தனது கணவனாக நினைத்து அல்லல்படும் அந்தப் பெண் நோயாளியின் கதை உருக்கமோ உருக்கம்.
அந்தப் பெண்ணின் கணவர் எப்போதும் அவர்களுடனேயே இருந்து மனைவியைக் கவனித்துக் கொள்ளும் காட்சிகளெல்லாம் உயிரை வாட்டுகிறது.. அந்த நடிகையும், கணவராக நடித்தவரும் யதார்த்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
படத்தின் மிகப் பெரிய பலமே வசனகர்த்தா விஜிதான். நகைச்சுவை காட்சிகள் என்றில்லை.. அனைத்து காட்சிகளிலுமே அவரது வசனங்கள்தான் படத்தையே நகர்த்தியிருக்கின்றன. குமாரவேலு மூலமாக அவர் சொல்லியிருக்கும் விஷயங்களெல்லாம் இன்றைய தமிழகத்தின் நிலைமையை வெளிப்படுத்துகின்றன.
ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தனுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. ஆனால் எதிலும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் வழக்கம்போல் ஈர்ப்பில்லை என்றாலும் பின்னணி இசையில் மகுடம் சூட்டியிருக்கிறார். மற்றைய படங்களை போல அமைதியாக இராமல், இந்தப் படத்தின் பின்னணியில் அடித்து ஆடியிருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் குமாரவேலுவின் வீட்டில் நுழைந்து சோதனையிடும்போது ஏற்படும் உணர்வுகேற்றவாறு பின்னணி இசையை சமர்ப்பித்து நமக்கும் திக் திக் உணர்வைக் கூட்டியிருக்கிறார்.
இந்தியா போன்ற குடும்பமே முக்கியம் என்றிருக்கும் சமூகத்தில் இன்றைய நிலைமையில் மிகப் பெரிய பிரச்சினையே முதியோர்களை கவனித்துக் கொள்வது எப்படி என்பதுதான். பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் பிள்ளைகளுக்கு உண்டு என்பதையும், அதிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ளவும் முடியாது. தட்டிக் கழிக்கவும் கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
குடும்பம், குடும்பமாக இத்திரைப்படத்தைச் சென்று பார்த்தால் இப்போதைய இளைஞர்களுக்கும், முதிர் இளைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இதுவொரு வாழ்க்கைப் பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நாட்டில் முதியோர் காப்பகங்கள் மட்டும் அமைக்கப்படவே கூடாது என்பதுதான் நமது ஒரே லட்சியமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தை அழுத்தமாகவே இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.
நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது. உங்களுடைய நல்ல எதிர்காலத்திற்காகத்தான் இத்திரைப்படம் வந்திருக்கிறது. இதற்காகவாவது அவசியம் பார்த்து விடுங்கள் மக்களே..!