RFI International நிறுவனமும் DSS புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆறிலிருந்து ஆறு வரை’.
இந்தப் படத்தில் கெளசிக் ஹீராவாக நடித்திருக்கிறார். சண்டிகரை சேர்ந்த குஷ்பு சிங்கும், கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட பூஜா கங்குலி ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ், மிப்புசாமி, பிரபு, ஜார்ஜ் பிரிட்டோ, தமிழ் கண்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ரோஹன், வி.பி.ஆர்., எழுத்து, இயக்கம் – ஸ்ரீஹரி, இசை – ஜீவாவர்ஷினி, ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், பாடல்கள் – சினேகன், விவேகா, நடனம் – சுரேஷ், இணை இயக்கம் – பூபால நடேசன், மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன்.
படம் பற்றி இயக்குநர் ஸ்ரீஹரி பேசுகையில், “இந்தப் படம் ஒரு நாள் மாலை 6 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணிவரையிலும் நடக்கும் கதை என்பதால்தான் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறோம்.
அந்த 12 மணி நேரத்தில் நடைபெறும் 3 கொலை சம்பவங்கள்தான் படத்தின் கதை. இந்தக் கொலை சம்பவங்களில் எதிர்பாராமல் சம்பந்தப்படும் நாயகனும், நாயகியும் எப்படி அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
பெண் வன்கொடுமையை எதிர்த்து பேசுகிறது இந்தப் படம். அதே சமயம் அன்பைக் காட்டுவதற்கும், அராஜகத்தை எதிர்கொண்டு நிற்பதையும் சொல்கிறது இத்திரைப்படம்.
படத்தின் நாயகன் கெளசிக் சில படங்களில் நடித்திருந்தாலும் இது அவரது நடிப்பின் பரிணாமத்தைக் காட்டும். அதேபோல் அறிமுக நாயகியான குஷ்பு சிங், தமிழ்ச் சினிமாவில் இன்னொரு குஷ்புவாக வலம் வருவார். அந்த அளவுக்கு அவரது அழகும், நடிப்பும் படத்தில் பேசப்படும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், ஊட்டி, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார் இயக்குநர் ஸ்ரீஹரி.