full screen background image

IPC 465-வது செக்சனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘465’

IPC 465-வது செக்சனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘465’

எல்.பி.எஸ்.பிலிம்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் லஷ்மி பிரபு தயாரித்துள்ள படம் ‘465’.

இந்தப் படத்தில் விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’, மற்றும் ‘ஆபீஸ்’ தொடரில் நடித்த  கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியா நிரஞ்சனா நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சில மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்த அனுபவம் கொண்டவர்.

team-4

‘ராட்டினம்’ மற்றும் ‘கோ-2’ படங்களில் பணியாற்றிய பிலிப் R.சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ‘பிச்சைக்காரன்’ மற்றும் ‘சைத்தான்’ படங்களில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஜி.ராஜராஜன் படத் தொகுப்பு மற்றும் கலரிஸ்ட்டாக  பணியாற்றியுள்ளார். மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.

அறிமுக இயக்குநரான சாய் சத்யம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சாய் சத்யமைத் தவிர மற்ற அனைவருமே கலந்து கொண்டனர்.

படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பது குறித்து பேசியவர்கள் முதலிலேயே விளக்கிவிட்டார்கள். ‘465’ என்பது இந்தியன் பீனல் கோடு எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டுகிறதாம்.

இதன்படி படக் குழுவினர் சொல்லும் ‘465-வது செக்சன்’  என்ன சொல்கிறதென்றால், முறைகேடான உடல் அடையாளத்தை மையமாக வைத்து ஒருவருடைய சொத்தை அபகரிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் செக்சன்தான் அது.

அதன்படி பார்த்தால் இறந்து போன ஒருவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு, தான்தான் அந்த நபர் என்று சொல்லி அவருக்குரிய சொத்தை அபகரிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படம் என்பதும் புரிகிறது.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கார்த்திக் பேசும்போது, “டி.வி. சீரியல்கள் மூலம் தமிழகத்து மக்களுக்கு நன்கு அறிமுகமான நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இந்தப் படம் சிறப்பாக  வந்திருக்கிறது.

படத்துக்கு ‘465’ என்று பெயர் வைக்கக் காரணம். அது இந்தியன் பீனல் கோடு எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 465-வது பிரிவைக் குறிக்கும். அந்த செக்சன் அடிப்படையில்தான் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

இனி நான் தொலைக் காட்சித் தொடர்களில் நடிப்பதாக இல்லை. முழுக்க, முழுக்க  சினிமாதான். அதற்கான சூழலை இந்த 465 திரைப்படம் ஏற்படுத்தித் தரும்..” என்றார்  நம்பிக்கையுடன்.

தயாரிப்பு நிர்வாகி அபிலாஷ் பேசுகையில், “இந்தப் படம் முற்றிலும் புதியவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, இசையமைப்பாளர் என்று பலருக்கும் முதல் படம்.

இதுவொரு கிரைம், திரில்லர் கலந்த படம். ஆனால் மிக வித்தியாசமான கதை. அதைவிட சுவாரஸ்யமான திரைக்கதையில் இதனை உருவாக்கியிருக்கிறோம். புதியவர்களைக் கொண்டு சிறப்பான முறையில் படத்தை முடித்திருக்கிறோம். படத்தில் வரும் சி.ஜி.காட்சிகள்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மி பிரபு பேசும்போது, “ஒரு படம் தயாரிப்பது என்று முடிவு செய்திருந்தேன். இதற்காக பலரிடமும், பல கதைகளைக் கேட்டேன். எத்தனையோ கதைகளைக் கேட்டும் திருப்தி வராத நிலையில் இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்ததால் தயாரிப்பில் இறங்கினேன். படத்தில் எல்லாரும் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை தந்துள்ளனர். படம் எல்லோரையும் நிச்சயம் கவரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது..” என்றார்.

Our Score