full screen background image

ஆகஸ்ட் 1-ல் மூன்று முக்கிய படங்கள் மோதல்..! என்ன நடக்கும்..?

ஆகஸ்ட் 1-ல் மூன்று முக்கிய படங்கள் மோதல்..! என்ன நடக்கும்..?

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..!

Karthik Subbaraj3

முதலில் சென்சார் சர்டிபிகேட் வாங்கும் விஷயத்தில் தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபட்டு எதையும் கட் செய்யக் கூடாது என்று வாதிட்டு களைத்துப் போனார்..

இப்போது  ‘ஆடுகளம்’ படத்தில் மிகப் பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்த நன்றிக் கடனுக்காக தனுஷ் கேட்ட ஒரு வார்த்தைக்காக ‘ஜிகர்தண்டா’ படத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திப் போட்டுவிட்டார் தயாரிப்பாளர் கதிரேசன்.

இப்படியொரு முடிவை இன்று மதியம்தான் தயாரிப்பாளர் எடுத்திருக்கிறார். ஆனால் இன்று காலையிலேயே கார்த்திக் சுப்புராஜ் முகநூலில் ‘ஜிகர்தண்டா நிச்சயம் ஜூலை 25-ல் ரிலீஸ்’ என்று உறுதிபட சொன்னார்.. படத்தின் இயக்குநரான அவரிடத்தில்கூட மரியாதைக்காக ஒரு வார்த்தைகூட சொல்லாமல் தயாரிப்பாளர் படத்தை ஒத்தி வைத்ததில் அவருக்கு மனம் கொள்ளா வருத்தம்.. படத்தின் நாயகன் சித்தார்த்தோ தனது மனதில் பொங்கி வந்ததையெல்லாம் டிவிட்டரில் எழுதி தனது கோபத்தைத் தணித்துக் கொண்டார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இருக்கும் இன்னுமொரு சங்கடம்.. கார்த்திக் சுப்புராஜை தமிழ்த் திரையுலகத்துக்கு அடையாளம் காட்டிய ‘பீட்சா’ படத்தைத் தயாரித்த திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.வி.குமாரின் தயாரிப்பில் உருவான ‘சரபம்’ படமும் அதே ஆகஸ்ட் 1-ம் தேதி ரிலீஸாகிறது என்பதுதான்.

Sarabam Movie First Look Poster

தனது மரியாதைக்குரிய முதல் தயாரிப்பாளருடனேயே தனது இரண்டாவது படத்தை மோத வைத்துவிட்டார்களே என்று பெரிய வருத்தத்தில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்..

இதில் இன்னொரு விஷயம்.. நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின், ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ படமும் அன்றைக்குத்தான் ரிலீஸாகவிருக்கிறது.. பார்த்திபன், 2 வருட கடின உழைப்பில் பல நடிகர், நடிகைகளை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறார்.

Kathai-Thiraikathai-Vasanam-Iyakkam-Teaser

இப்போது இந்தப் படமும் ஆக்ஸட் 1 அன்றைக்கே ரிலீஸானால் ரசிகர்கள் வரிசைப்படி பார்த்தால் முதலில் ‘ஜிகர்தண்டா’வுக்கும், அடுத்தது ‘சரப’த்திற்கும் சென்றுவிட்டு கடைசியாகத்தான் ‘கதை, திரைக்கதை வசனம் இயக்க’த்திற்கு செல்வார்கள் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கிசுகிசுவாகச் சொல்கிறார்கள்..

இத்தனை கஷ்டப்பட்டு எடுத்து ரசிகர்களின் கண் பார்வையில் படவில்லையெனில் எல்லாம் வீண்தானே..? இப்படித்தான் சென்ற வாரம் வெளிவந்த ‘இருக்கு ஆனா இல்ல’ படமும் பார்வையாளர்கள் இல்லாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது..!

வாரம் ஒரு படம்தான் பார்ப்பது என்கிற கொள்கையை பல லட்சணக்கணக்கான குடும்பங்கள் தேர்ந்தெடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. இந்த நிலையில் வரக் கூடிய படங்களில் எது நல்ல படம் என்று அவர்களே தீர்மானித்து வருவதுதான் இப்போதும் நடந்து வருகிறது.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் ஓப்பனிங்கை துவக்கி வைத்து, படமும் நன்றாக இருந்தால் அது ஹிட்டாகிவிடும்.. உதாரணம் ‘வேலையில்லா பட்டதாரி’. ரசிகர் படையில்லாத படங்களெனில் மவுத் டாக்கில் பரவி கூட்டத்தைக் கூட்டுவதற்கே செவ்வாய்கிழமையாகிவிடும்.. அதற்குள்ளாக படத்தைத் தூக்கிவிடுவார்கள் தியேட்டர்காரர்கள்.. இந்த குழப்பத்தைச் சரி செய்ய யாராலும் முடியவில்லை..!

இப்போதைய நிலையில் ‘ஜிகர்தண்டா’ படம் ஒரு வாரம் தள்ளிப் போனதில் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பது ‘அரிமா நம்பி’, ‘இருக்கு ஆனா இல்ல’ ஆகிய படங்கள் ஓடும் தியேட்டர்கள்தான்.. இவைகளை மேலும் அடுத்த ஒரு வாரத்துக்கு ஓட்டிக்கலாம் என்று ஓகே சொல்லியிருக்கிறார்களாம்..!

பார்த்திபன் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..?

சினிமாவுலகில் சிலருடைய நஷ்டம், இப்படி சிலருக்கு லாபமாகத்தான் போய்ச் சேரும்..!

Our Score