வரும் பொங்கல் பண்டிகையை கொரோனா ஊரடங்கு உத்தரவுகளோடு கொண்டாடப் போகிறது தமிழகம்.
காணும் பொங்கல் தினமான வரும் ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால் அன்றைக்கு ஏற்கெனவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடத்திய பொங்கல் தினக் கொண்டாடங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்காது.
இதேபோல் சினிமா துறையிலும் இந்த முறை பொங்கல் தினம் சுவாரஸ்யம் இல்லாமல்தான் இருக்கிறது. ஏற்கெனவே இந்த வாரம் வெளியாகியிருக்க வேண்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களுடன் பொங்கலுக்கு வர வேண்டிய ‘வலிமை’யும் ஒத்திப் போடப்பட்டுள்ளதால் இந்தாண்டு பொங்கல் தினம் சினிமா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையெல்லாம் தாண்டி தொலைக்காட்சிகளில் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள்தான் பொது மக்களை கொஞ்சமேனும் விடுமுறை தினத்தைக் கொண்டாட வைக்கப் போகிறது எனலாம்.
சன் தொலைக்காட்சியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் வெளியாகவுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சி சேனலில் அதே 14-ம் தேதி பகல் 1.30 மணிக்கு சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘அரண்மனை-3’ படம் ஒளிப்பாகிறது.
ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு இதே கலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜனவரி 16-ம் தேதி பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஒளிபரப்பாகவுள்ளது.