full screen background image

2020-ம் ஆண்டின் கடைசி வாரமான இன்று 11 தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸ்..

2020-ம் ஆண்டின் கடைசி வாரமான இன்று 11 தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸ்..

வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் தமிழ்ச் சினிமாக்கள் அதிகமாக வெளியாகும். காரணம், பல மாதங்களாக போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் காத்திருந்தும் இனிமேல் காத்திருக்க முடியாது என்கிற விரக்தியில் அத்தனை படங்களையும் இதே டிசம்பர் மாதம் கொண்டு வந்து கொட்டுவார்கள் தயாரிப்பாளர்கள்.

இது கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்படி வருகின்ற அத்தனை படங்களும் சின்ன பட்ஜெட் படங்கள். 30, 40 லட்சத்திற்குள் எடுக்கப்படும் படங்கள்.

இந்தப் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. விநியோகஸ்தர்கள் ஷோக்களை போட்டுக் காட்டினாலும் படம் நன்றாக இல்லை என்றால் இடைவேளையின்போதே சொல்லாமல் எழுந்து போய்விடும் விநியோகஸ்தர்கள்தான் இங்கே அதிகம்.

இது போன்ற படங்களை வாங்குவதற்கும் ஆளில்லை. தியேட்டருக்குக் கொண்டு போனால் அவர்களும் திரையிடுவதற்கு விரும்புவதில்லை. காரணம், சின்ன பட்ஜெட்.. அதிலும் ஊர், பேர் தெரியாத.. அதிகம் அறிந்திராத நட்சத்திரங்களை நடிக்க வைத்திருப்பதால் கூட்டமும் வராது என்று தியேட்டர் அதிபர்கள் நினைப்பதால் தியேட்டர்களும் கிடைக்காது.

இது போன்ற படங்கள்தான் வேறு வழியில்லாமல் இது போன்று கடைசிக் கட்டமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் மான்யம் தந்து கொண்டிருக்கிறது. இந்த மான்யத் தொகையும் சில ஆண்டுகளாகத் தரப்படவில்லை என்பதும் உண்மை.

இந்த நிலையில் ஆண்டு முடிவிலேயே ஒரு படத்தைத் தள்ளிவிட்டால் மானியத் தொகையையாவது சீக்கிரம் வாங்கிவிடலாமே என்றெண்ணிதான் படத் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இறுதியில் படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக குறைந்தபட்சம் தமிழகம் முழுவதும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் பொருட்டு தியேட்டர்களை வாடகைக்கு எடுத்தாவது.. இதற்கே 2, 3 லட்சங்கள் செலவாகும்.. பரவாயில்லை.. 3 லட்சம் போட்டாலும் 7 லட்சம் திரும்பி வரும். 4 லட்சம் லாபம் கிடைக்குமே என்றெண்ணிதான் தியேட்டர்களில் திரையிடுகிறார்கள்.

ஆனால், ஏன்..? எதற்காக..? இப்படி 30, 40 லட்சங்களில் படத்தைத் தயாரித்து கடைசியில் வெளியிட முடியாமல் திணற வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் விடையே கிடைப்பதில்லை.

இந்த வருடக் கடைசி வாரமான இன்றைக்கும் அதே கூத்து நடந்திருக்கிறது.

டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தில், 2020-ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ‘சியான்கள்’, ‘தூங்கா கண்கள்’,’ சித்திரமே சொல்லடி’, ‘உயிர்க்கொடி’,’ மந்திரப் பலகை’, ‘தப்பா யோசிக்காதீங்க’, ‘எங்கள் குல தெய்வம்’, ‘வாங்க படம் பார்க்கலாம்’, ‘சூறாவளி’, ‘எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்’, ‘ஊராட்சி ஒன்றியம்’ என்று 11 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.

இவற்றுடன் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஷகிலா’ என்ற டப்பிங் படமும் இன்று வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படங்களில் ‘ஷகிலா’ படம் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல், ‘சியான்கள்’ மற்று் உயிர்க்கொடி ஆகிய திரைப்படங்கள் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது வாங்கிய திரைப்படங்கள் என்ற முறையிலும், இத்திரைப்படங்கள் பற்றிய பாஸிட்டிவ் பேச்சுக்கள் திரையுலகத்தில் பரவியிருப்பதாலும் இந்தப் படங்களுக்கும் ஒரு கவன ஈர்ப்பு உள்ளது.

இந்த மூன்று படங்களுக்கு மட்டுமே தமிழகமெங்கும் பரவலாக சொல்லிக் கொள்ளும்படியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்துள்ளன. மற்றைய திரைப்படங்களுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன.

வருடா வருடம் இது போன்ற கூத்துக்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் படமெடுக்க வரும் கூட்டமும் குறைவில்லாமல் இருக்கிறது..!

இந்த முரண்பாடான விஷயம்தான் தமிழ்ச் சினிமாவை ஒரு பக்கம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

Our Score