சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் மெகா இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் 3-D தொழில் நுட்பத்திற்கு தியேட்டர்கள் மாற வேண்டியதன் அவசியம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று காலையில் சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடத்தியது.
ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ திரைப்படம் சாதாரண படமாகவும், இன்னொரு பக்கம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்து 3-டி முறையிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் 1000 தியேட்டர்களில் வெறும் 100 தியேட்டர்கள் மட்டுமே 3-டி படங்களை திரையிடும் வசதிகளைக் கொண்டுள்ளன. இந்த 100 தியேட்டர்களில் பெரும்பாலானவை மால்கள் மட்டுமே.
இங்கே பெரும் பணக்காரர்கள் பொழுது போக்கிற்காக வரக் கூடிய இடங்கள் என்பதால் உண்மையான சினிமாவின் ரசிகர்கள் அதிகம் வந்துபோகும் தனி தியேட்டர்களிலும், இதே 3-டி வசதி இருந்தால் நிச்சயமாக இந்த்த் தொழில் நுட்பத்தில் படம் பேசப்படும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது.
இதற்காக போதுமான 3-டி திரையரங்குகளை உருவாக்குவது குறித்தும், ஏற்கனவே இருக்கும் திரையரங்களில் 3-டி வசதி ஏற்படுத்துவது குறித்து பேசுவதற்காகவும் தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் சென்னைக்கு அழைத்து, ஒரு நாள் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான ராஜு மகாலிங்கம்.
இந்தக் கருத்தரங்கில் தரமான 3-டி புரொஜக்டர், திரை மற்றும் 3-டி கண்ணாடிகள் வாங்குவது, மற்றும் அதனை பராமரிப்பது ஆகியவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
துவக்கத்தில் இந்திய அளவில் 4000 திரையரங்குகளுக்கு மேல் கியூப் தொழில் நுட்பம் மூலம் திரைப்படங்களை ஒளிபரப்பி கியூப் சினிமாஸ் நிறுவனத்திலிருந்து ஜானகி சபேசன், சிவராமன் ஆகியோர் முழுக்க, முழுக்க இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரான உபகரணங்களைப் பற்றி விளக்கினர்.
அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், “இந்த ‘2.0’ திரைப்படம் 400 கோடி செலவில் 3-டி தொழில் நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான போஸ்ட் புரொடெக்சன் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட உலகத்தின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாத இறுதியில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி உலகமெங்கும் 10,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்தப் படம் திரையிடப்படும்.
‘பாகுபலி’ வெற்றிக்குப் பின்னர் தமிழ்ச் சினிமாவின் வியாபாரம் உலக அளவில் பரவியுள்ளது. இதனால் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல் ஆங்கிலம், சைனீஷ், ஸ்பானிஸ், கொரியன், ஜப்பான் ஆகிய மொழிகளிலும் திரையிடப்படும்.
தமிழில் 400 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். இதனால் படத்தின் விளம்பரத்தையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் செய்து வருகிறோம். ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்ட நமது ‘2.0’ படத்தின் விளம்பர பலூனைப் பார்த்துவிட்டு சீனாவில் இருந்து விநியோகஸ்தர்கள் மிகவும் ஆர்வமாகப் இந்தப் படத்தைப் பற்றி விசாரித்தார்கள்.
சீனாவில் இருக்கும் 40 ஆயிரம் திரையரங்குகளில் 20 ஆயிரம் தியேட்டர்களில் 3-டி வசதி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 10000 தியேட்டர்களில் வெறும் சில நூறு தியேட்டர்களில் மட்டுமே இந்த 3-டி வசதியுள்ளது.
வருங்கால சினிமா 3-டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வளரும் தொழில் நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சியுடன் திரையரங்குகளும் நகர வேண்டும். இதனால் அனைத்து திரையரங்குகளும் 3-டி தொழில் நுட்பத்துக்கு மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு திரையரங்கு இந்த 3-டி வசதிக்கு தன்னை மாற்றிக் கொள்ள 4 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் அந்தப் படத்தின் தரம் மிகப் பெரிய அளவுக்கு உயர்ந்துவிடும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற கருத்து – பயிலரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதனை முதலில் தமிழகத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு 10 திரையரங்குகளாவது 3-டி தொழில் நுட்பத்துக்கு மாறினால், அது இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்..” என்றார்.
இந்த விழாவில் திரையுலகப் பிரமுகர் திருப்பூர் சுப்ரமணியன் பேசும்போது, “இன்று திரையரங்குகளை நிர்வகிப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். மூன்றாம் தலைமுறையினர். தொழில் நுட்ப மாற்றங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரிப்பவர்கள். ஆகவே, தமிழகத்தில் உள்ள 960 தியேட்டர்களில் குறைந்தது 300 திரையரங்குகளாவது 3-டி வசதி பெறும் என்று நம்புகிறேன்.
அடுத்தாண்டு ஜனவரி 25-ம் தேதி ‘2.0’ வெளியாகும் வேளையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். ‘பாகுபலி’யை வசூலில் மிஞ்சும் படமாக 2.0 இருக்க ஒரு தமிழனாக ஆசைப்படுகிறேன்.. அதற்குத் தகுதியான படமாகத்தான் லைக்கா நிறுவனத்தினர் இதனைத் தயாரித்திருக்கிறார்கள்..” என்றார் நம்பிக்கையோடு..!